மகளிர்மணி

சாதனைக்கு திருமணம் தடையில்லை!

ம.முனுசாமி

"கஷ்டங்களை மறந்து ஒவ்வொரு பெண்ணும் தனக்குள்ள திறமையை வெளிக்கொண்டு வந்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும்' என்கிறார் "மிசஸ் இந்தியா குயின்' தமிழ்நாடு பட்டம் பெற்ற பானு கலைவாணி.

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள சங்கரன்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவரும், தற்போது கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்தவருமான பானு கலைவாணி  (33)அழகுக்கலையை சிங்கப்பூரில் பயின்றவர். கடந்த 14 ஆண்டுகளாகத் திரைத்துறையில் அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். பிரபல தமிழ், மலையாள பட முன்னணி நடிகைகள், பிரபல கிரிக்கெட்  வீரர் ஸ்ரீசாந்த்  உள்பட விஐபிக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும்  மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு சினிமாக்களில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக மலையாளம், கன்னட சினிமாவில் அதிகப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

நடிகைகள் பூர்ணா, நிக்கி கல்ராணி ஆகியோருக்கு அழகுக் கலை நிபுணராக இருந்து வருகிறார். பல நாடுகளுக்கு பயணித்து அங்குள்ள பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சியும் அளித்து வருகிறார்.  கேரளத்தின் சிறந்த அழகுக்கலை பயிற்சியாளர் விருது, இளம் பெண் தொழில் முனைவோர் விருது, அனைத்திந்திய அழகு மற்றும் சிகை அலங்கார சங்கத்தின் "மேக்-அப் மாஸ்டர் ஆஃப் செளத் இந்தியா' விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில்  பெங்களூரில்  நடைபெற்ற" மிசஸ் இந்தியா குயின் செளத்' போட்டியில் பங்கேற்று  பட்டத்தையும் வென்றுள்ளார். பானு கலைவாணியின் பெற்றோர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள். 10 -ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளவர் அழகுக் கலை மீதுள்ள ஆர்வத்தால் அழகுக்கலை பயிற்சி பெற்று, அந்தத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே இந்தப் பட்டத்தையும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார். 

பானு கலைவாணி  கூறியதாவது:

""பிரபலங்களுக்கு மேக் அப் போட்டு அவர்களை மேடை ஏற்றி அழகு பார்த்த என்னை நண்பர் ஜிபின் "அழகும், திறமையும் உள்ள நீ ஏன் அழகி போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது' என்று கேட்டதுடன் நான் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடும் செய்தார்.  முதன் முறையாக அழகிப் போட்டியில் தமிழகம் சார்பாக பங்கேற்க விண்ணப்பம் செய்தேன். கையில்லாத ஆடைகளை இதுவரை அணிந்ததில்லை. உயரமான செருப்பு அணிந்து பழக்கமில்லை. ஆனால் இவையெற்றையெல்லாம் செய்ததால் தான் போட்டியில் பங்கேற்க முடியும். புதிய ஆடை அணிவதும், மேடையில் உயரமான  செருப்பு அணிந்து நடக்க வேண்டும் என்பதால் இரவு பகலாக பயிற்சி செய்தேன். போட்டி நடைபெறும் முந்திய நாள் வரை ஓட்டல் வரவேற்பறையில் நடந்து பழகினேன். 

முதன் முறையாக மேடை ஏறினேன். பெங்களூரில் நடைபெற்ற மிசஸ் இந்தியா குயின் செளத் போட்டியில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 21 பேர் பங்கேற்றனர்.  இதில் தமிழ்நாட்டிலிருந்து  4 பேர் கலந்துகொண்டோம். அழகி போட்டியில் கலந்து கொள்ளும் போது நமது திறமையை, வெளியுலக அறிவு தொடர்பான கேள்விகளையும் எழுப்பினார்கள். தமிழகம் சார்பாக இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதாக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்ட போது  ஜெயித்தது நானா என நம்பவில்லை.  ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது. இறுதிப்போட்டிக்குத் தேர்வான எனக்கு "மிசஸ் இந்தியா குயின்' தமிழ்நாடு என்ற பட்டமும்,  சிறந்த விழியழகை உடையவர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. 

ஒவ்வொருப் பெண்ணுக்குள்ளும் கட்டாயம் ஒரு திறமை ஒளிந்திருக்கும். பலரும் தங்களது கஷ்டத்தினால் திறமையை மறந்து விடுகின்றனர். அதுபோன்று இல்லாமல் கஷ்டங்களை மறந்து தங்களது திறமையை உலகத்துக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சமையல், ஆடை வடிவமைப்பு, அலங்காரம் உள்பட பல்வேறு திறமைகள் பெண்களுக்குள் இயல்பாகவே இருக்கின்றன. திருமணம் உள்பட பல்வேறு காரணங்களால் பெண்கள் தங்களது திறமைகளை மறந்து விடுகின்றனர். பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பின் தான் சாதிக்க முடிகிறது. என்னுடைய சாதனையும் அப்படி நடந்தது தான். 

வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி அளிப்பது,  வாழ்வில் முன்னேற விரும்பும் பெண்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று அவர்களுக்குத் தேவையான கைத்தொழில்களை சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும். இந்த அழகி பட்டம் என்பது என்னுடைய தன்னம்பிக்கையின் அடையாளம். இன்னும் இது போன்ற ஏராளமான அடையாளங்கள் தேசிய, உலகளவில் தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்''  என்றார் பானு கலைவாணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT