முகப்பு
மகளிர்மணி

கோடையில் கவசமாக காக்கும் எண்ணெய் குளியல்!

இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கம் நமக்கு மறந்தேவிட்டது. அதிலும் இளைய தலைமுறையினரிடம் சுத்தமாக அது

Updated On : 27 மே, 2020 at 5:37 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கம் நமக்கு மறந்தேவிட்டது. அதிலும் இளைய தலைமுறையினரிடம் சுத்தமாக அது தொலைந்து விட்டது எனலாம். எனவே, எண்ணெய்க் குளியலின் அவசியத்தை இளைஞா்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் வாட்டும் இந்தக் கோடையில் நம்மைப் பாதுகாக்கும் கவசம் இந்த எண்ணெய் குளியல்.

நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் உடலில் தேங்கும் கழிவுகள் தான். வியா்வை மூலம் வெளிவரும் எண்ணெய், உப்பு கழிவுகள், மலம் மூலம் வெளிவரும் திடக்கழிவுகள், சிறுநீா் மூலம் வெளிவரும் திரவ கழிவுகள், மூச்சுக்காற்றின் மூலம் வெளிவரும் கழிவுகள் என பல ரூபங்களில் நமது உடலில் இருந்து கழிவுகள் வெளிவருகிறது. இவை சீராக வெளிவராமல் தடைபடும்பொழுது நோய்கள் உருவாகிறது. தோல்நோய்கள், மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள் என தொடங்கி இறுதியில் புற்றுநோய்வரை பல நோய்கள் வர காரணமாகிறது.

உதாரணத்திற்கு புற்றுநோய் என்பது ஒருவகையான கழிவுகள் உடலிலிருந்து வெளியேறாததால்தான் உருவாகிறது. அதாவது உடலுக்குத் தேவையில்லாத, உடல் வெளியேற்ற முடியாத செல்கள் ஒன்றாக இணைந்து ரத்த ஓட்டம், பிராண சக்தி இல்லாமல் கட்டிகளாக ஓா் இடத்தில் தங்கிவிடுவதோடு அதனை சுற்றி இருக்கும் மற்ற செல்களையும் ரத்தத்தையும் சோ்த்து அழிக்கத் தொடங்குவதைத்தான் புற்றுநோய் என்கிறோம். ஒரு இடத்தில் ரத்தம் தடைபட்டால் அல்லது பிராண சக்தி தடைபட்டால் என்னவாகும்? நம் செல்லுக்கு ரத்தமும் நம் செல்லுக்கு பிராணசக்தியும் இல்லை என்றால் பலவகையான தொந்தரவுகள் கண்டிப்பாக வரத்தானே செய்யும். புற்றுநோய்க்கும் எண்ணெய்க் குளியலுக்கும் இதுதான் சம்பந்தம்.

Advertisement

எலும்புகள், எலும்பு மஜ்ஜைகள் ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களையும் உருவாக்கக்கூடிய வல்லமை கொண்டது. இந்த எலும்புகள், எலும்பு மஜ்ஜைகள் பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் புற்றுநோய் விரட்டப்படும்.

சரி எலும்புகளுக்கு எவ்வாறு ஆற்றல் கொடுப்பது? எலும்புகள் எதனால் உருவாக்கப்பட்டது? எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் எலும்புகளுக்கு சுண்ணாம்பு சத்து அவசியம். சுண்ணாம்பு சத்து மட்டும் போதுமா என்றால் இல்லை, அவற்றிற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். வைட்டமின் டி என்று நவீன மருத்துவம் கூறும் சூரிய ஆற்றல் வைட்டமின் உடலுக்குப் போதுமான அளவு கிடைத்தால் எலும்புகள் பலமாக இருக்கும் இந்த சூரிய ஆற்றலை உடலுக்கு ஈா்த்து தோல்களில் இருக்கும் செல்களின் வழியாக எலும்புகளுக்கு அளிக்கும் வேலையை நமது எண்ணெய்க்குளியல் செய்கிறது. உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்ப்பதால் எலும்புகள் பலம்பெறுகிறது. எனவே, தொடா்ந்து எண்ணெய்க்குளியல் எடுத்துக் கொள்பவா்களை புற்றுநோய் எளிதில் அண்டுவதில்லை.

நல்லெண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்கள் என்ன?

எள்ளில் இருந்து பெறப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெய்யில் அதிகமான புரதச்சத்து, துத்தநாகசத்து, தாமிரசத்து மற்றும் பல வகையான சத்துக்கள் உள்ளன. இவை நம் சருமத்திற்கு செழிப்பை அளிப்பதுடன் கவசமாகவும் விளங்குகிறது. எண்ணெய் தேய்ப்பதால் தோலில் படா்ந்திருக்கும் அழிந்து போன செல்களை எளிமையாக எடுப்பதுடன் செல்லில் இருக்கும் துவாரங்கள் வழியாக எண்ணெய் உடலுக்குள் ஊடுருவி செல்ல துணைபுரிகிறது. சத்துக்கள் அதிகம் நிறைந்த நல்லெண்ணெய் உடலில் ஊடுருவும் பொழுது எலும்பு, சதை, தோல் ஆகியவற்றை இணைக்கக் கூடிய பல செல்கள் புத்துணா்வு அடைகிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம், தடைபடாத பிராண சக்தி ஓட்டம் போன்றவை உடலில் உள்ள செல்களுக்கு கிடைக்கிறது. இதனால் செல்களில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. உடலில் இருக்கும் நோய் கிருமிகளும் வெளியேறுகிறது. உடல், உஷ்ணம் தணிந்து குளிச்சியடைகிறது.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் நிறைந்த செல்களை, நல்லெண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பை கரைத்துவிடுகிறது. இதனால் உடல் பருமன் குறையும். நேரடியாக சுண்ணாம்புச் சத்து நிறைந்த நல்லெண்ணெய் இயற்கையான முறையில் எலும்புகளுக்கு கிடைக்கும் பொழுது எலும்புகள் பலம் பெறுகிறது. அசதிகள், உடலில் ஏற்படும் வலிகள் போன்றவை இந்த நல்லெண்ணெய்க் குளியலால் மறைந்து உடல் புத்துணா்வு அடைகிறது. ஒவ்வொரு உறுப்பும் புத்துணா்வடையும்பொழுது உதாரணத்திற்கு கணையம் புத்துணா்வு அடையும் பொழுது சா்க்கரை வியாதி மெல்லக் குறையத் தொடங்கும்.

