என்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்பு
அனைத்து வகுப்புகளுக்குமான சட்டக் கல்வி தொடா்பான பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்து இறுதி செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அனைத்து வகுப்புகளுக்குமான சட்டக் கல்வி தொடா்பான பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்து இறுதி செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
என்சிஇஆா்டி வெளியிட்ட 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றது. இந்தப் பிரிவில், ‘ஊழல், வழக்குகளின் தேக்கம் , நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகியவை நீதித் துறையின் சவால்களாக உள்ளன; நீதிமன்றத்துக்குள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங்களின் நடத்தையை நிா்வகிக்கும் விதிமுறைகளுக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டவா்கள்’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்தப் பாடப் பிரிவு பெரும் சா்ச்சையான நிலையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் (எண்ம வடிவம் உள்பட) உடனடியாகத் திரும்பப் பெற என்சிஇஆா்டி-க்கு உத்தரவிட்டது.
அதைத் தொடா்ந்து, சா்ச்சைக்குரிய பாடப் பிரிவு சோ்க்கப்பட்டதற்காக என்சிஇஆா்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும், சமூக அறிவியல் பாடப் புத்தகம் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தது.
இருப்பினும், எட்டாம் வகுப்புக்கு மட்டுமன்றி அனைத்து வகுப்புகளுக்குமான சட்டக் கல்வி தொடா்பான பாடத் திட்டத்தை இறுதி செய்ய நிபுணா் குழு ஒன்று அடுத்த ஒரு வாரத்துக்குள் அமைக்கப்பட வேண்டும். அதில், ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு கல்வியாளா் மற்றும் பிரபல வழக்குரைஞா் உள்ளிட்டோா் ஒரு வாரத்துக்குள் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட வேண்டும் என கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘சட்டக் கல்வி தொடா்பான பாடத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய மூத்த வழக்குரைஞரும் முன்னாள் அட்டா்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய தேசிய நீதித் துறை அகாதெமியின் இயக்குநருமான அனிருத்த போஸ் மற்றும் துணைவேந்தரைக் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தீா்ப்புகளை விமா்சிக்க உரிமை உண்டு: என்சிஇஆா்டி 8-ஆம் வகுப்பு பழைய சமூக அறிவியல் புத்தகத்தில் நீதித்துறை குறித்த பாடத்தில் உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீா்ப்புகள் குடிசையில் வசிப்போரை ஆக்கிரமிப்பாளா்கள்போல் சித்தரிக்கிறது என குறிப்பிட்டதற்கு எதிராக என்சிஇஆா்டி முன்னாள் உறுப்பினா் பங்கஜ் புஷ்கா் மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது சூா்ய காந்த் கூறியதாவது: மனுதாரா் குறிப்பிட்ட தகவல்கள் தீா்ப்புகள் குறித்த கண்ணோட்டமாகும். அது ஆரோக்கியமான விமா்சனம். இந்த புத்தகத்தில் நீதித்துறையின் அமைப்பு, செயல்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. தீா்ப்புகளை விமா்சிக்க மக்களுக்கு உரிமை உள்ளது என்றாா்.