சிறந்த கல்வி இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியவர். பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு வளர்ச்சி மற்றும் விளம்பர திட்டமிடுபவர், புத்தகங்களுக்கு மொழிப்பெயர்ப்பு செய்பவர், "பேச்சி டேர்ம்ஸ்; டேல்ஸ் லிட்டரரி' கன்ஸல்டன்சியின் நிறுவனர். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்தான் வேலூரில் வசிக்கும் முனைவர்- ஆர்.லட்சுமிப்ரியா. அவரிடம் பேசியதிலிருந்து:
""புத்தகங்கள் தான் என்னுடைய உண்மையான நண்பன், அதனுடன் பயணிப்பதே என் வாழ்க்கையின் குறிக்கோள். தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும்போது அந்த நூலின் ஆசிரியர் உபயோகித்த வட்டார வழக்கு மொழிக்கு சமமான, அதே சமயம் பிறமொழி பேசுபவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதவேண்டும்.
நமது மண்ணின் பழக்க வழக்கங்கள், கலாசாரம் அதன் நுண்ணிய உணர்வு கெடாமல் மற்ற கலாசாரங்களை பின்பற்று வோருக்கும் புரியும் வண்ணம் சொற்களை கொண்டு வருதல் வேண்டும். இது மிகவும் சவாலானது என்றே கூறலாம்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவே என் கனவும். எனவே நல்ல பிறமொழி கதைகளை, புத்தகங்களை மொழி பெயர்க்கிறேன்.
"கனலி' எனும் இலக்கிய இணைய தளத்தில் "நீலம் தோய்ந்த புதினம்' எனும் ஆங்கில நாவலை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளேன். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் பல கதைகள் உள்ளன. இவர்களுக்கு சமுதாயத்தைப் பார்த்து உரத்த குரலில் கேள்வி கேட்கும் ஆசையும் இருக்கிறது. இதற்கு ஒரே வழி பேனா முனைதான்.
எழுத்து சுதந்திரம் உள்ள நம் நாட்டில் தான் நினைப்பதை எங்கே எழுதுவது? யாரை அணுகுவது? எவ்வளவு செலவாகும்? பேரறிஞர்கள் மத்தியில் எழுதுவது எப்படி? இவை அனைத்து வினாக்களுக்கும் பதில் கொடுக்க விரும்பி தொடங்கியது தான் எங்களுடைய "பேச்சி டேர்ம்ஸ்; டேல்ஸ்' நிறுவனம்.
பெண்கள் தங்கள் வலிமையை அதிகரித்து கொள்ளவும் தாங்கள் ஒரு போகப் பொருள் அல்ல-தங்களுக்கும் திறமை உண்டு என்பதை எந்த வயதிலும் நிரூபிக்கவும் ஒரு பாதையை நாங்கள் காட்டுகிறோம். குறிப்பாக பெண்களிடையே இருக்கும் திறமையை கண்டறிந்து அவர்களை எழுத்தாளர்களாக்கி அவர்களின் நூல்களை பிரசுரித்து மக்களின் கைகளை அடையச் செய்கிறோம்.
ஏதேனும் சிலர் செய்யும் தவறினால் கிராமங்களில் படித்து முடிக்கும் முன்னே பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. கணவனை இழந்த பெண்களின் மேல் முட்கள் வீசப்படுகின்றன. கணவனால் புறக்கணிக்கப்பட்ட பெண் மற்ற பெண்களால் புறம் பேசப்படுகிறாள் இளம் குழந்தைகள் காமுகர்களால் கசக்கப்படுகிறார்கள். இது போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த நிறுவனத்தின் கதாசிரியர்களால் தீர்வு சொல்லமுடிகிறது.
இந்த கால இளைஞர்கள் கதைப் புத்தகங்கள் படிப்பதில்லை. அதற்கு காரணம் மொழிப்பற்று இல்லாத காரணமும் கடினமான மொழி வளமைமையும் தான் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட சில நபர்களுக்கு தேன் கலந்து உடலுக்கு நன்மை பயக்கும் மருந்தை கொடுப்பது போல், புதுமையாக இளைஞர்கள் எளிதில் படிக்க, சிறியதாக தற்போதைய ரசனையில் கதைகளை கொண்டு செல்கிறோம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, பூடான் போன்ற நாடுகளில் இலக்கியம் பற்றி உரையாற்றியுள்ளேன்.
இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் வசிக்கும் மாணவர்களின் உள்ளிருக்கும் படைப்பு தன்மையை கொண்டு வரும் இளம் வயது பேராசிரியையாக உள்ளேன். நெதர்லாந்தைச் சேர்ந்த ஆதியுலகம் எனும் மாத இதழ்களிலும் தமிழ்நாட்டில் "ஒம் சக்தி', "வெற்றி முரசு' எனும் மாத இதழ்களிலும் எழுதி வருகிறேன். மகளிர் தினத்தன்று பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.