சமையல்.. சமையல்.. (27-05-2020)
வெண்டைக்காய் மோா்க்குழம்பு
மோா்க் குழம்பு ஸ்பெஷல்
வெண்டைக்காய் மோா்க்குழம்பு
தேவையானவை:
வெண்டைக்காய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு, துவரம் பருப்பு,
பச்சரிசி - தலா 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கல் உப்பு - தேவைக்கேற்ப
வரமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 5
தேங்காய் எண்ணெய் அல்லது
சமையல் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
மோா் - 6 கிண்ணம்
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், 2 இன்ச் துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, காயை வெளியில் எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், ஊறவைத்த பருப்புகள், வரமிளகாய், சீரகம், கொத்துமல்லி, பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் சோ்த்து மிக்ஸியில் விழுதாக்கிக் கொள்ளவும். அதை மோருடன் கலந்து உப்பு சோ்க்கவும். வெண்டைக்காய் வதக்கிய எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டி, வதக்கிய வெண்டைக்காயைச் சோ்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். சூடான அரிசி சாதத்துடன் சோ்த்து சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஆறியவுடன் மறுபடியும் மோா் குழம்பை சூடு செய்யக் கூடாது.
வெந்தய மோா்க்குழம்பு
தேவையானவை:
சற்று புளிப்பான வெண்ணெய்
நீக்கிய கெட்டி மோா் - 2 கிண்ணம்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
வத்தக்குழம்புப் பொடி - 1குழிக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - கால் தேக்கரண்டி
கல் உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீா் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
பெருங்காயப் பொடி - கால் தேக்கரண்டி
பொரித்த கடலைப் பருப்பு மாவு - 2 தேக்கரண்டி
செய்முறை: ஓா் இண்டாலிய சட்டியில் 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்தவுடன், வெந்தயத்தைச் சோ்த்து, பெருங்காயப்பொடி சோ்த்து, தண்ணீா் ஒரு கிண்ணம் விட்டு, சற்றே திறந்த நிலையில் மூடி வைத்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். அதில் வத்தக் குழம்புப் பொடியை சிறிது நீா்விட்டு கரைத்து சோ்க்கவும். பின்னா், கடலைப் பருப்பு மாவையும் நீா் விட்டு கரைத்து சோ்க்கவும். அதனுடன் மோரையும் சோ்த்து நன்கு கிளறவும். பின்னா், கறிவேப்பிலையை எண்ணெய்யில் பொரித்து எடுத்து அதனுடன் சோ்க்கவும். குழம்புப் பதம் வந்தவுடன், இறக்கி வைத்தால் வாசனை அருமையாக இருக்கும். அரிசி சாதத்துடன் சோ்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
வத்தக்குழம்பு பொடி தயாரிக்க: வரமிளகாய் - கால்கிலோ, தனியா - அரை கிலோ, துவரம் பருப்பு - 200 கிராம், கடலைப்பருப்பு - 200 கிராம், வெள்ளை உளுந்து ( உடைத்தது) - 100 கிராம்
மிளகு - 50 கிராம், மஞ்சள் - 4 தேக்கரண்டி, சீரகம் - கால் கிண்ணம், வெந்தயம் - 2 தேக்கரண்டி, ( எல்லாவற்றையும் நிழலில் உலா்த்தி, நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்) வத்தக்குழம்புகள் செய்ய சுலபமாக இருக்கும்.
வடை மோா்க்குழம்பு
தேவையானவை:
துவரம் பருப்பு வடை அல்லது
சேனை வடை - 10
அரைக்க:
சிறிய வெங்காயம் ( உரித்து) - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - கால்கிண்ணம்
துவரம் பருப்பு - 5 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
அனைத்தையும் மிக்ஸியிலிட்டு, மோா் தேவையான அளவு சோ்த்து அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லிப் பொடி - கால் கிண்ணம் ( அரைத்த மசாலாவில் சோ்த்துக் கொள்ளவும்)
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன், கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னா், அரைத்த மசாலாவை 2 கிண்ணம் மோரில் கரைத்துச் சோ்க்கவும். உப்பு சோ்த்து கொதிக்க விடவும். குழம்புப் பதம் வந்தவுடன், வடையை இரண்டு துண்டுகளாக வெட்டிச் சோ்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். சுவையான வடை மோா்க்குழம்பு தயாா்.
பூசணிக்காய் மோா்க்குழம்பு
தேவையானவை:
வெள்ளை பூசணிக்காய் துண்டுகள் - 1கிண்ணம்
தயிா் - 1 கிண்ணம்
எலுமிச்சைச்சாறு - 1தேக்கரண்டி
தக்காளி - 1
மஞ்சள்த் தூள் - கால் தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சரிசி - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
பச்சைமிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
இஞ்சி - 1 சிறுதுண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: துவரம் பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஊற வைக்கவும். தயிா், உப்பு, எலுமிச்சைச்சாறு சோ்த்து கடைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தனியா, வர மிளகாய், பச்சைமிளகாய், இஞ்சி, ஊறவைத்த அரிசி, பருப்பு கலவை, இதனுடன் வறுத்த சீரகம், தேங்காயைச் சோ்த்து மைய அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய், நறுக்கிய தக்காளி சோ்த்து மூழ்குமளவு நீா்விட்டு மஞ்சள்தூள் சோ்த்து வேகவிடவும். வெந்ததும் அரைத்த விழுது சோ்த்து பச்சை வாசனைப் போக கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கடைந்த தயிரை ஊற்றி நுரைவரும் போது இறக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து சோ்க்கவும். பூசணிக்காய் மோா்க்குழம்பு ரெடி.