வெற்றி பெறுவது சுலபமல்ல!
""அர்ஜுனா விருது பெற்றபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த சந்தர்ப்பத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை'' என்று இந்திய மகளிர் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா கூறினார்.
""அர்ஜுனா விருது பெற்றபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த சந்தர்ப்பத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை'' என்று இந்திய மகளிர் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா கூறினார்.
""ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கரங்களால் பெருமைக்குரிய அர்ஜுனா விருது பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிறந்த விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த என்னுடைய பெற்றோர், பயிற்சியாளர்கள், சக வீராங்கனைகள் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
என்னுடைய பயிற்சியாளர் ஹேமந்த் பென்ட்ரே . விடியோ கால் மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தபோது, இந்த விருதைப் பெற்றதன் மூலம் அடுத்து நான் பங்கேற்கும் போட்டிகளில் இன்னும் திறமையாக விளையாடி வெற்றிப் பெற்று இந்த நாட்டிற்குப் பெருமை தேடி தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
விளையாட்டுத் துறையில் எந்த விளையாட்டாக இருந்தாலும், பயிற்சி பெற அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஆடத் தொடங்கியவுடன் வெற்றி கிடைப்பது அத்தனை சுலபமல்ல. கடினமான முயற்சிக்குப் பின்னரே நம்முடைய திறமையை வெளிப்படுத்தி இடம் பிடிக்க முடியும் இதற்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் குஜராத் ஆகிய அமைப்புகள் எனக்களித்த ஒத்துழைப்பு போல் மத்திய அரசு விளையாட்டுத் துறையும் எனக்கு ஆதரவளித்ததை குறிப்பிட்டாக வேண்டும்.
2021 - ஆம் ஆண்டைப் பொருத்தவரை என்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த மறக்க முடியாத ஆண்டாகும். இந்திய மகளிர் டென்னிஸ் அசோசியேஷன் பட்டியல்படி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளை பெற்றதோடு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்றது, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சானியா மிர்சாவுடன் இரட்டையர் பிரிவில் சேர்ந்து ஆடியது போன்றவை மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.
இருப்பினும் கரோனா பாதிப்பு என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களை போட்டிகளில் பங்கேற்க விடாமல் முடக்கியது வருத்தமான விஷயமாகும். தடுப்பூசி செலுத்திய பிறகும் விதிமுறைகளின்படி வீட்டிற்குள் தங்க முடியவில்லை. அடுத்தடுத்துப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும் போதெல்லாம் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதாயிற்று.
சர்வதேச விமான சேவையும் குறைவாக இருந்ததோடு, பயண கட்டணமும் அதிகம் என்பதால் என்னைப் போல் பலரும் உடனடியாக இந்தியா திரும்பமுடியவில்லை. இதனால் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இந்திய பிரதமர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு மிகப்பெரிய மனக்குறையாகும்.
கரோனா இரண்டாவது அலை காரணமாக அமெரிக்காவில் நடந்த டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனதும் வருத்தத்தைத் தந்தது. விளையாட்டுத் துறையின் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. இன்றைய இளம் பெண்களும், ஆண்களும் அவரவர் தகுதிக்கேற்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற முன் வர வேண்டும். உங்களுடைய முயற்சிகள் வெற்றிப் பெற்று விருதுகள் பெற்று நம்முடைய தேசத்திற்கு பெருமைத் தேடி தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்'' என்கிறார் அங்கிதா ரெய்னா.