சமையல் சமையல்!
வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும். கோவைக்காய்களை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும்.
கோவைக்காய் சட்னி
தேவையான பொருட்கள்
கோவைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 3
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் -4
பச்சை மிளகாய் - 3
தனியா - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை: வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும். கோவைக்காய்களை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவைக்காய், வெங்காயம், பூண்டு, மிளகாய்வற்றல் , பச்சை மிளகாய் , வெந்தயம் , முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவைக்காய் சட்னி தயார். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
புடலங்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 கிண்ணம்
சிறிய வெங்காயம் - அரை கிண்ணம்
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
கடுகு, சீரகம், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதன்பிறகு சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி பின் நறுக்கிய புடலங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும். புடலங்காய் பச்சை வாசம் போக நன்றாக வதங்கியதும் தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, புளி, மிளகாய், உப்பு, தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதன்பின் ஆற வைத்து அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். சுவையான புடலங்காய் சட்னி தயார். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இட்லி மற்றும் தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
வாழைத்தண்டு சட்னி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வாழைத்தண்டு - 1 கிண்ணம்
உளுந்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் , உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மறுபடியும் சிறிது எண்ணெய் விட்டு, வாழைத்தண்டை ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் பொடித்து அதில் வாழைத்தண்டுடன் உப்பு, புளி, சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சுவையான வாழைத்தண்டு சட்னி ரெடி. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்.
இதை இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்தோடும் சேர்த்து சாப்பிடலாம்.