என் பிருந்தாவனம்!
""இதோ பாருங்க, நான் ஒன்னும் உங்க பொண்ண கடத்திட்டுப் போயோ, காதலிச்சோ கட்டிக்கிடல நியாயமான முறையில நாலுபேர கூட்டிட்டு வந்து பொண்ணுகேட்டுத்தேன் கட்டினோம்
மகளிர்மணிஎன் பிருந்தாவனம்!
""இதோ பாருங்க, நான் ஒன்னும் உங்க பொண்ண கடத்திட்டுப் போயோ, காதலிச்சோ கட்டிக்கிடல நியாயமான முறையில நாலுபேர கூட்டிட்டு வந்து பொண்ணுகேட்டுத்தேன் கட்டினோம்
""இதோ பாருங்க, நான் ஒன்னும் உங்க பொண்ண கடத்திட்டுப் போயோ, காதலிச்சோ கட்டிக்கிடல நியாயமான முறையில நாலுபேர கூட்டிட்டு வந்து பொண்ணுகேட்டுத்தேன் கட்டினோம், நீங்களும் சம்மதிச்சிதேன் பொண்ணக் கொடுத்தீக அது முதல்ல உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்''.
"" நான் ஒரு பெரிய முட்டாள்தனம் செஞ்சிட்டேன் அன்னைக்கே என் மகளுக்கான எல்லா வசதியும் உங்க வீட்டுல இருக்கான்னு கேட்டிருக்கணும் அப்படி கேக்காதது என் தப்புத்தான். நான் செஞ்ச இந்த தப்புக்காக என் பொண்ணு இப்ப கஷ்டப்படுறா'' என்று சொல்லி குமுறினார்.
""நாங்களும் இந்தமாதிரிப் பிரச்னையெல்லாம் வருமின்னு எதிர்ப்பாக்கல. பட்டிக்காட்டு மாப்பிள்ளைன்னு தெரிஞ்சும் கல்யாணத்துக்கு சம்மதிச்சப் பொண்ணு எல்லாத்தையும் அனுசரிச்சுப் போவான்னுதேன் நினைச்சோம். இப்படி வந்து என்ன கேவலப்படுத்துவான்னு தெரியாது'' என்றான் தங்கராசு.
""சரி.. சரி.. மாமனும், மருமவனும் இப்படி நடந்ததையே பேசிக்கிட்டு இருக்காம, இனிமே என்ன செய்யலாமின்னு யோசிச்சுப் பேசுங்க'' என்றாள் அபிராமி.
""இப்ப அதைப்பத்தியெல்லாம் யோசிக்க நேரமில்லை எனக்கு ஊருக்குப் போயாகணும் போய்ட்டு வாரேன்'' என்றவனை தடுத்து நிறுத்தினாள் அபிராமி.
""அதென்ன மாப்பிள்ள மறுவீடு முடிஞ்ச மறுநாளே கட்டுன பொண்டாட்டிய கூட்டியாந்து விட்டுட்டு உடனே ஊருக்குப் போனா என்ன அர்த்தம்? மறு வீட்டுக்கு மறுநாளு மாமியார் வீட்டுக்கு வந்தா ஒரு நாளு தங்கிட்டுதான் போவணும்'' என்றதும் தங்கராசு பதறினான்.
""அய்யய்யோ காட்டுல பத்து ஆளுங்க வரை வேல பாத்துட்டு இருக்காங்க நானு போயே ஆகணும்'' என்று அவன் விட்டால் போதுமென்று ஓடும் எண்ணத்தில் பர, பரத்துக் கொண்டிருந்தான்.
""இத்தனை நேரமும் கேவி, கேவி அழுதவாறே இவன் மீதும், இவன் ஊர் மீதும் குற்றங்களை சொல்லிக் கொண்டிருந்த கௌசி இப்போது மென்மையான குரலில், ""அம்மா தங்கராசு காலையிலிருந்து சாப்பிடவேயில்ல பட்டினியாதான் இருக்கிறாரு'' என்று சொல்ல அபிராமி திடுக்கிட்டாள்.
""ஏன் கௌசி. அவர் சாப்பிடலங்கிறத வந்த உடனே நீ சொல்ல வேண்டாமா? போகட்டும் கட்டுனப் புருஷன பேர் சொல்லியா நீ கூப்பிடுற''
"" என் சிநேகிதிங்க எல்லாம் அப்படித்தாம்மா கூப்பிடுறாங்க''
"" அவங்க கூப்பிட்டா நீயும் கூப்பிடுவயா? நானு ஒருநாளாவது உங்கப்பா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுருப்பேனா?''
