மகளிர்மணி

காற்றில் கரைந்த மயில்!

தினமணி

நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பெருமையை ரசிகர்களிடமிருந்து பெற்றுவிடலாம். ஆனால் ஒரு நடிகை சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை சுலபமாக பெற முடியாது. கமல், ரஜினியுடன் பல வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீதேவி, மொழியே தெரியாமல் இந்தி திரையுலகில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டாராக விளங்கியது ஒரு சாதனையாகும்.
 உடை அணிவதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தனக்கென்று தனிபாணியை கடைபிடித்து வந்த ஸ்ரீதேவி, இளம்பெண்களுக்கிடையே ஒரு மாடலாக விளங்கி வந்ததோடு, ஆண் ரசிகர்களுக்கும் "கனவுக்கன்னி' யாக விளங்கினார். 1963 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி சிவகாசி அருகில் மீனம்பட்டியில் பிறந்த ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதிலேயே நடிக்க துவங்கினார். பின்னர், கே. பாலசந்தரின் "மூன்று முடிச்சு' படத்தில் 13 வயதில் நாயகியாக அறிமுகமானார். அதையடுத்து 14 வயதில் நடித்த பாரதிராஜாவின் " பதினாறு வயதினிலே' படம் அவருக்கு புகழ் சேர்த்தது. கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைத்தவுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிலும் நடிக்கத் துவங்கினார். தமிழை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்திருந்தாலும் ரஜினியுடன் 22 படங்களும், கமலுடன் 27 படங்களிலும் நடித்துள்ளார்.
 1979 - ஆம் ஆண்டு "பதினாறு வயதினிலே' படத்தின் இந்தி பதிப்பான "சால்வா சவான்' படத்தின் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்த இவர். சிறிது இடைவெளிக்குப் பின் 1983-ஆம் ஆண்டு ஜிதேந்திராவுடன் ஜோடியாக நடித்து வெளியான " ஹிம்மத்வாலா' பெரும் வெற்றி பெறவே இந்தி திரையுலகம் இவரை அரவணைத்தது. நிலையான இடமும் கிடைத்தது. ஜிதேந்திராவுடன் சேர்ந்து நடித்த 16 படங்களில் 13 படங்கள் வெற்றி பெறவே "முதல் பெண் சூப்பர் ஸ்டார்' என்ற சிறப்பைப் பெற்றார். பல முன்னணி ஹீரோக்களே இவரது வளர்ச்சி கண்டு கதி கலங்கினர்.
 "மிஸ்டர் இந்தியா' படத்தைத் தயாரித்தவரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, ஜான்வி மற்றும் குஷி என்று இரு மகள்களுக்கு தாயானார். பின்னர் நடிப்புத்துறையிலிருந்து விலகியிருந்தார். 2012 -ஆம் ஆண்டு "இங்கிலீஷ் - விங்கிலீஷ்' படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். "மேம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க தன்னுடன் நடித்த பிரபல தமிழ் நடிகர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அந்தப் படத்தில் அவருடன் அதுவரை நடித்திராத அஜித் நடித்துக் கொடுத்தார்.
 இவர் விஜய்யுடன் நடித்த "புலி' தமிழில் இவரது கடைசி படமாகும். தற்போது ஷாருக்கானுடன் நடித்து முடித்துள்ள "ஜீரோ' இவரது கடைசி படமாகும். 2015-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுபெற்ற ஸ்ரீதேவிக்கு தேசிய அளவிலான சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கவில்லை. இது குறித்து அவர் வருத்தப்பட்டதும் இல்லை. இவரது மரணம் பல்வேறு சந்தேங்களை எழுப்பி வந்தாலும், திரையுலகம் ஒரு திறமையான நடிகையை இழந்துவிட்டது என்பது மட்டும் உண்மை!
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT