கரோனா... இந்த வார்த்தை உலகையே இன்று அச்சுறுத்தி வருகிறது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர யாரும் வெளியே தலை காட்டக்கூட முடியாத அளவுக்கு கரோனாவின் தாக்கம் பரவியுள்ளது. எதற்கும் அஞ்சாதவர்கள் என மார்தட்டியவர்கள் கூட கரோனா என்ற வார்த்தையைக் கேட்டு தலைமறைவாகும் நிலை காணப்படுகிறது. கரோனாவைக் கண்டுஅகில உலகமும் அஞ்சி நடுங்கிவரும் நிலையில், கரோனா தடுப்புப் பணியில் மகளிர் பெரும்பாலானோர் ஈடுபட்டிருப்பது வியப் பையே அளிக்கிறது.
பாரதி கண்ட புதுமைப் பெண்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு சமைத்து ஆதரவற்றோர், அயலூர்க்காரர்களுக்கு பரிமாறுவது முதல், ஊர்களை கரோனா தொற்று தாக்காத வகையில் வேப்பிலை சாறு தயாரித்து தெளிப்பது வரை அனைத்து பணிகளிலும் அயராது ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு, பகலாக உணவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் 12 மகளிர் சுய உதவிக் குழுவினர். அவர்கள் காலையில் 500 பேருக்கும், மதியம் 300 பேருக்கும், இரவில் 250 பேருக்கும் என இடைவிடாது சமையல் செய்து பரிமாறிவருகிறார்கள். குறைந்த விலையில் தரமான உணவை தயாரித்து வழங்கும் இந்த அம்மா உணவக மகளிர் குழுவினர் சாப்பிடக் கூட நேரமின்றி உழைத்து வருவதாகக் கூறும் "குறிஞ்சி' மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவர் வல்லிக்கண்ணு மேலும் கூறுகையில்; ""அடுத்தவர் பசியைப் போக்கும் வகையில் சாப்பாட்டை பறிமாறி விட்டு அவர்கள் அதை சாப்பிட்டு அடையும் மகிழ்ச்சியைக் காணும்போது ஏற்படும் இன்பம் இருக்கிறதே அடடா.. அதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது'' என்று புள காங்கிதம் அடைகிறார்.
கரோனா தடுப்புப் பணியில் தனி மனுஷிகளாகக் களமிறங்கியிருக்கிறார்கள் ராமநாதபுரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த நதியா மற்றும் பரமேஸ்வரி. இருவரும் தையல் கலைஞர்கள். இவர்கள் கரோனா பரவலில் இருந்து பொது வெளியில் காப்பாற்றும் துணி முகக் கவசங்களைத் தைத்து குறைந்த விலையில் கொடுத்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அதிகமாக உள்ள நிலையில், அனைவருமே முகக்கவசம் அணிய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ரூ.3 என விற்ற முகக்கவசம் தற்போது ரூ.100 என விற்கப்படுகிறது. ஆனாலும், முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால், துணிகளில் நதியா, மகேஸ்வரி இருவரும் தைக்கும் முகக்கவசங்கள் மிகமிகக் குறைந்த விலையிலே விற்கப்படுகிறது. அவர்களது சேவையைப் பார்த்த ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகமே தங்களது சுகாதாரப் பணியாளர்களுக்கான முகக்கவசத்தை இவர்களிடமே தைத்து வாங்கியுள்ளது என்பதே அவர்களது பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
நகரில் உள்ள மகளிர் இப்படி ஆளாளுக்கு முடிந்த அளவு கரோனா தடுப்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் அருகேயுள்ள தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள பள்ளப்பச்சேரி பெண்களோ ஒரு படி மேலே போய் வேப்பிலை கொழுந்தை பறித்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அண்டா அண்டாவாக தினமும் கிருமி நாசினி தயாரிக்கின்றனர்.
மகளிர் தயாரித்த கிருமி நாசினியை மருந்து தெளிக்கும் சாதனங்கள் மூலம் ஊர் முழுவதும், தெருக்கள் தோறும், வீடுகளின் முற்றத்தில் தெளித்து வருகின்றனர். இந்தப் பணியில் முழுக்க முழுக்க கிராமத்து மகளிர் குழுவினர் அனைவரும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
சக்தியின் வடிவங்களாக பெண்களை போற்றி பெருமைப்படுவது பாரதத்தின் பண்பாடு. அந்த வகையில் ஆபத்து காலத்தில் நம்மைக் காக்கும் சக்திகளாக... கிராமத்து தெய்வங்களாக மகளிர் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.