முகப்பு
மகளிர்மணி

அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் பாரதி!

எழுபதுகளில் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பாரதி

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

எழுபதுகளில் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பாரதி, தற்போது கணவரும், நடிகருமான விஷ்ணுவர்தன் மறைவுக்குப் பின் "விபா சாரிட்டபிள் டிரஸ்ட்', "ஸ்நேகலோகா கிரிக்கெட்' மற்றும் "கராத்தே கிளப்' போன்ற அமைப்புகளை நிர்வகித்து வருகிறார்.

ஆகஸ்ட், 15 , 1950 -ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த பாரதி, இங்குள்ள மகாராணி கல்லூரியில் படித்து பட்டம் பெறும்போதே சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவராகவும், நடனமும் கற்று சிறந்து விளங்கினார்.

""சினிமாவில் நடிக்கத் தூண்டியவர்களே என்னுடைய பெற்றோர்தான். பெற்றோருடன் சென்னை வந்திருந்த சமயம் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்த நடிகரும், இயக்குநருமான கல்யாண்குமார், அவரது "லவ் இன் பெங்களூரு' என்ற கன்னடப் படத்தில் நடிக்க உடனடியாக வாய்ப்பு கொடுத்தார்.

கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்தவள் என்பதால் எனக்கு யாரையும் நேருக்கு நேர் பார்த்து பேசும் பழக்கம் இல்லை. இதனால் முதன்முதலாக நடிக்கும்போது தயக்கமாக இருந்தது. அடிப்படை நடிப்புப் பற்றியும் தெரியாததால் இயக்குநர் சொல்லியபடியும், படப்பிடிப்பின்போது கூட இருந்த மூத்த நடிகர்களின் வழிகாட்டுதல்படியும் நடிக்கத் துவங்கினேன். சினிமாவைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகே மற்ற மொழிகளில் வந்த வாய்ப்புகளை ஏற்கத் தொடங்கினேன்.

தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோருடன் நடித்தது போல், தெலுங்கு, மலையாள படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

முதன்முதலாக ஹிந்தியில் "மெஹர்பன்' என்ற படத்தில் நடித்தபோது அசோக்குமார், சுனில்தத், நூதன் போன்றவர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். பல மொழிகளில் நடித்ததால் அந்தந்த மாநில சினிமா உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. 1966-ஆம் ஆண்டு நான் நடித்த "சந்தியாராகம்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தபோது, என்னைவிட என் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெங்களூரு சாமுண்டீஸ்வரி ஸ்டூடியோவில் ராஜ்குமாருடன் "தூரதபெட்டே' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய முதல் படமான "நாகரஹாவூ' நூறாவது நாள் விழாவுக்கு ராஜ்குமாரை அழைக்க விஷ்ணுவர்தன் வந்திருந்தார். அப்போது கூடவே எனக்கும் அழைப்புவிடுத்தார். அதுதான் எங்கள் முதல் சந்திப்பாகும். பின்னர், அவருடன் "மனேபௌகித சொúஸ' என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, மேலும் சில படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தேன்.

என்னை அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பியதை அறிந்த நான், இந்த விஷயத்தை என் பெற்றோரிடம் கூறினேன். அவர்களும் சம்மதித்தனர். இருப்பினும் என் பெற்றோரையும், சிறு வயதினராக இருந்த என் உடன்பிறந்தவர்களையும் எனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள்? என்ற கேள்வி என் மனதில் எழுந்ததால் உடனடியாக நான் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையில் எங்களிருவரையும் மணக்கோலத்தில் பார்க்க நினைத்த என்னுடைய தந்தை காலமாகிவிட்டார். என்னுடைய குடும்ப பொறுப்புகளை ஏற்க விஷ்ணுவர்தன் முன்வந்ததால் திருமணம் செய்து கொண்டோம்.

அவர் எனக்கு கணவராக கிடைத்ததை என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதினேன். நல்ல ஒரு கணவராகவும், என்னுடைய இருபெண்களுக்கு நல்ல தந்தையாகவும் இருந்த அவரது இழப்பு என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அவரது நினைவாக மைசூரில் அரசு உதவியுடன் நினைவிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை நான் எதற்காகவும் போராடியதில்லை. என்னுடைய திறமை மீது என் குடும்பத்தினர் வைத்த நம்பிக்கையும், என்னுடைய கனவுகளும் நிறைவேறியதற்கு கடவுளின் அருள்தான் காரணமென்று நினைக்கிறேன். இதற்காக கடவுளுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்'' என்று கூறும் பாரதி, "கிருஷ்ண தேவராயர்' என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதையும், 2017-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

தற்போது, இரு பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து, பேரக் குழந்தைகளுடன் பெங்களூரில் அமைதியான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.