""நீங்க அந்தக் காலத்து ஆளுங்க''
""எந்த காலத்து ஆளுகளா இருந்தாலும் ஒரு குடும்பம்ங்கிறது , குடும்பம்தான அந்தக் காலத்தில அண்ணனா இருந்தவங்க, அப்பா, அத்தையா இருக்கிறவங்க எல்லாம் இந்தக் காலத்துக்கு முறைமாறிப் போயிருவாங்களா? இப்பத்தான் தெரியுது மாப்பிள்ளை தங்கக் குணமின்னு இல்லாட்டி நீ பேர் சொல்லி கூப்பிடறதுக்கு வேற ஒருத்தருன்னா உன் கன்னத்தில நாலு அறை, அறைஞ்சிருப்பாங்க'' என்று அபிராமி சொன்னதும், பயத்தோடு தங்கராசுவைப் பார்த்துக் கொண்டே தன் கன்னத்தை தடவினாள். அப்போது தங்கராசு தன் கன்னத்தில் முத்தமிட்டது ஞாபகம் வரவே தன் பக்கத்தில் நிற்கும் கணவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வெட்கி சிவந்தாள்.
தங்கராசு அவள் பார்வையில், தடுமாறிப் போனான். சற்று முன்பு வரை விக்கலும், விம்மலுமாய் அழுதவள், தன்னை இந்தப் பார்வை பார்க்கிறாள்.
மகளைக் கண்டதுமே இவனை ஏறிட்டுக் கூடப் பார்க்காத மாமியார், தங்கக் குணம் என்கிறாள். இது ஒருமாதிரியான குடும்பமோ என்று நினைத்தவனுக்கு எப்படி இவர்களை விட்டு தப்பிக்க போகிறோம் என்று பயமே வந்துவிட்டது.
""கௌசி உன் மாப்பிள்ளை சாப்பிடலேன்னா, நீயும் தான சாப்பிட்டுருக்கமாட்டே'' என்று கவலையுடன் கேட்டாள் அபிராமி.
""ஆமாம்மா.. ஆனா நானாவது காப்பி குடிச்சேன் அவரு அதுகூட குடிக்கல'' என்றாள்.
""இரண்டுபேரும் சேர்ந்து இப்படி பட்டினி கிடப்பீகளா? அய்யோ இந்த அநியாயத்தைப் போயி நானு எங்க சொல்லுவேன்'' என்றவள், இவனிடம் திரும்பி, ""மாப்பிள்ள வீட்டுக்குள்ள வாங்க'' என்று கூப்பிட்டாள்.
""இல்லத்த நானு ஊருக்குப் போயே ஆகணும் தயவு செஞ்சு என்ன வற்புறுத்தாதீங்க'' என்றான்.
""இப்படியே நீங்க போனீங்கன்னு வச்சுக்கோங்க இந்தத் தெருக்காரர்கள்ல்லாம் நமக்குள்ள ஏதோ பிரச்னையின்னு கூடி, கூடிப் பேசி எங்க குடும்பத்த நாறடிச்சிருவாங்க. சத்தமின்ன, நீங்க ஜோடியா வந்ததையும், கௌசி என் மார்புலயும், அவுக அப்பா மார்புலயும் சாஞ்சி அழுததையும் இந்தத் தெருவே வேடிக்கப் பார்த்துச்சி, நீங்களும் இந்த குடும்பத்த சேர்ந்தவங்கதான். எங்க குடும்பத்துல உங்களுக்கும் பங்கு இருக்கு அதனால நம்ம குடும்பமானந்தான் சிரிப்பா சிரிக்கும் உங்க கால்ல வேண்ணாலும் நான் விழுறேன் மாப்பிள்ள இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ராத்திரிக்கு தங்கிட்டுப் போங்க'' என்று சொன்ன அபிராமி , சொன்னதோடு நிற்காமல் அவனை நெருங்கியும் வந்தாள்.
நெருங்கி வருகிறவள் எங்கே தன் காலில் விழுந்து விடுவாளோ? என்று பதறி விலகிய தங்கராசு, ""சரி அத்த இன்னைக்கு ஒருநாள் மட்டும் இருந்துட்டுப் போறேன்'' என்றான்.
