மகளிர்மணி

ஸ்கைப் மூலம் நடனம் கற்று அரங்கேற்றம் செய்தவர்!

தினமணி

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார் தமிழரான குமார் மல்லிகார்ஜுனன். அவரது மகள் வித்யாவுக்கு சிறுவயது முதல் பரதநாட்டியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ஸ்கைப் முறையில் பரதநாட்டியம் கற்று சமீபத்தில் சென்னை வந்து அரங்கேற்றமும் செய்துள்ளார். இது குறித்து வித்யா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"அப்பாவின் பணி காரணமாக நாங்கள் அமெரிக்காவில் உள்ள பிளாக்பர்க் வெர்ஜினியா நகரத்தில் வசித்து வருகிறோம். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அங்கே தான். வெளிநாட்டில் இருப்பதால் நான் நமது தமிழ் கலாசாரத்தை இழந்து விடுவேனோ என்று அம்மாவுக்கு பயம். மேலும், தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எனக்கு முறைப்படி வாய்ப்பாட்டும், பரதமும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை.

இந்நிலையில் அப்பாவிடம் படிக்கும் இந்திய மாணவிக்கு பரதம் தெரிந்திருந்தது. அவரிடம் பரதநாட்டியம் அடிப்படையை கற்றேன். பிறகு அவர் படிப்பு முடிந்து சென்றுவிட்டார். பின்னர், அப்பாவிடம் படிக்க தமிழர்கள் யார் வந்தாலும், அவர்களிடம் பரதம் தெரியுமா என்று கேட்பதை அப்பா வழக்கமாக வைத்திருந்தார். அப்படி பரதம் தெரிந்திருந்தால் அவர்களுக்கு எங்கள் இல்லத்தில் மாடி அறையில் தங்க இடம் கொடுத்து, அவர்களிடம் எனக்கு பரதம் சொல்லிக் கொடுக்கச் செய்வார்.

இப்படி பல குருவிடம் நான் சிறு வயது முதல் அடிப்படை பரதம் கற்றுக் கொண்டேன். பரதம் அடுத்தகட்டத்தை நோக்கி செல்ல செல்ல எனக்கும் ஆர்வம் அதிகரித்தது. மேற்கொண்டு யாரிடமாவது முறையாக நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இதனால் அப்பாவும், அம்மாவும் தீவிரமாக தெரிந்தவர்களிடம் எல்லாம் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று விசாரித்தனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு நாங்கள் இருக்கும் ஊரில் இருந்து மூன்றரை மணி நேர பயணத்தில் இருக்கும் பக்கத்து ஊரில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீதேவி ஜெகநாதன் என்பவர் நடனம் கற்றுத் தருவதாக அறிந்து அவரை சென்று சந்தித்தோம். நாங்கள் ஏதோ சிறியளவில் நடனம் கற்று தருபவராக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் அங்கு சென்றதும் தான் தெரிந்தது, அவர் பெரியளவில் நடனப் பள்ளி வைத்து நடத்தி வருகிறார் என்பது. அந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர். அதைப் பார்த்து நாங்கள் பிரமித்து போனோம்.

அவர் எனக்கு நடனத்தில் எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை சோதிக்க சில தேர்வுகள் வைத்தார். பின்னர், நடனத்தில் எனக்கிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு எனக்கு நடனம் சொல்லிக் கொடுக்க ஒத்துக் கொண்டார்.

சனிக்கிழமை கிளம்பி சென்று அங்கேயே தங்கி பயிற்சி பெற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்புவோம். இவ்வாறாக சில மாதங்கள் கடந்த பிறகு, நாங்கள் படும் சிரமத்தை அறிந்து எனது குரு, "இனி ஸ்கைப் மூலம் பயிற்சியளிக்கிறேன்' என்றார்.

அதன்பிறகு வாரத்தில் இரண்டு நாள்கள் ஸ்கைப் மூலம் பயிற்சி பெற ஆரம்பித்தேன். எனக்கு பயிற்சி அளிக்கும் அதே நேரத்தில் அங்கே எனது தோழிகள் 12 பேருக்கும் சொல்லிக் கொடுப்பார். இதன் மூலம் நடனப் பள்ளி தோழிகளுடன் சேர்ந்தே கற்றுக் கொள்வது போன்ற உணர்வும் இருந்தது.

ஸ்கைப் மூலம் கற்றுக் கொள்வதில் சிரமம் என்னவென்றால் முத்திரை, பாவம் போன்றவற்றை நேரில் பார்த்து கற்றுக் கொள்வதற்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதனால் நான் ஒவ்வொரு முத்திரை செய்யும்போதும், பாவம் காட்டும்போதும் பலமுறை என் குருவிடம் நான் செய்வது சரியா என்று கேட்டுக் கொள்வேன். பின்னர், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நேரில் சென்று முத்திரை, பாவங்களையும் திருத்திக் கொள்வேன்.

தற்போது என் அரங்கேற்றத்தை இந்தியா வந்து சென்னையில்தான் நடத்தினோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அரங்கேற்றம் முடிந்ததும் என் குரு எங்கள் குழுவை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்று நாட்டியம் ஆட வைத்தார். அங்கே மேடை எதுவும் இல்லாமல், சாமி முன்பு ஆடிய அந்த நடனம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வருங்காலத்தில் இதுபோன்று கோயில்களில் நிறைய ஆட வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டுள்ளது.

நான் அரங்கேற்றத்திற்கு முன்பு அமெரிக்காவிலேயே நிறைய மேடை நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கிறேன். அங்கே இந்திய மாணவர்கள் அமைப்பு இருக்கிறது. அதில் அப்பா ஆலோசகராக இருப்பதால், தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு போன்ற தமிழகத்தின் முக்கிய விழாக்களை அங்கே கொண்டாடி வருகிறோம். அதில் கலை நிகழ்ச்சிகளும் இருக்கும். அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாமல் நானும் கலந்து கொண்டு ஆடி வருகிறேன். அதுபோன்று எங்கள் பகுதியில் அவ்வபோது தெருவில் டான்ஸ், பாட்டு என்று ஸ்டிரீட் புரொகிராம் நடத்துவார்கள், அதிலும் கலந்து கொள்வேன்.

மேலும், எங்கள் நடனப்பள்ளியில் ஆண்டு தோறும் ஆண்டுவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதிலும் கலந்து கொண்டு ஆடி வருகிறேன். இதனால் மேடை நிகழ்ச்சிகளின் வாய்ப்பும் கிட்டி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. ஆனால் பேசுவதை புரிந்து கொள்வேன். இதனால் நாட்டியத்துக்கான பாடல்களை தேர்வு செய்யும்போது, அம்மா, அப்பா எனது குரு மூவரின் ஒத்துழைப்புடன் பாடல் வரிகளை ஒவ்வொரு வரியாக கேட்டு அர்த்தம் புரிந்து ஆடுவேன். நாட்டியத்தின் அடுத்தகட்டமாக நட்டுவாங்கம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையிருக்கிறது. வருங்காலத்தில் நிச்சயமாக கற்றுக் கொள்வேன்'' என்றார் வித்யா.

- ஸ்ரீ தேவி குமரேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT