செவிலியர், சமூக ஆர்வலர், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் போன்ற பன்முகத் திறமைக் கொண்டவர், கிலோனா மணிமொழி. அவரைச் சந்தித்து பேசியதிலிருந்து..
"" நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே திண்டுக்கல்லில்தான். அப்பாவுக்கு கொத்தனார் வேலை.
என் அம்மா மிக அழகாக பாடுவார். அதைக்கேட்டுக் கொண்டே இருக்கலாம். இப்போதும் என்னுடன் பயணிக்கும் தோழிகள் "எப்படி நீ இவ்வளவு தைரியமாக இருக்கிறாய்?' என்று கேட்பதுண்டு. அப்படிப்பட்ட தன்னம்பிக்கை, மனவலிமை, கொஞ்சம் பாடும் குரல் என அனைத்தும் அம்மா தந்த ஊட்டச்சத்து தான்.
சென்னையில் செவிலியர் பட்டப்படிப்பின் நிறைவாண்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சொர்க்கமான ஒரு சிறிய கிராமத்தில் களப்பணி கற்றுக் கொள்ள அழைத்துச் சென்றார்கள். அப்போது எனக்குள் தோன்றியது நாம சேவை செய்ய வேண்டிய களம் நோயாளிகள் தேடி வரும் மருத்துவமனை அல்ல, யாரிடமும் சொல்ல முடியாத வேதனைகள் நிறைந்த மக்கள் வாழும் கிராமப்புறங்கள் தான் என்று. அதன் பிறகு எம்.ஏ.ஆங்கிலம், எம்.ஏ.சமூகவியல் படித்தேன். என் வாழ்க்கையை ஒரு சமூகப் பணியாளராகத் தொடங்கினேன்.
இன்றும் என் வாழ்நாளின் பெரும்பகுதி சமூகம் சார்ந்த பிரச்னைகள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்,பெண்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம், குழந்தைகள் கல்வி, மனநலம், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சார்ந்த திட்டங்களில் நான் பணியாற்றும் அனுபவங்கள் தான் என்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது எனத் திடமாகச் சொல்லுவேன்.
பட்டிமன்றப் பேச்சாளராக என் பயணம் தொடங்கி 11ஆண்டுகளாகின்றன. கொஞ்சம் பாடுவேன் என்பதால் அப்போது மிகப் பரபரப்பான பேச்சாளராக இருந்த என் உடன்பிறந்த தங்கை கனிமொழி என்னை இத்துறைக்குள் அறிமுகம் செய்து வைத்தார். என் முதல் மேடையே சமூகப் பிரச்னைகளை நகைச்சுவை வடிவில் நயம்படச் சொல்லும் பூபாளம் பிரகதீஸ்வரன் நல்கிய வாய்ப்பு என்பது எனக்குப் பெருமை.
பாட்டு பட்டிமன்றங்களின் மூலம் இலக்கியம், இலக்கணம், நம் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைத் தாங்கிச் செல்லும் பட்டிமன்ற முன்னோடிகள், இலக்கிய வாதிகள், பேராசிரியப் பெருமக்கள், முனைவர்கள் ஆகியோரது மேடைகளில் பயணித்துக் கொண்டிருப்பது என் வாழ்நாள் பொக்கிஷம். ஏனெனில் இயல், இசை, நாடகம் என்பது தான் நம் முத்தமிழ் இயலுக்கும், நாடகத்திற்கும் இடையில் தமிழன் இசையை வைத்ததின் நோக்கம் அதன் முக்கியத்துவம் மட்டுமே. மரணமே வந்தாலும் மேடையில் தான் உயிர்; பிரிய வேண்டும் என்பது தான் ஒவ்வொரு கலைஞனின் ஆசை அது தான் என் ஆசையும் கூட.
ஏனெனில் இசைப் பட்டிமன்றம் எனது உயிரில் கலந்தது. நான் சிறுவயதில் எங்கள் வீட்டில் குறும்புத் தனமாகப் பேசினாலும், வெளியில் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவள். அதனாலேயே பள்ளிக்காலத்தில் பாடல், பேச்சு, நடிப்பு, கவிதை எதையும் வெளிக்காட்டியதில்லை. அதன் பிறகு செவிலியர் பட்டப்படிப்பு பயிலும் போது தான் அத்தனைத் துறைகளிலும் என்னை ஈடுப்படுத்திக் கொண்டேன்.
படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தமே இல்லை. ஆர்வமும், விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கை இருந்தால் போதும் உடனே இல்லாவிட்டாலும் ஒரு நாள் உலகம் நம்மைத் தேடிவரும்.
இணையத்தில் எனக்கெனத் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 7வருடங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் இளம் விதவைகள் படும் வேதனைகளை பாவேந்தர் பாரதிதாசனின் வார்த்தைகளுடன், "வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்திற்காக வாலியின் வலிமைமிக்க வரிகளுக்கு, இளையராஜா இசை உயிர்கொடுத்து, ஜானகி அம்மாள் பாடிய "அழகு மலராட.. அபிநயங்கள் கூட' என்ற பாடலை நான் பாடினேன்.
நிகழ்வு முடிந்த பிறகு கைம்பொண்ணான தங்கையின் வாழ்ககையை எண்ணிக் கண்ணீரை அடக்க முடியாமல் ஒடிவந்த 60வயது முதியவர் நான் சிறிதும் எதிர்பாராத வேளையில் என்னை நோக்கிக் கும்பிட்டுக் கொண்டே என் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து அழுது கொண்டே. " அந்த முத்துமாரி ஆயா சொன்னது போல இருந்தது தாயி. என் சமூகத்தின் படி விதவைகளுக்கு மறுமணம் செய்யக்கூடாது. ஆனால் நான் செய்து வைப்பேன். என் குல தெய்வம் மீது சத்தியம்'' என்று ஆணித்தரமாக அவர் சொன்னதும் தான் அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லூரியின் தாளாளர் என்றதும் எனக்கு மகிழ்வதா? நெகிழ்வதா என்ற சங்கடம் அதைப்போல மறுமணம் செய்து வைக்கப்பட்ட சகோதரி இன்று இனிய இல்லறத்தில் இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
எத்தனையோ ஜாம்பவான்கள் நிறைந்த இத்துறையில் ஏதோ ஒரு சிறிய மாற்றத்திற்கு அடித்தளமாவது நாம் அமைக்க வேண்டியது நமது கடமை என்பதை அப்போது கற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து என் ரசிகப் பெருமக்கள் விரும்பும் பாடல்களில் அதுவும் ஒன்று. அனைத்துத் தொலைக்காட்சி சிறப்புப் பட்டிமன்றங்களில் பேசும் போது சில குறிப்பிட்ட உரையாடல்கள் பிடித்துப் போய் அதை பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்வூட்டியதும் உண்டு.
விருதுகள் நிறைய வாங்கி இருந்தாலும் குறிப்பிடும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தின் சமூக சேவைச் செம்மல் விருது, புதுக்கோட்டை மாவட்ட அளிவலான குழந்தைகளுக்கான சிறந்த சமூக சேவகி விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகளும், பட்டங்களும் கிடைத்துள்ளன.
கரோனா ஊரடங்கின் போது சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, இலங்கை, கனடா உள்ளிட்ட நாடுகளில் இணையவழிப் பாட்டுடன் பேச்சு ஆகியவை வாழ்வில் மறக்க முடியாதது.
திருமணம் முடிந்து தற்போது கீரனூரில் வசித்து வருகிறேன் அதனால் சிலர்; கீரனூரின் "கீரடம் கிலோனா' என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.