முகப்பு
மகளிர்மணி

சமையல்! சமையல்!

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். முக்கால் பாகம் வதங்கியவுடன் சதுர துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

குடமிளகாய் புலாவ் சாதம்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி சாதம் : 3 கிண்ணம்
குடமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
மசாலாவுக்கு:
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி தழை - சிறிது
புதினாத் தழை - சிறிது

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். முக்கால் பாகம் வதங்கியவுடன் சதுர துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா தழையுடன் மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துச் சேர்த்து வதக்கவும். பின்னர், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி 1 நிமிடம் மூடிவிடவும். பின்னர், வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசி சாதம், கொத்துமல்லித் தழை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும். சுவையான குடமிளகாய் புலாவ் சாதம் தயார்.

சோயா புலாவ் சாதம்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம்
சோயா பீன்ஸ் - கால் கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
கொப்பரை தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லித்தழை - சிறிது

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன், பட்டை, கிராம்பு தாளிதம் செய்து, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் 3 கிண்ணம் தண்ணீர் சேர்த்து களைந்து வைத்துள்ள அரிசியைப் போட்டு முக்கால் பதம் வரை வேகவிடவும். பின்னர், வேக வைத்த சோயாவை சேர்த்து கிளறவும். இறக்கும்போது மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

பனீர் புலாவ் சாதம்

தேவையானவை:

பனீர் துண்டுகள் - 1 கிண்ணம்
பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம்
பச்சை பட்டாணி - அரை கிண்ணம்
உருக்கிய நெய் - கால் கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
கரம் மசாலா - அரை மேசைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் - 3
தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை: நான்-ஸ்டிக் வாணலியில், அளவாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் பனீர் துண்டுகளை சிறிது சிறிதாகப் சேர்த்து, கலர் மாறும் வரை பொரித்தெடுக்கவும். பனீரைப் பொரித்தெடுத்த பிறகு அந்த எண்ணெய்யில் - 1 குழிக்கரண்டி அளவு குக்கரில் ஊற்றி காய்ந்தவுடன், வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பூண்டு, பச்சைமிளகாய், கரம் மசாலா சேர்த்து, அரிசியைப் போட்டு, 2 நிமிடம் கிளறி, வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து தண்ணீர் 2 கிண்ணம் ஊற்றி, உப்பு சேர்த்து மூடிவிடவும் 2 வீசில் வந்தவுடன் இறக்கி ஆறியவுடன் மூடியைத் திறந்து, மிளகுத்தூள், எண்ணெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி, ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, தீயைக் குறைத்து அதன் மேல் 10 நிமிடம் தம்மில் வைக்கவும். பிறகு சூடாகப் பரிமாறவும்.

கொத்துமல்லி, தேங்காய்ப்பால் சாதம்

தேவையானவை:

அரிசி - 1 கிண்ணம்
கெட்டியான தேங்காய்ப்பால் - ஒன்றரை கிண்ணம்
தேங்காய்ப் பால்(இரண்டாம் பால் ) - 2 கிண்ணம்
கொத்துமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: ஊறவைத்த அரிசியை குக்கர் பாத்திரத்தில் போட்டு தேங்காய்ப்பால் ( இரண்டாம் பால்) விட்டு, தண்ணீர் மூன்றரை கப் விட்டு உப்பு சேர்த்து, சாதம் வேக வைக்கும் முறையில் தயார் செய்யவும். பின்னர் சாதத்தை ஓர் பாத்திரத்தில் மாற்றிவிட்டு அரை கிண்ணம் வெந்நீர் சேர்த்து, கொத்துமல்லித்தழையைச் சேர்த்து லேசாக கிளறவும். பின்னர், வேக வைத்த சாதத்துடன் கெட்டியான முதல் பாலை ஊற்றி( ஊற்றும் போது சாதத்தை கிளறிக் கொண்டே இருக்கவும்) குறைந்த தீயில் 5 முதல் 10 நிமிடம் வரை கிளறி இறக்கவும். சுவையான கொத்துமல்லி, தேங்காய்ப்பால் சாதம் தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →