மாடலிங் தொடர்ந்து தேசிய விருது
கடந்த ஆண்டு தன் நிறுவன தயாரிப்பு பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய ஆடை வடிவமைப்பாளர் நீடா லுல்லா. 22 நாள்களில் 11 நகரங்களில் பயணம் செய்து இந்தியா திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு தன் நிறுவன தயாரிப்பு பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய ஆடை வடிவமைப்பாளர் நீடா லுல்லா. 22 நாள்களில் 11 நகரங்களில் பயணம் செய்து இந்தியா திரும்பியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தால் புத்துணர்வு பெற்று இன்னும் அதிகமாக உழைக்கும் சக்தியை பெற்றதாக கூறும் நீடா, இந்திய திரைப்படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்கள் உள்பட 375-க்கும் மேற்பட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
திரைப்படங்களில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய அளவிலான விருது முதன்முறையாக வழங்கப்படும் முறை துவங்கிய போது, 1991-ஆம் ஆண்டு வெளியான "லம்ஹே' என்ற படத்திற்காக நீடாவுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது இவரது வயது 21. அந்த சமயத்தில் ஸ்ரீதேவிக்காக ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டிருந்ததால், தன்னுடைய சார்பில் விருது பெற தன் கணவரை அனுப்ப முடிவு செய்தார். இதையறிந்த ஸ்ரீதேவி "முதன்முறையாக வழங்கப்படும் விருது என்பதால் நீயே நேரில் சென்று வாங்குவது தான் முறை' என்று கூறி நீடாவை அனுப்பி வைத்தாராம்.
ஆடை வடிவமைப்பில் நீடாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
ஹைதராபாத்தில் பிறந்த நீடாவுக்கு படிப்பில் ஆர்வமில்லை என்பதால் அடிக்கடி பள்ளிக்கூடம் செல்வதை தவிர்ப்பதுண்டு. 16-ஆவது வயதில் இவரது தந்தை ஆங்கில "பேஷன்' பத்திரிகையை வாங்கிக் கொடுப்பதுண்டாம். அதில் இடம் பெற்றுள்ள மாடல்கள் அணியும் வித்தியாசமான ஆடைகள் இவரை கவர்ந்தன. வீட்டில் தானே ஆடைகளை வடிவமைத்து தயாரிக்கத் தொடங்கினார். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள எஸ்.என்.டி.டி பல்கலைக்கழகத்தில் ஹேமந்த் திரிவேதி என்பவர் வழிகாட்டுதலுடன் பேஷன் கோரியோகிராபர் பயிற்சி பெறத் தொடங்கினார். பயிற்சி முடிந்ததும் எஸ்.என்.டி.டி பல்கலைக்கழகத்தின் துணைப்பிரிவான பி.வி.பி பாலிடெக்னிக் நடத்தி வந்த பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
அப்போது தான் மும்பையை சேர்ந்த பிரபல நடன இயக்குநர் ஜென்னி நவரோஜி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவருடன் இணைந்து "விஸ்கிங் உட்ஸ் நீடா லுல்லா ஸ்கூல் ஆப் பேஷன்' என்ற அமைப்பை தொடங்கி பேஷன் ஷோக்களை நடத்தி வந்தார். இதன் மூலம் முதல் முதலாக "தமாசா' என்ற படத்திற்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்தன.
தொடர்ந்து திருமணங்களுக்காக ஆடைகள் தயாரித்து கொடுக்கும் தொழில் நிறுவனமொன்றையும் தொடங்கினார். திருமண வரவேற்பில் மணமகள் அணியும் ஆடைக்குத் தான் முக்கியத்துவம் என்பதால் பெண்கள் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை பார்ப்பவர்கள் பிரமிக்கும்படி இருக்க வேண்டுமென்று கேட்பார்கள். இது பெண்களின் இயற்கை குணம். "ஒரு நாள் மட்டும் அணியும் உடைக்கு அதிகம் செலவழிக்க வேண்டாமே' என்று நீடா கூறினாலும், ஒரு நாள் என்றாலும் மற்றவர்கள் புகழும் படி இருக்க வேண்டும் என்று சொல்வார்களாம்.
இந்திய உடைகள் உலக நாடுகளில் பிரபலபடுத்த வேண்டுமென்ற நோக்கத்தில், நீடா இந்தியன் பேஷன் ஷோக்கள் நடத்த அமெரிக்கா சென்றிருந்த போது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டதாம். எதிர்பார்த்ததை விட ஆதரவு அதிகரிக்கவே கலிபோர்னியா மற்றும் லண்டனில் கிளைகளை திறந்துள்ளார்.
பெண்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் ஆடைகளை வடிவமைத்து வெற்றிப் பெற்றதற்கு வாடிக்கையாளர்களின் ஆதரவே காரணம் என்று கூறும், நீடாவுக்கு மிகவும் பிடித்தமான உடை காஞ்சிபுரம் சேலையாம்.
இன்று இந்தியாவில் பிரபலமாக உள்ள பேஷன் டிசைனர்களில் ஒருவராக கருதப்படும் நீடா, முதன்முதலாக ஆடை வடிவமைப்பில் ஆர்வமாக ஈடுபட்ட போது, அப்போது "சாண்ட்விச்' செய்து விற்பனை செய்ததன் மூலம் சேமித்து வைத்திருந்த, ஐநூறு ரூபாயில் பழைய உஷா தையல் மிஷன் ஒன்றை வாங்கி அதன் மூலம் தான் பயிற்சிப் பெற தொடங்கினாராம். படிப்படியாக உயர்ந்தவர் இன்று 72 தையல் கலைஞர்களையும், 200 எம்ப்ராய்டரி கலைஞர்களையும் பணிக்கு அமர்த்தி ஆடைகளை தயாரிக்கும் தொழில் முனைவோராக சர்வதேச அளவில் புகழ் பெற்றிருக்கிறார்.