இதுவரையில் உம்மென்று வெறித்த முகத்தோடு நின்றிருந்த அவனின் மாமனார் கனகராசு, ""சரி மாப்பிள்ள வீட்டுக்குள்ள போங்க, எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு'' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார் சாந்தமான முகத்தோடு.
தங்கராசுவுக்கும் வேறு வழி தெரியவில்லை இத்தனை கெடுபிடி, புடிக்கிறவர்களை மீறி நாம் ஊருக்குப் போனால் நன்றாக இருக்காது என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே..
""அம்மாவும், அப்பாவும் இவ்வளவு சொன்னப்பிறகும் எதுக்காக வெளியே நிக்கிறீங்க'' என்று அவன் கைகளோடு தன் கைகளைப் பின்னியவாறு வீட்டிற்குள் கூட்டிக் கொண்டு போனாள் கௌசிகா.
அவளின் பிடியில் தங்கராசு உடம்பிற்குள் ஆனந்த சிலிர்ப்பு காட்டு
வெள்ளமாய் ஓடியது.
அறைக்குள் வந்ததும், கௌசிகா அவனை குளிக்க வற்புறுத்தியபோது, அவன் மறுத்தான். எப்போதும் அவனுக்கு கிணற்றில் குளித்துதான் பழக்கம்.
அதனால் கௌசிகா காட்டிய பாத்ரூம்பைப் பார்த்ததும் அவனுக்கு குளிக்கும் ஆசையே விட்டுப்போனது.
பாத்ரூம்பிற்கு கூட்டி வந்த கௌசிகா செல்லமாய் அவனை ஒரு இடி இடித்தாள்.
"என்ன பார்த்துக்கிட்டுருக்கீங்க. அந்தப்பக்கம் கக்கூசும், பாத்ரூமும் இருக்கு குளிச்சிட்டு வாங்க'' என்றாள்.
""எனக்கு குழாயில தண்ணிப் பிடிச்சி குளிச்சே பழக்கமில்ல. அதோட தண்ணிய போனியில மோந்து ஊற்றி குளிக்கவும் மனசில்ல''.
""ஏன் குழாயிலப் பிடிக்கிறீங்க. இதோ ஷவர்பாத் இருக்கே அதுல குளிங்க, நீர் வீழ்ச்சியில குளிச்சமாதிரி இருக்கும்'' என்று சொல்லியபடி, ஷவரையும் திறந்து விட்டாள்.
பாத்ரூம் அருகில் நின்றவனை செல்லமாய் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் ஷவரில் தள்ளிவிட்டாள். தங்கராசுவிற்கு நிஜமாகவே அருவியில் குளித்தது போன்று உடம்புக்குள் சிலு, சிலுத்து அவனை பரவசப்படுத்தியது. உடனே பக்கத்தில் நின்ற கௌசிகாவை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
""என்னங்க நீங்க'' என்று செல்ல கோபத்தோடு சொன்னாலும் கூட , கௌசிகா அவனோடு பம்மிக் கொண்டாள். தங்கராசு இந்தமாதிரி சந்தோஷத்தை எப்போதும் அனுபவித்தவன் இல்லை. கௌசிகாவை நினைக்கையில் அவனுக்கு சந்தோஷமாயிருந்தது.
தன்வீட்டில் தன்னிடம் கூட ஒதுக்கத்தோடு கூசி, கூடிப் பழகினவள், இப்போது எந்தக் கூச்சமுமே இல்லாமல் எவ்வளவு தாராளமாக பழகுகிறாள். அவள் முகம் கூட இங்கு வந்ததில் புதுசா பூத்த பூ மாதிரி மாறிப்போச்சே என்று நினைத்தான் தங்கராசு.
இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு அவர்களுக்கென்று தயாரான படுக்கை அறைக்கு வந்திருந்தான் தங்கராசு.
கட்டில் முழுக்கப் பூ சிதறிக்கிடக்க பூவாசம் நெஞ்சை அள்ளியது. வித, விதமான பழங்கள், தட்டு நிறைய அடுக்கியிருந்தது. அறையை அழகாக மாக்கோலமிட்டு அலங்கரித்திருந்தார்கள். இந்த மாதிரி அலங்கார அறைகளை தங்கராசு பார்த்ததே இல்லையாதலால் பிரமித்துப் போனான்.
- தொடரும்