சின்னத்திரை மின்னல்கள்!: நிஜ சம்பவங்களையே எழுதுகிறேன்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அழகி' தொடர் மூலம் சின்னத் திரையில் நடிகையாக அறிமுகமானவர் லிடியா பால்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அழகி' தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லிடியா பால்.
இவரது நிஜப்பெயரைக் காட்டிலும் "அழகி' அப்சரா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை அடையாளம் தெரியும். அந்தளவிற்கு அப்சரா என்ற பெயர் இவருடன் ஒட்டிக் கொண்டதால், தனது பெயரை அப்சரா என்றே வைத்துக் கொண்டார். பல துறைகளில் வித்தகரான அப்சரா, கதைகள் எழுதுவதிலும் வல்லவர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "விதி' தொடருக்கு இவர்தான் கதை எழுதியிருந்தார். இதைத் தவிர, சொந்தமாக பொட்டிக் ஒன்றையும் நடத்தி வருகிறார். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:
""பூர்வீகம் கேரளா. ஆனால், நான் சிறு வயதாக இருக்கும்போதே சென்னையில் செட்டில் ஆகிவிட்டோம். சின்ன வயதிலிருந்தே கதை எழுதுவது மிகவும் பிடிக்கும். பொதுவாக, நான் கற்பனையாக எதையும் எழுதுவதில்லை. என்னைச் சுற்றி உள்ள மனிதர்களையும், உண்மை சம்பவங்களையுமே அடிப்படையாகக் கொண்டு எனது கதாபாத்திரங்களை அமைக்கிறேன். இதுவரை நிறைய கதைகள் எழுதியுள்ளேன். அதன்மூலம்தான் சன் டிவியில் ஒளிபரப்பான "விதி' தொடருக்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, நடிக்கத் தொடங்கினேன். சில தமிழ் தொடர்களில் நடித்திருந்தாலும், இதுவரை தமிழில் நான் எதிர்பார்ப்பது போன்ற கதைக்களம் எதுவும் அமையவில்லை. அதனால், தற்போது மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் "மழவில் மனோரமா' வில் ஒளிபரப்பாகும் "ராக்குயில்' எனும் தொடருக்கு கதை எழுதி, அதில் நடித்தும் வருகிறேன்.
பொதுவாக தொடர்களில் வரும் நாயகிகள் எப்போதும் அழுதுக் கொண்டே இருப்பது போன்று கதை எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. நிஜத்தில் சந்தோஷமும், துக்கமும் கலந்ததுதானே வாழ்க்கை. எனவே, சின்னத்திரையைப் பொருத்தவரை பெண்களுக்கான இடமாக இருப்பதால், சந்தோஷங்களைப் பதிவு செய்வது போலவே, பிரச்னைகள் ஏற்படும் போது பெண்கள் அதை எப்படி தைரியமாக எதிர்கொண்டு கடந்து வரவேண்டும் என்பதையுமே என் கதைகளில் சொல்ல விரும்புகிறேன். தமிழில் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.
சினிமாவை தவிர்த்து வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததில் அமைந்ததுதான் என்னுடைய பொட்டிக். ஷூட்டிங் இல்லாத நாள்களில் பெரும்பாலும் பொட்டிக்கில்தான் பொழுதுகளை கழிப்பேன்'' என்றார்.