மகளிர்மணி

உணவியலும் உளவியல் தீர்வும்!

""பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் தங்குவது அனைவரின் இயல்பு நிலைக்கு மாறானது.

ஜி.விஜயகுமார்

""பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் தங்குவது அனைவரின் இயல்பு நிலைக்கு மாறானது. இந்த சவாலால் ஏற்படும் மனஉளைச்சலும் சலிப்பும் மக்களின் உணவுமுறையில் மாறுதலை ஏற்படுத்துகின்றன. உணர்ச்சிவயத்தில் அதிக உணவை உண்பதும், ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை அதிகம் உட்கொள்வதும் தீவிர மற்றும் பாதகமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும். ஆராய்ச்சியாளர்கள் இந்த மன அழுத்தம் மற்றும் உணவு முறைகளால் ஏற்படும் பின் விளைவுகளை ஆராய்ந்துள்ளனர். அவை உடல் பருமன் , இருதய தொடர்பான நோய்கள், நீரிழிவு மற்றும் கொழுப்பு அளவின் மாற்றம் போன்றவற்றிற்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர்'' என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் ல.பானுப்ரியா மணிகண்டன். இவர் மேலும், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""மன அழுத்தம் அதிக உடலியல் தேவைகளை உருவாக்குகிறது, இதனால் அதிக ஆற்றல், ஆக்ஸிஜன் மற்றும் ரத்த சுழற்சியின் காரணமாக வளர்சிதை மாற்ற இணை காரணிகளின் (வைட்டமின் மற்றும் தாதுக்கள்) தேவையானது. சராசரியை விட அதிக அளவு தேவைப்படுகிறது. மன அழுத்தத்தின்போது மக்களுக்கு ஊட்டச்சத்தான உணவுத்திட்டம் அவசியமாகிறது.

ஆனால், அவர்கள் ஆரோக்கியமற்ற சத்து குறைவான தங்களுக்கு விருப்பதிற்கேற்ப உணவுகளை உட்கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்தவையாகவே உள்ளன. இந்த மன அழுத்தத்தால், ஒரு நபரின் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், உண்ணும் உணவின் அளவையும் பாதிக்கிறது. இது மேலும் ரத்த அழுத்தம், மூளை ரத்த ஓட்டம் மற்றும் ஹார்மோன்களில் எதிர்மறை விளைவினை உண்டாக்குகின்றது.

குறிப்பாக, செரோடோனின் அளவை குறைக்கிறது மற்றும் கார்டிசோல் அளவை ரத்தத்தில் அதிகரிக்கச்செய்கிறது. மகிழ்ச்சி ஹார்மோனான செரோடோனின் குறைவதால் இனிப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள தூண்டுகிறது.

மேலும் தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, பதற்றம், குறைந்த நினைவாற்றல் மற்றும் கவனமின்மை ஏற்பட காரணமாகிறது. கார்டிசோல் அதிகரிப்பால் எடை கூடுதல், உயர் ரத்த அழுத்தம், தூக்கத்தை சீர்குலைப்பதும், எதிர்மறையான மனநிலையை உண்டுசெய்தல், உடல் ஆற்றல் அளவைக் குறைத்தல் மற்றும் காலப்போக்கில் நீரிழிவுக்கும் பங்களிக்கிறது.

மன அழுத்ததை குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் புரதங்கள் , காம்ப்லெஸ் கார்போ ஹைட்ரேட் (நார்ச்சத்து), பாலிபினால்கள், வைட்டமின்கள் (சி, பி, ஈ), மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற கனிமங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன.

ஒமேகா-3 சத்துகள் சைவ மற்றும் அசைவ உணவுகளில் இருந்து தான் கிடைக்கிறது. இந்தச் சத்தின் முதன்மை ஆதாரமாக விளங்குவது கடல் சார்ந்த உணவுகள்தான். ஏனென்றால் கடல் பாசிகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இதன் வழியாகவே இந்தச் சத்து கடல் சார்ந்த உணவுகளில் அதிகம் காணப்படுகின்றன. ஒமேகா-3 நிறைந்த உணவுகளான கொழுப்பு மீன்கள் (கிழங்கான், கானாங்கெளுத்தி, கொய், மத்தி சூறை), இறால், நண்டு, கடல் சிப்பி, முட்டை போன்றவற்றை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சைவ உணவுகளில் நட்ஸ் மற்றும் விதைகள் (அக்ரூட், ஆளிவிதை, சியா விதை, பூசணி விதை, ஹெம்ப் விதை), ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் உள்ளது. காம்ப்லெஸ் கார்போ ஹைட்ரேட் உணவுகளான சிறு தானிய, பல தானிய வகைகளிலும், முழு தானிய ரொட்டி, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசியும் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும்போது அவை செரோடோனின் அளவை அதிகரித்து உங்களின் மன நிலையை மகிழ்ச்சியாகவும், தளர்வின்றியும் வைக்க உதவுகிறது.

