முகப்பு
மகளிர்மணி

ஓடுவதுதான் முக்கியம்!

இரண்டாண்டுகளுக்கு முன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பெற்று தங்கம் வென்ற இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமாதாஸ், சர்வதேச ஓட்டப்பந்தய வீராங்கனைகள் பட்டியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

இரண்டாண்டுகளுக்கு முன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பெற்று தங்கம் வென்ற இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமாதாஸ், சர்வதேச ஓட்டப்பந்தய வீராங்கனைகள் பட்டியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அசாம் மாநிலம் குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் ஹீமாதாஸ். தன்னுடைய விடாமுயற்சியால் ஓட்டப்பந்தய வீராங்கனையாக மாறிய இவர் 2019- ஆம் ஆண்டு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்று தற்போது 200 மற்றும் 400 மீட்டர் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருந்தாலும், "அத்லடிக் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா' மீண்டும் இவர் போட்டிகளில் துணிந்து ஓடுவதை விரும்பவில்லை என தெரிகிறது.

இருப்பினும் 200 மற்றும் 400 மீட்டர் பந்தயங்களில் மட்டுமின்றி, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தயாராகி வருகிறார். இதுபற்றி ஹீமாதாஸ் கூறியதாவது:

""உலக சாம்பியன்ஷிப் கோல்ட் போட்டியில், தங்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் பங்கேற்வில்லை. ஆசிய சாம்பியன்ஷிப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் கலந்து கொண்டேன். வெற்றிப் பெற்றேன். அந்த போட்டிக்குப் பிறகு தோஹா ஆசியன் டிராக் பந்தயத்தில் நான் கலந்து கொண்டபோதுதான் முதுகில் காயம் ஏற்பட்டு மற்ற முக்கிய பந்தயங்களில் பங்கேற்க இயலாமல் போயிற்று, தற்போது குணமடைந்து 200 மற்றும் 400 மீட்டர் பந்தயங்களில் ஓடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தாலும் பயிற்சியாளரும், பெடரேஷனும் மேலும் ஓடுவதில் கவனம் செலுத்தும்படி கூறியதால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

தற்போதைக்கு பந்தயங்களில் பங்கேற்க முடியுமென்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக உள்ளது. அதற்கான பயிற்சியும் கடினமாக தெரியவில்லை. அடுத்த ஆண்டு ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்குமுன், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் சற்று பொறுமையுடன் காத்திருந்து போட்டிகளில் பங்கேற்க தீர்மானித்துள்ளேன். ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு 50:50 என்ற விகிதத்தில்தான் உள்ளது.

தற்போது நாட்டில் விதிக்கப்பட்ட பொது முடக்கம் விளையாட்டு வீரர்களையும் முடக்கி வைத்தாலும் பயிற்சியாளர்களும், விளையாட்டுத்துறை அமைப்புகளும் தொடர்ந்து பயிற்சியளிப்பதை நிறுத்தவில்லை.

200 மீட்டரோ 400 மீட்டரோ என்னைப் பொருத்தவரை தொடர்ந்து ஓடுவதுதான் முக்கியம் என நினைக்கிறேன்.

கடந்த ஆண்டில் செக் ரிபப்ளிக் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றதை பெருமையாக கருதுகிறேன். போட்டிகள் சிறியவையாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் ஓடுவதுதான் முக்கியம்.

ஒலிம்பிக்ஸில் 200 மற்றும் 400 மீட்டர் பந்தயங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். சில சமயங்களில் ஓடும் டிராக்குகள் நமக்கு ஒத்து வராமல் போகலாம். பருவநிலை மாற்றம் ஏற்படலாம். இவை நம் உடல் நலனை பாதிக்காமல் ஓடுவதற்கான சூழ்நிலை சாதகமாக இருந்தால் நம்முடைய முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்பது என்னுடைய கருத்து, குறிப்பிட்ட தூரத்தை வேகத்தை அதிகரித்து கடப்பதுதான் முக்கியமே தவிர மெடல்கள் முக்கியமல்ல.

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் பந்தயத்தில் பங்கேற்கும் போதோ, பயிற்சியின் போதோ காயம் ஏற்படுவது சகஜம். இதை தவிர்க்க முடியாது. எவ்வளவு விரைவில் குணமாகி மீண்டும் விளையாட வருகிறோம் என்பதுதான் முக்கியம். பயிற்சி பெறுவதற்கும், போட்டிகளில் பங்கேற்பதற்கும் வித்தியாசம் உண்டு. போட்டிகளில் பங்கேற்கும்போது, பயிற்சியின்போது கடந்த நேரத்தை விட குறுகிய நேரத்திற்குள் ஒடுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதுதான் சாதனை.

தற்போது நான் பாட்டியாலாவில் தங்கி பயிற்சிப் பெற்று வருகிறேன். அசாமிலும் வெள்ளம், கொவைட் - 19 தாக்கம் அதிகரித்துள்ளதால், என்னுடைய தந்தை என்னை அங்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். வீட்டிற்குச் செல்ல யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால் பயிற்சிதான் முக்கியம். இந்த சமயத்தை விட்டால் எப்போது பயிற்சி பெறுவது?'' என்கிறார் ஹீமாதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.