முகப்பு
மகளிர்மணி

மனம் கவர்ந்த மிச்செல் ஒபாமா

ஒரு பெண்ணாக நீங்கள் மகிழ்ச்சி அடையும் விஷயம் எது?, என்று கேட்டதற்கு, அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதும் அந்தப் பெண் அளித்த பதில் என்ன தெரியுமா?

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

ஒரு பெண்ணாக நீங்கள் மகிழ்ச்சி அடையும் விஷயம் எது?, என்று கேட்டதற்கு, அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதும் அந்தப் பெண் அளித்த பதில் என்ன
தெரியுமா?

""என்னுடைய இரு பெண் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருப்பது தான் என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது'' என்று எளிமையாகப் பதில் அளித்தார்.

இந்தப் பதில் சொன்னவர் யார் தெரியுமா? அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா மனைவி மிச்செல். அமெரிக்க அதிபரின் மனைவி என்ற கர்வம் ஒரு நாளும் அவர் தலைக்கு ஏறியதில்லை. அமெரிக்காவின் அதிபர் பொறுப்பில் கணவர் இல்லையென்றாலும், முன்னாள் முதல் குடிமகளாக இருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

வழக்கறிஞராகவும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியவர் ஒபாமா. கடின உழைப்பால் உலகின் மிக அதிகாரம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் கருப்பினத்தவரும் நுழைய முடியும் என்பதை செய்து காட்டியவர். அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய காதல் மனைவி மிச்செல். ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய தந்தை, உடன் பிறந்த அண்ணன், தம்பி, கணவர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆணின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய மனைவி ஒருவரே இருப்பதை அத்தனை பெருமையாகச் சொல்கிறார் ஒபாமா.

சட்டம் படிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்ற மிச்செல் வழக்கறிஞராகி பின்னர், சிட்லி ஆஸ்டின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்குதான் ஒபாமாவைச் சந்தித்தார். அதன் பின் காதல், திருமணம் என இன்றுவரையிலும் ஒபாமா-மிச்செல் வாழ்க்கை காதலால் பின்னிப் பிணைந்துள்ளது.

""எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு போன்ற விஷயங்களால் தான் கட்டமைக்க முடியும் என்று எனக்குக் சொல்லிக் கொடுத்தார் தந்தை.

எனது கணவர் பராக் ஒபாமாவிடமும் நான் தேடிய அதே குணங்கள் இருந்தன. எங்களுடைய காதல் திருமண வாழ்க்கை இன்று வரை உயிர்ப்போடு இருப்பதற்கு நம்பிக்கையும், அர்ப்பணிப்பு தான் முக்கியக் காரணங்கள்'' எனச்
சொல்லும் மிச்செல் ஆடை வடிவமைப்பில் அலாதி விருப்பம் கொண்டவர். செல்லபிராணிகளின் காதலர்.

இந்திய மதிப்பில் சில லட்சங்களை சம்பாதித்த மிச்செல் 2007-ஆம் ஆண்டு கணவருக்காக வேலையை உதறித் தள்ளினார். ஆம், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமாவுக்காகப் பிரசாரக் களத்தில் குதித்தார் மிச்செல். வெள்ளை மாளிகையில் கருப்பினத்தவரும் ஆள முடியும், என்பதை நிரூபிக்க மிச்செலின் பிரசாரங்களும், ஒபாமாவின் தன்னம்பிக்கை பேச்சுகளும்தான் காரணம்.

தேர்தல் முடிந்து அதிபரானார் ஒபாமா. இதற்கு மிச்செல் கேட்ட பரிசு என்ன தெரியுமா, ஒபாமா புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்பது தான். மனைவி வைத்துள்ள காதலின் ஆழத்தை உணர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு "குட்பை' சொன்னார் ஒபாமா.