மன அழுத்தம் உங்கள் உடம்பில் உள்ள பி வைட்டமின்களை குறைக்கும். இது நரம்பு மற்றும் ரத்த ஓட்ட அமைப்புகளுக்கு அவசியமானது. இந்த குறைபாடு மேலும் நீங்கள் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையைக் குறைக்கிறது. பி வைட்டமின்கள் நிறைந்த, வாழைப்பழங்கள், கீரைகள், நட்ஸ் வகைகள், விதைகள், இறைச்சி, மீன் மற்றும் பால் போன்றவைகளை உட்கொள்ளுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

வைட்டமின் சி ஒரு நோய்யெதிர்ப்பு சக்தியாக மட்டும் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். மேலும் இது மூளையின் திறனை மேம்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. மிக சிறந்த ஆக்சிஜனேற்றத்தடுப்பானாகவும் உள்ளது. வைட்டமின் சியின் குறைபாடு ரத்தத்தில் மன அழுத்த ஹார்மோன்களின் அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, நெல்லிக்காய், கீரை வகைகள், தக்காளி, குடை மிளகாய், மற்றும் ப்ரோக்கோலி போன்றவைகளை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

தாதுக்களான மெக்னீசியம், தசைகளின் தளர்வுகளுக்கும், பதற்றத்தை குறைக்கவும், ஹார்மோன் மற்றும் உடலின் ஆற்றல் உற்பத்தி செய்ய அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. இது நிறைந்த உணவுகளான பீன்ஸ், பசலைக் கீரை, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, முளைக்கட்டிய பயறு வகைகள் மற்றும் முழு தானியங்கள் முதலியனவற்றையும் தினமும் உண்ணுவது அவசியம். அதுபோன்று செலினியமும் மிக சிறந்த ஆக்சிஜனேற்ற தடுப்பான், இது நிறைந்த ஆதாரங்களான இறைச்சி, முட்டை, கடல் உணவுகள், பூண்டு, பட்டாணி, சோயா பொருட்கள் மற்றும் காளான் போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதன் மூலமாக நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரித்து , செல்களின் சேதத்தையும் குறைக்க இயலும்.

மேலும் மன அழுத்தம், அது தொடர்பான உணவுக்கான ஆய்வில் கால்சியமும் சிறந்த பங்கு வகிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்சியம் நிறைந்த உணவுகளான பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், சியா விதை, சூரியகாந்தி விதை, எள்ளு விதை, உலர்ந்த அத்திப்பழம், கடுகுக் கீரை, வெண்டைக்காய் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவைகளையும் உணவுப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம் என்கிறது.

சமீபத்திய ஆய்வில் கீரை வகைகள் மற்றும் வண்ண காய்கறிகள் (குடைமிளகாய், முட்டைகோஸ், கத்தரிக்காய்) போன்ற உணவுகளில் காணப்படும் தாவர சேர்மங்களான பாலிபினால்கள் மற்றும் கரோட்டின்கள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் என கூறுகிறது. கூடுதலாக உங்கள் மன நிலை மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்குவகிக்கிறது, நல்ல பாக்டீரியா நிறைந்த உணவினை (பால், தயிர், மோர், புளித்த உணவுவகைகளான கூழ், இட்லி) உட்கொள்ளவதன் மூலம், மன சோர்வினை நீக்கி மூளையின் செயல்திறனை மேம்படுத்த இயலுமென்று ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்வதால் உடனடியாக குறிகிய காலத்திற்கு மூளையில் (டோபோமின்) புத்துணர்வை அளிக்கலாம். ஆனால் இது காலப்போக்கில் மூளை செயல்பாட்டை பாதிக்கிறது.

இதில் முக்கியமாக அதிக காபி/ டீ பருகுவதினால் உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரித்து தூக்கமின்மையை உண்டாக்குகிறது. மாற்றாக மன அழுத்தம் உடைக்கும் உணவுகளான டார்க் சாக்லேட் 20கி-30கி ஒரு நாளில் எடுத்து கொள்ளலாம். சீமைச்சாமந்தி டீ, மூலிகை டீ மற்றும் க்ரீன் டீ பருகலாம் . க்ரீன் டீயில் எல்-தைனைன் புரதம் உள்ளது. இது மூளை சோர்வை குறைக்கிறது.

எனவே ஆரோக்கியமான உணவு என்பது நமது பல உடல்நலப் பராமரிப்பு பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாகும். ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சரியான உணவு திட்டமிடுவதினால், உங்கள் மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய இயலும். மேலும், இந்த தொற்றுக் காலத்தில் மக்கள் தினமும் உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகா போன்றவைகளை பின்பற்றி தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிப்பது எளிமையாகும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாய நிலத்தில் புதையல் கண்டெடுப்பு! தங்க நாணயங்களா?

சொல்லப் போனால்... உன்னாவ்... நீதிதேவன் மயக்கம்?

தமிழக மீனவர்கள் 3 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

தனியாா் மருத்துவ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: கேரள அரசு விரைவில் வரைவு அறிவிக்கை

மும்பை - தில்லி - கொல்கத்தா வழித்தடத்தில் 2026-இல் ‘கவச்’: ரயில்வே இலக்கு

SCROLL FOR NEXT