முகப்பு
மகளிர்மணி

சிறைக் கைதிகளுக்கு தியானப் பயிற்சி!

புழல் சிறை கைதிகளுக்குத் தியானம் சொல்லித்தருவது, பகவத் கீதை வகுப்பு எடுப்பது என தனது பிஸியான சூழலிலும் தன்னால் முடிந்த சமூக சேவையைச் செய்து வருகிறார் நடிகை குட்டி பத்மினி.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:00 PM
பகிர்:

புழல் சிறை கைதிகளுக்குத் தியானம் சொல்லித்தருவது, பகவத் கீதை வகுப்பு எடுப்பது என தனது பிஸியான சூழலிலும் தன்னால் முடிந்த சமூக சேவையைச் செய்து வருகிறார் நடிகை குட்டி பத்மினி. மேலும், சுயசரிதைப் புத்தகம் ஒன்றையும் எழுதிவருகிறார். இது குறித்து அவர் கூறியது:

சிறைக் கைதிகளுக்கான தியானப் பயிற்சி, பகவத் கீதை வகுப்பு எடுப்பது இந்த எண்ணம் எப்படி தோன்றியது?

ஏதோ வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்துவிட்டு, தினம் தினம் அதனை நினைத்து மனம் குமைந்து கொண்டிருக்கும் சிறைக்கைதிகள் எப்போதும் அமைதியற்ற நிலையிலேயே இருப்பார்கள். அவர்களுக்கு தியானம் மூலம் மன அமைதியடைய செய்யலாமே என்ற எண்ணம் வர, அதற்கான முறையான அனுமதி பெற்று தியானப் பயிற்சி அளித்து வருகிறேன். அவர்களின் மன அமைதிக்காக என்னால் முடிந்த சிறிய பங்களிப்பு. அதன் அடுத்த கட்டமாகத்தான் பகவத் கீதை வகுப்பும். இதன் மூலம் அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து திரும்பும்போது, ஓர் அமைதியான வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

சுயசரிதை தற்போது எந்த நிலையில் உள்ளது?

கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன். நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இதுவரை நான் கடந்து வந்த பாதையில் இருந்த ஏற்ற இறக்கங்கள் அத்தனையும் என் சுயசரிதையில் எழுதியிருக்கிறேன். சிவாஜி, எம்.ஜி.ஆர், சாவித்திரி, ஜெயலலிதா உள்ளிட்ட ஜாம்பவான்களும் என் புத்தகத்தில் கடந்து போவார்கள். இதில், நான் இதுவரை எனக்குக்கிட்டிய அனுபவங்களை உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறேன். பெயரில்லாமல் எழுதுவது, சிலவற்றை மறைத்து எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. சுயசரிதை என்பது உண்மையை எழுதுவதுதானே? இதனால், எனது மறைவுக்கு பிறகே புத்தகத்தை வெளியிடச் சொல்லி என் மகளிடம் கூறியுள்ளேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.