வெள்ளை மாளிகை பூங்காக்களில் ஒபாமாவும், மிச்செலும் சிறுவர்களுடன் விளையாடுவது வழக்கம். அப்போது ஒபாமா, மிச்செல் பார்க்க வேண்டும் என்பதற்காக சிறுவர்கள் மாறுவேடம் அணிந்து வெள்ளை மாளிகைக்கு வருவதுண்டு. அந்தக் குழந்தைகளுக்காகத் தன் சொந்த செலவில் விலையுர்ந்த சாக்லேட்டுகளை வாங்கி குவித்து வைத்திருப்பார் மிச்செல். அதனை அவர் ஆனந்தத்துடன் புத்துணர்ச்சிப் பொங்க சிறுவர்களிடம் கொடுப்பது தாய்மையின் உச்சம்.

8 ஆண்டுகள் அதிபராக இருந்தார் ஒபாமா. அதிபர் பதவியிலிருந்து விடை பெறும் போது, மனைவி மிச்செல் மற்றும் மகள்கள் மலியா, ஷாசா பற்றி ஒபாமா கண்ணீர் வழிய பேசினார். ""எனது அரசியல் கனவுக்காகக் கடந்த 25 ஆண்டுகளாக மிச்செல் தன்னைத் தியாகம் செய்துள்ளார். அவர் என்னுடைய மனைவி மட்டுமல்ல. என் குழந்தைகளுக்குத் தாய். எனக்கு நல்ல தோழி. எனது முன்மாதிரி. கருணை மற்றும் இரக்க குணம் கொண்டவர். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரையும் உறவினராகப் பார்க்கும் மனப்பான்மை கொண்டவர். இன்றைய தலைமுறைக்கு நல்ல முன்மாதிரி. எனக்கு பெருமை கிடைக்கச்செய்தவர். இந்த நாட்டைப் பெருமையடைய வைத்தவர். எனது மகள்கள் நல்ல சூழ்நிலையில் வளர்ந்துள்ளனர்'' என்றார் ஒபாமா.

மிச்செல்லை பற்றிப் பேசும்போது ஒபாமாவால் பேச முடியவில்லை. அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அப்போது கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மிச்செல்லை வாழ்த்தினர். அவரது மகள் மலியாவும் தனது கண்ணீரை அடிக்கடி துடைத்தபடி இருந்தது அனைவரையும் உருக்கியது.

சிறந்த எழுத்தாளரான மிச்செல், ஒபாமாவின் சுயசரிதை நூலான பிகமிங் "ஆஉஇஞஙஐசஎ' பிரபல கிராமி விருதை வென்றுள்ளது.

பராக் ஒபாமாவின் வாழ்க்கை குறிப்பு குறித்து டேவிட் ரோம் என்பவர் புத்தகமாக எழுதி உள்ளார். "தி மேகிங் ஆஃப் பராக் ஒபாமா' (பட்ங் ஙஹந்ண்ய்ஞ் ர்ச் ஆஹழ்ஹஸ்ரீந் ஞக்ஷஹம்ஹ) என்ற பெயரில் எழுதபட்டுள்ளது. இந்நிலையில் இந்த புத்தகத்தை எழுதியுள்ள டேவிட் அதில் பல சுவாரசிய சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்ததும் 8.1 மில்லியன் டாலர் மதிப்பிற்கு வீடு வாங்கினார் ஒபாமா. தற்போது உலகம் முழுக்க உரையாற்றி வருவதோடு புத்தகம் எழுதுவதிலும் கவனம் செலுத்துகிறார். அவருக்குத் துணையாகப் பணியாற்றி வருகிறார் மிச்செல்.

முகநூலில் தனது அன்றாட நடவடிக்கைகளைப் பதிவேற்றுகிறார் மிச்செல் . லட்சகணக்கான மக்கள் அவரது பக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர் சொல்லும் நல்ல விஷயங்களை ஏற்று நடக்கிறார்கள். மொத்தத்தில் தனது குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்தச் சமூகத்திற்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார் மிச்செல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.