மகளிர்மணி

சேமிப்பே உயர்வு தரும்!

சந்திரமெளலி


சாந்தி துரைசாமி. பிரபல மசாலாப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலாவின் இயக்குநர். அதன் ஓர் அங்கமான சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலர். சக்தி மசாலாவின் வெற்றிக் கதையில் இவரது பங்களிப்பும் கணிசமானது. இன்னொரு பக்கம், மிகுந்த சமூக அக்கறையுடன் சக்திதேவி அறக்கட்டளை மூலமாக இவர் ஆற்றிவரும் சமூக, மனித நேயப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்த ஆண்டுக்கான "அவ்வையார்' விருதினை தமிழக அரசு இவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது. அவரைச் சந்தித்தோம்:

உங்கள் குடும்ப பின்னணி குறித்து?

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஈரோட்டில்தான். எங்கள் அப்பா ஈரோட்டில் ஒரு சிறிய மெஸ் நடத்தி வந்தார். கொங்கு மண்டலத்தில் பெண்கள் பூப்பெய்திய பின் ஒரு வருடத்திற்குள் திருமணம் முடித்துத் தந்துவிடும் காலம் அது. நமக்குத் திருமணம் நடக்கிறது என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத 14 வயதில் எனக்கு 1976-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் தான் என் வாழ்வின் திருப்புமுனை. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், பேரன், பேத்திகளும் உள்ளனர். எனது கணவரின் குடும்பமும் வியாபாரக் குடும்பம். பெருந்துறை அருகிலுள்ள திருவேங்கடம்பாளையம் புதூர் கணவரின் சொந்த ஊர். எங்கள் குடும்பத்திலேயே எனது கணவர்தான் முதல் பட்டதாரி.

சக்தி மசாலா நிறுவனத்தின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பு குறித்து?

தொழில் விரிவாக்கம் நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து ஈரோடுக்கு குடிபுகுந்தோம். தொழிலில் அவர் மூலப் பொருட்களை கொள்முதல் செய்வதிலும், பிற ஊர்களுக்குச் சென்று விற்பதிலும் கவனம் செலுத்தினார். நான் அவர் கொள்முதல் செய்த பொருட்களை சுத்தம் செய்து, அரைத்து, பேக்கிங் செய்து விற்பனைக்குத் தயார் செய்யும் வேலையை கவனித்துக் கொள்வேன். இல்லறமோ, தொழிலோ இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுப்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறோம்.

வீட்டுச் செலவுக்கு 2000 ரூபாய் கொடுத்தால், நான் அதில் 500 ரூபாய் மிச்சம் பிடித்து, வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் மூலம் சேமித்தேன். வீட்டில் என்ன கஷ்டம் வந்தாலும் இந்த 500 ரூபாய் வங்கிக் கணக்கில் மாதாமாதம் சேர்ந்துவிடும். நாங்கள் வசித்தது 10-க்கு 16 அடி அறை. 500 ரூபாய் வாடகை போக குடும்பச் செலவு ஆயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடும். யாருடைய கவனத்திலும் பதியாமல் சிறுகச்சிறுக வளர்ந்த இந்த சேமிப்பு நாங்கள் இருப்பதற்கு ஒரு நிலையான இடத்தை வாங்கிக் கொடுத்தது.

மஞ்சள் வியாபாரத்தில் என் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகமானது. கூட்டுக் குடும்பத்தில் நிறைய வேலைகள் இருந்தாலும், எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொள்ள ஆட்கள் இருப்பார்கள். தனிக் குடித்தனம் வந்த பிறகு குடும்ப நிர்வாகத்தை நான் தனியாக பார்க்க வேண்டி இருந்தது. ஆட்கள் வைத்து பார்க்க வேண்டிய வேலைகளை ஆரம்பத்தில் நாங்களே பகிர்ந்து கொண்டு செய்தோம்.

சக்தி தேவி அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி?

எனக்கும் சரி, என் கணவருக்கும் சரி உதவ வேண்டும் என்ற எண்ணம் தானாகவே உருவானது. தொடக்கம் முதலே பலருக்கும் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். எங்கள் சேவைகளை ஒருங்கிணைத்து செயல்பட ஓர் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற அடிப்படையில் எனது மகள் பெயரில் 1997-இல் சக்திதேவி அறக்கட்டளையை உருவாக்கினோம். சக்திதேவி அறக்கட்டளை, சக்தி மருத்துவமனை, சக்தி மறுவாழ்வு மையம், சக்தி மனவளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி, வழிகாட்டி, தளிர், விருட்சம் திட்டங்கள் மற்றும் உயர் கல்வி உதவி, சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கை பேரிடர் நிவாரணம், சேவை அமைப்புகளுக்கு நிதியுதவி என பல்வேறு வகைகளிலும் சிறப்பாக இயங்கி வருகிறது.

