முகப்பு
மகளிர்மணி

எதிர்பாராத  திருப்பம்!

தமிழில்  முதன்முதலாக  "மன்மதன்'  படத்தில்  ஒரு நடன காட்சியில்  நடித்த மந்த்ரா பேடி, 13 ஆண்டுகளுக்குப் பின்னர்  ஜி.வி.பிரகாஷ்குமார்  நடித்த "அடங்காதே'  படத்தில்  போலீஸ் அதிகாரியாக  நடித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

தமிழில் முதன்முதலாக "மன்மதன்' படத்தில் ஒரு நடன காட்சியில் நடித்த மந்த்ரா பேடி, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த "அடங்காதே' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இப்போது "சாந்தி' டிவி தொடர் மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலமாகியுள்ளார். முன்பு போல் இவருக்கு கிரிக்கெட் பந்தய வர்ணனையாளராக அழைப்புகள் வந்தாலும், திருமணத்திற்குப் பின் அட்வென்சர் ட்ரிப், பிட்நெஸ் ஆலோசகர் என தன்னுடைய வட்டத்தை விரிவு படுத்தியுள்ளார்.

இரண்டாண்டுகளுக்கு முன் "இந்தியாஸ் டெட்லியஸ்ட் ரோட்ஸ்' என்ற நிகழ்ச்சியொன்றை தனியார் டிவி சேனலுக்காக செய்தபோது, கொட்டும் பனியில், படுபயங்கரமான மணாலி - லடாக்கின் மிக குறுகலான பாதையில் துணிவுடன் 1200 கி.மீ. தொலைவு ட்ரக் பயணம் செய்த இவர், முதல் பிரசவத்தில் மகன் வீர் பிறந்தவுடன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு 40 நாட்கள் தனிமையில் இருந்தாராம்.

அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்து பழைய நிலைமைக்குத் திரும்பிய பின்னர் பிட்நெஸ் குறித்த தன்னுடைய புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து கொண்டதை பார்த்த பலர், இவரைப் பின் தொடர்ந்ததோடு, இவரை பிட்நெஸ் குருவாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆலோசனைகள் கூறி வந்த நிலையில் தனியார் டிவி சேனல் தயாரிக்கும் "சாந்தி' என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். டிவி தொடரில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார். அவரே சொல்கிறார்.

""என் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஏதாவது கிரியேடிவ்வாக செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் , சோஷியல் கம்யூனிகேஷன் மீடியாவில் பட்டம் பெற்றேன். இடையில் கிரிக்கெட் வர்ணனையாளர், நடிகை என பல வாய்ப்புகள் கிடைத்தன. பிரகலாத் சர்க்கார் எடுத்த விளம்பர படத்தில் நான் நடித்திருப்பதை பார்த்த "சாந்தி' தொடர் இயக்குநர் ஆதி போச்சா, முக்கிய பாத்திரமான சாந்தியாக நடிக்க திறமையான நடிகையை தேடுவதாக சர்க்காரிடம் கூறியுள்ளார். அவரது பிரிந்துரையின்படி முதல் ஒத்திகைக்காக நான் சென்றபோது, சாந்தி தொடரில் நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. அந்த பாத்திரத்திற்கேற்ப என்னை பிசினஸ் சூட் அணிந்து வரும்படி இயக்குநர் கூறினார். அப்போது என்னிடம் அந்த உடை இல்லாததால், சாதாரண ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து சென்றேன்.

இரண்டாவது ஒத்திகையின் போதும் நான் பிசினஸ் சூட் அணிந்து செல்லவில்லை. மூன்றாவது ஒத்திகைக்கு சென்ற போது, எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான சல்வார்கமிஸ் உடையணிந்து கண்களுக்கு மை பூசி திலகம் இட்டுச் சென்றேன். என்னுடைய தோற்றத்தைப் பார்த்த ஆதிபோச்சா, நான் எதை எதிர்பார்த்தேனோ அந்த தோற்றம் இதுதான். இதை விட்டுவிட்டு எதற்காக உன்னை பிசினஸ் சூட் அணிய சொன்னேன் இதுதான் சாந்தி'' என்று பரவசத்துடன் கூறி என்னை சாந்தியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். மீண்டும் நடிகை ஆனேன். வெகுவிரைவில் இந்தத்தொடர், மூலம் மக்களிடையே பிரபலமாவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

முதன் முதலில் கிரிக்கெட் வர்ணனையாளராக ஒப்புக் கொண்டபோது கூட, கிரிக்கெட்டைப் பற்றி அவ்வளவாக தெரியாமல், எதையாவது உளறி வைக்கப் போகிறோமே என்ற பயம் இருந்தது. காமிரா முன்பு நாம் பேசும்போது ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் அதை திரும்ப பெறமுடியாது. அதனால் துவக்கத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் விமர்சிக்க வேண்டியிருந்தது. மற்ற வர்ணனையாளர்கள் பாராட்டினாலும், நாமாக இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது நல்லது இல்லையெனில் அவர்களாக என்னை நீக்கலாம் என்ற பயம் வந்ததால் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாள ராகும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.

"சாந்தி' தொடரில் ஒப்பந்தமானவுடன்தயாரிப்பு குழுவினர் என்னை அணுகி, இந்த கேரக்டருக்காக ஆயிரம் பெண்களை நேர்காணல் செய்தோம். அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு பொருந்தியதால் நம்பிக்கையுடன் உங்களை நடிக்க வைத்தோம் என்றனர். முதல்வாரம் சற்று சிரமமாக தோன்றினாலும், மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு என்னை உற்சாகப்படுத்தியது. அந்த கேரக்டராகவே மாற வைத்தது. ஆறுவாரங்களுக்கு பிறகே சாந்தியாக நடிப்பது மந்த்ரா பேடி என்பதை தெரிந்து கொண்டார்களாம். இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு மட்டுமல்ல திருப்பமும் ஆகும்'' என்றார் மந்த்ராபேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.