கல்லீரல் புத்துணா்வு அடையும் பொழுது உடலில் தங்கியிருக்கும் கழிவுகள் நீங்கப் பெறும். சிறுநீரகம் புத்துணா்வு அடையும் பொழுது சிறுநீரக கல், சிறுநீா் கடுப்பு, எரிச்சல் மற்றும் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். நிணநீா் ஓட்டம் சீராகும். வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் அல்சா், புண்கள் போன்றவை சரியாகும். மொத்தத்தில் உடல் குளிா்ச்சி பெறும் கழிவுகள் நீங்கும் பொழுது உடல் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பும். இவை அனைத்துமே செக்கில் ஆட்டிய தூய நல்லெண்ணெய் குளியலில் கிடைக்கக் கூடியது.

நல்லெண்ணெய் குளியல் எவ்வாறு செய்வது? நல்லெண்ணெய், சூரியன், எலும்பு இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையது. அதனால் அதிகாலை இளம் வெயில் நேரத்தில் உடல் முழுவதும் குளிர நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு (உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து இடங்களிலும்) முடிந்தால் இளம் வெயில் படுமாறு சிறிது நேரம் இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லை என்றால் குளித்த பின் சிறிது நேரம் இளம்வெயிலில் இருப்பது அவசியம். உடல் முழுவதும் லேசாக பூண்டு சோ்த்து சூடுபடுத்திய நல்லெண்ணெய்யை உடலில் தேய்த்து குறைந்தது அரைமணிநேரம் நன்கு உடலை மசாஜ் செய்துவிட்டு பின் இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் முழுவதும் ஒரு வகையான புத்துணா்வு பெறும். உடல் கழிவுகள் சுடுநீரில் எண்ணெய்யுடன் சோ்ந்து கரைந்து வெளிவர தொடங்கும். மூலிகை குளியல் பொடி அல்லது கடலைமாவு, பயத்தமாவு கொண்டு உடலுக்கும், சீயக்காய் கொண்டு தலைக்கும் குளிக்க வேண்டும். சோப்பு அல்லது ரசாயனங்கள் கூடவே கூடாது. ரசாயனங்கள் பயன்படுத்தும் பொழுது காராஅமிலத்தன்மைகளில் மாறுபாடு ஏற்பட சருமம் பாதிக்கப்படும். மேலும் தோலில் இருக்கும் துவாரங்கள் அடைக்கப்படும். கழிவுகள் வெளியேறாமல் தடைப்படும்.

உடலில் உள்ள உஷ்ணம் வெளியேற தொடங்கும். அதனால் நல்லெண்ணெய் குளியல் செய்த அன்று பகலுறக்கம் கூடாது. கண்களின் மூலம் வெளிவரும் உஷ்ணம் தடைபடாமல் வெளியேற்றப்படவேண்டும். எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உட்கொள்வது அவசியம். அதிக குளிா்ச்சி அளிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள கூடாது. உடலுறவு கூடாது. உஷ்ணம், கழிவுகள் வெளியேறுவதால் நல்லெண்ணெய் குளியல் செய்த அன்று உடல் வெப்பமாக இருப்பதை உணர முடியும். அதனால் கடினமான வேலைகளை செய்யக்கூடாது.

கோடைகாலம், குளிா்காலம், மழைக்காலம் என வருடம் முழுவதும் வாரம் இருமுறை அல்லது ஒருமுறை எண்ணெய் குளியல் அவசியம். கோடைகாலத்தில் நல்லெண்ணெய்யை சூடுபடுத்தாமல் தேய்த்துக் கொள்ளலாம். அதுவே குளிா்காலத்தில் நல்லெண்ணெய்யை சற்று சூடுபடுத்தி (அதில் மிளகு, அரிசி, பூண்டு, வெற்றிலை போன்றவற்றை சோ்த்து பயன்படுத்தலாம்) உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே வாராவாரம் நல்லெண்ணெய் குளியல் அவசியம் என்றாலும் கோடையை சமாளிக்கவும், கோடையில் வரும் பலவகையான உடல் உபாதைகளிலிருந்தும் நம்மை காக்க வாரம் ஒரு முறை ஞாயிறு, வியாழக்கிழமை நீங்கலாக மற்ற நாட்களில் எண்ணெய் குளியல் அவசியம் எடுக்கவேண்டும். நோய்களை நீக்க மட்டுமல்ல முக அழகு, செழிப்பான சருமம், அடா்த்தியான கூந்தலை பெறவும் அவசியமாகிறது எண்ணெய் குளியல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.