ஒரு மாதம் காபிக்கு சொல்லுங்கள் "நோ'!
காலையில் காபி அல்லது டீயுடன்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடியும். காபி, டீ, பழச்சாறு, குளிர்பானங்கள் என ஏதாவது ஒன்று இல்லாமல் பலரால் இருக்க முடியாது.
காலையில் காபி அல்லது டீயுடன்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடியும். காபி, டீ, பழச்சாறு, குளிர்பானங்கள் என ஏதாவது ஒன்று இல்லாமல் பலரால் இருக்க முடியாது. ஆனால் இவற்றை எல்லாம் தவிர்த்து தண்ணீர் மட்டும் குடிப்பதால் உடலினுள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
ஒரு மாதம் காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்துப் பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என்கின்றனர் நிபுணர்கள். நீரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்: தண்ணீரை அதிகமாகக் குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுகள் முற்றிலும் வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்பட்டால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.
கலோரிகள் குறையும்: ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300 முதல் 500 கலோரிகளை எடுப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறையும்.
மூட்டுகள் ஆரோக்கியமடையும்: உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்துக்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.
ஆரோக்கியமான இதயம்: தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, ரத்தஓட்டத்தைச் சீராக வைத்து, ரத்தஅழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்னைகள் வருவது குறைவதாக மருத்துவ நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
முதுமை தடுக்கப்படும்: தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, மதுவுக்கு "நோ' சொல்லிப் பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்னைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாள்கள் இருக்கும்.
"ஆரோக்கியம் உங்கள் கையில்' என்ற நூலிலிருந்து.