சமையல் சமையல்!
பலாப்பழத்தை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவு, சோளமாவு, தனித்தனியாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வறுத்த சோளமாவு, அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும்.
பலாப்பழ அல்வா
தேவையான பொருள்கள்:
பலாப்பழம் - 25 சுளைகள்
நெய் - 100 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
திராட்சை - 10
சர்க்கரை - 250 கிராம்
பச்சரிசி மாவு - கால் கிண்ணம்
சோளமாவு - 2 தேக்கரண்டி
பால் - கால் லிட்டர்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: பலாப்பழத்தை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவு, சோளமாவு, தனித்தனியாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வறுத்த சோளமாவு, அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். அத்துடன் பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் நெய்விட்டு கலந்து வைத்துள்ள பால் கலவை சேர்த்து 15 நிமிடம் பொறுமையாக கிளறவும். பிறகு கொஞ்சம் நெய் சேர்த்து மசித்து வைத்துள்ள பலா சுளையைச் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கிளறவும். பின்னர் தேவையான சர்க்கரை சேர்த்து 15 நிமிடம் கிளறவும். பிறகு ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும். பிறகு வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை போட்டு பரிமாறவும்.
பலாப்பழ அடை
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பொடித்த வெல்லம் - 1 கிண்ணம்
ஏலப்பொடி - அரை தேக்கரண்டி
பலாச்சுளைகள் - 6 ( நன்கு பழுத்தது)
வாழை இலை - 4 ஷ்4 அங்குலம் உள்ள இலைகள்.
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து கெட்டியானப் பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அத்துடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலப்பொடி, சிறிய துண்டுகளாக நறுக்கிய பலாச்சுளைகள் ஆகியவற்றை சேர்த்து கலந்து வாழை இலைகள் மீது எண்ணெய்த் தடவி பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக்கி, மெல்லிய சிறிய அடைகளாக தட்டி, இலைகளை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான பலாப்பழ அடை தயார்.
பலாப்பழ போளி
தேவையான பொருள்கள்:
பலாச்சுளைகள் - 10 ( நன்கு பழுத்தது)
கஸ்டர்ட் பவுடர் - 6 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் - 3 தேக்கரண்டி
மைதா மாவு - கால் கிண்ணம்
உருக்கிய நெய் - கால் தேக்கரண்டி
செய்முறை: பலாச்சுளைகளை மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், மைதா மாவுடன் உருக்கிய நெய்யைச் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும். அரைத்த பலாப்பழம், கஸ்டர்ட் பவுடர், வெல்லப் பொடி மூன்றையும் நன்குப் பிசைந்து கொள்ளவும். கையில் ஒட்டுவது போன்று இருந்தால் மேலும் சிறிது கஸ்டர்ட் பவுடரை சேர்த்துக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய சப்பாத்தி போன்று தேய்த்து அதன் நடுவில் பலாப்பழ பூரணத்தை அளவாக வைத்து, சுற்றிலும் சப்பாத்தியை இழுத்து மூடி, அரிசி மாவில் புரட்டி, மறுபடியும் சிறிய சப்பாத்திகளாக வட்டமாக தேய்த்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்தப் போளியை கல்லில் போட்டு சுட்டு, இருபுறமும் சிவந்தவுடன் எடுக்கவும். நல்ல ருசியாக இருக்கும்.
பலாப்பழ தோசை
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
பலாப்பழ துண்டுகள் - 2 கிண்ணம்
வெல்லத்தூள் - 1 கிண்ணம்
நெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் அரிசியை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், அரிசியை ரவைப் போன்று அரைத்துக் கொள்ளவும். பிறகு வெல்லத்தையும், பலாப்பழத் துண்டுகளையும் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். இவற்றை அரிசிமாவுடன் நன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதில் ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர், தோசைக்கல்லில் நெய்விட்டு, தோசை வார்த்து எடுக்கவும், மிகவும் சுவையான பலாப்பழ தோசை ரெடி.