கிராமப்புற ஏழைப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி என்ன?

எங்கள் நிறுவனம் ஆரம்பித்த நாட்களிலிருந்தே அருகிலுள்ள கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவருகிறோம். இன்றும் எங்கள் நிறுவனத்தில் 70% பெண்களே பணிபுரிகின்றனர். 26 வருடங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி ஒருவர் வந்து வேலை கேட்டபோது, என் கணவர் அவருக்கு பணம் கொடுத்தார். ஆனால் அவர், "பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் கொடுக்கும் பணம் சில நாள்களே செலவுக்குப் பயன்படும். எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள், என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அதற்கான சம்பளம் கொடுத்தால் போதும்" என்றார். என் கணவர், "முதலில் ஒருத்தர், இரண்டு பேருக்கு வேலை கொடுக்கலாம்; எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம். அதன் பிறகு மேலும் பலரை சேர்த்துக் கொள்ளலாம் என்றார். தற்போது ஆண்களும், பெண்களுமாய் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இங்கு பணி புரிகிறார்கள்.

மன வளர்ச்சிகுன்றிய, ஆட்டிசம் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி குறித்து?

எங்கள் மகள் சக்திதேவிக்கு அப்போது படிக்க இடமில்லை என்று பள்ளிகள் மறுத்தன. ஆசிரியரை வீட்டிற்கே வரவழைத்து சக்திதேவிக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தோம். அவளுக்கு மற்ற குழந்தைகளோடு கலந்து பழகி, விளையாடி, கல்வி கற்கிற அனுபவத்தை வழங்க முடியாத ஏக்கம் இன்னமும் எங்களுக்கு இருக்கிறது. எங்கள் மகளுக்குக் கிடைக்காத கல்வி மற்ற பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானது தான் இந்த சிறப்புப் பள்ளி.

2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி இன்று 250 மாணவர்களைக் கொண்ட ஒரு விருட்சமாக வளர்ந்து சமுதாயத்திற்கும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் இலவச சேவை செய்து வருகிறது.

மாற்றுத் திறனாளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வியல் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 2018-இல், சக்தி தொழிற்பயிற்சி பிரிவு மூலமாக கூடை பின்னுதல், பொம்மை செய்தல், அலங்காரப் பொருட்கள் செய்தல் போன்ற கைத்திறன் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும், கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ வசதி வழங்குவதற்காக, துவக்கப்பட்ட சக்தி மருத்துவமனை கடந்த 19 ஆண்டுகளாக இலவச சேவை செய்து வருகிறது. அங்கு, ஆய்வக சேவைகளும், மாத்திரைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.

அரசுப்பள்ளி மாணவர்கள் நலனில் கூட அக்கறை காட்டுகிறீர்களே?

அரசு பள்ளி நூலகங்களில் நிறைய நூல்கள் இருந்தும், தனியாக நூலகர்கள் இல்லாததால் புத்தகங்களை மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே, சக்திதேவிஅறக்கட்டளை மூலமாக 3000 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு பள்ளிகளுக்கு தனியாக டாக்டர் அப்துல் கலாம் பெயரில் நூலகம் அமைத்து தனி நூலகர்களையும் பணியமர்த்திடும் திட்டம் தற்போது 6 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 41 பள்ளிகளுக்கு நூலக அலமாரிகள் மற்றும் புத்தகங்கள் கொடுத்துள்ளோம். மேலும், பெருந்துறை அரசு மேல் நிலைப் பள்ளியில் 450 சதுரஅடியில் டிஜிட்டல் நூலகம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம் மூலமாக ஈரோடு பகுதியில் 41 பள்ளிகள் பயன் பெற்று வருகின்றன. மேலும் கடந்த 21 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையியும், அரசுப்பள்ளிகளில் பயின்று 10, 12-ஆம் வகுப்பில் முதல் இரு இடங்களைப் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வருகிறோம். பூமியை பசுமையாக்கும் முயற்சியில் "தளிர்' தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் இலவச மரக்கன்றுகளை சக்தி தேவி அறக்கட்டளை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT