மகளிர்மணி

"சாவித்திரி வேடத்தில் நடிக்க மறுத்தேன்'' - கீர்த்தி சுரேஷ்

DIN

"66-ஆவது தேசிய திரைவிருதுகள் அறிவிக்கப்பட்டபோது மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "மகாநடி'யில் சாவித்திரியாக நடித்த எனக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுவதாக கிடைத்த தகவலைவிட, அண்மையில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யநாயுடு கையால் விருதை வாங்கும்போது நான் அடைந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவதென்றே தெரியவில்லை. எனக்கு கிடைத்த இந்த விருதை சாவித்திரி அம்மாவுக்கே சமர்ப்பிக்கிறேன்'' என்று கூறிய கீர்த்தி சுரேஷ், முதலில் இந்த வேடத்தை ஏற்க மறுத்ததற்கான காரணத்தை இங்கு கூறுகிறார்:
 "திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திற்குள் தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருது பெறுவேன் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவே இல்லை. இதேபோன்று சிறந்த நடிகைக்கான விருதை பிலிம்பேர் பத்திரிகை வழங்கிய போது கூட நேரில் சென்று வாங்க வாய்ப்பின்றி ரஜினிசாருடன் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். வெகு சீக்கிரத்தில் இந்த அங்கீகாரம் கிடைத்தது பெருமையாக இருக்கிறது. உண்மையில் சாவித்திரி அம்மாவின் ஆசியால் தான் இந்த புகழ் கிடைத்ததாகவே கருதுகிறேன்.
 நான் நடிக்க வந்ததற்கு என்அம்மா மேனகாவும் ஒரு காரணம். அவர் நடித்த படங்களை பார்த்தது முதல் சிறு வயதிலிருந்தே நடிகையாக வேண்டுமென்ற ஆசை எனக்குள் இருந்தது. மேலும் எனக்கு தூண்டுதலாக இருந்தவர் என் அம்மாவின் சகோதரர் கோவிந்த அங்கிளும் காரணமாவார். சாவித்திரியாக நடிக்க என்னை அணுகிய போது முதலில் மறுத்தேன். கோவிந்த் அங்கிள்தான் எனக்கு நம்பிக்கையூட்டினார். கூடவே இயக்குநர் நாக் அஸ்வின் "மகாநடி' திரைக்கதை முழுவதையும் கொடுத்து என்னை படிக்கச் சொன்னார். இருந்தாலும் இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது முடியாத காரியம் என்றேன். வலுவான அந்த பாத்திரம் எனக்கு பயத்தைத் தந்தது. ஆனால் இயக்குநர் விடவில்லை. வேறுயாரும் இந்த பாத்திரத்திற்குப் பொருத்தமானவராக எனக்குத் தெரியவில்லை என்று கூறியதோடு நம்பிக்கையை வளர்த்தார்.
 எனக்கும் சாவித்திரி அம்மாவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தோன்றியது. அவரது வரலாற்றை மீண்டும் முழுமையாகப் படித்தேன். சரியென்று ஒப்புக் கொண்டேன். அவர் நடித்த பல படங்களின் கிளிப்பிங்ஸ்களை பார்த்தேன். சிறுவயதில் அவர் நடித்த "மாயாபஜார்' படம் பார்த்தது நினைவில் இருந்தது. அந்தப் படத்தின் சில காட்சி படத்திலும் இடம் பெறுவதை உணர்ந்தேன். அவரது குடும்பத்தினரை சந்தித்து மேலும் அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தேன். இன்னும் உள்ள அன்றைய நடிகர்களிடம் அவருடன் நடித்த அனுபவங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் உள்ள சில ஒற்றுமைகள் என்னவெனில் எனக்கும் அவரைப் போலவே கிரிக்கெட் விளையாட்டிலும், நீச்சலடிப்பதிலும் ஈடுபாடு உண்டு. சாவித்திரி பாத்திரத்தை நான் சிறப்பாக ஏற்று நடித்து வெற்றிப் பெற்றதில் பலருக்கும் பங்குண்டு.
 சிறந்த நடிகைக்கான விருது பெற்றதால் அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கெனவே நடித்த படங்களை விட அடுத்து நடிக்கும் படங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பதில் தவறில்லையே? கடந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது போல் இந்த ஆண்டும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் வகையில் மூன்று தெலுங்குப் படங்கள் (மிஸ்
 இந்தியா, குட்லக் சாக்ஷி, ரங் தே) ஒரு மலையாள வரலாற்றுப் படம் ( மரக்கார்: அரபிக் கடலிண்டே சிம்மம்) தமிழில் ரஜினிசாருடன் தலைவர் மற்றும் பெங்குவின் என தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளன'' என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT