முகப்பு
மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 45: ஒளிமயமான எதிர்காலம்!

வேதவல்லிக்கு வானமே இடிந்து தலையில் விழுந்தாற் போல இருந்தது. நெஞ்சு படபடத்தது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. பேய் அறைந்தாற்போல அமர்ந்திருந்தாள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

வேதவல்லிக்கு வானமே இடிந்து தலையில் விழுந்தாற் போல இருந்தது. நெஞ்சு படபடத்தது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. பேய் அறைந்தாற்போல அமர்ந்திருந்தாள்.

இவளின் எதிரில் இருந்த டாக்டர் செளமியாவுக்கு, எதைச் சொல்லி அவளைத் தேற்றுவது என்று புரியவில்லை. முதல் முதலில் இதுபோன்ற விஷயங்களை நோயாளிகளிடம் சொல்லும்பொழுது இத்தகைய உணர்ச்சிகளை அவர்கள் வெளிக்காட்டுவது இயற்கை என்றாலும்,  வேதவல்லி மிக அதிகமாக இடிந்துப் போனாள் என்றே சொல்ல வேண்டும்.

""வேதவல்லி மேடம், நீங்கள் இந்த அளவுக்குக் கலங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய வலது மார்பகத்தில் தோன்றியுள்ள புற்றுநோய்க் கட்டி, அபாய எல்லையைத் தாண்டவில்லை. ஆரம்பத்திலேயே நீங்கள் என்னிடம் வந்ததினால், சிகிச்சையை உடனே ஆரம்பித்து விடலாம்''.

""வலது மார்பகத்தை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லுகிறீர்களே டாக்டர்''  வேதவல்லி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

டாக்டர் செளமியா, பொறுமையுடன் விளக்கத் தொடங்கினாள். ""இந்தக் கட்டி மேலும் மற்ற பாகங்களுக்குப் பரவாமல் தடுக்கவே இதைச் செய்கிறோம். இதனால் உங்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை'' என்றாள்.

சென்னை விமானநிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வேதவல்லி அவளைச் சுற்றி நடக்கும் காட்சிகள் எதிலும் கவனம் செலுத்தாமல், வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

ஏன் தனக்கு மட்டும் விதி இப்படிக் கொடூரமான நிகழ்வுகளை அரங்கேற்றுகிறது? 

ஐம்பது வயதுக்குள் கைம்பெண்ணாக்கி வேடிக்கைப் பார்த்தது. அன்பான கணவன் ராகவனைச் சாலை விபத்தில் பலி வாங்கியது. ஒரே பெண் காயத்திரி அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்தில், மேற்படிப்பில் ஈடுபட்டிருக்கிற  சமயத்தில், அடுத்த சவுக்கடியாக, மார்பகத்தில் புற்றுநோய்.

கடவுளே, இதில் பிழைத்து எழுவேனா? ஒரே பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வேனா? நெஞ்சம் துடித்தது, கண்களில் ஆறாகப் பெருகியக் கண்ணீரை யாரும் பார்க்கும் முன் அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.

காயத்திரிக்கு இருபது நாட்களில் பரீட்சை, அதனால் அவளால் சென்னைக்கு வர முடியவில்லை. தாயின் நிலை அவளை நிலைய குலைய வைத்திருந்தது. வேதவல்லிக்கும், மகளைப் பார்க்க வேண்டும் என்கின்ற அவா மிகுந்திருந்தது. 

டாக்டர் செளமியாவிடம், அனுமதி பெற்றுக் கொண்டு, அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு, இரண்டு வாரங்களில் திரும்பி வந்து, அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

பாஸ்டன் நகரத்தின் எல்லையை விமானம் தொட்டாலும், அவள் மனதில் பயமும், குழப்பமுமே மண்டிக் கிடந்தது.

""அம்மா'' என்று ஓடி வந்து காயத்திரி, வேதவல்லியைக் கட்டிக் கொண்டாள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேதவல்லி மகளைப் பார்க்கிறாள். காயத்திரி, கொஞ்சம் பூசினாற் போல வெயிட் போட்டு, முன்பு இருந்ததைவிட மேலும் அழகு கூடி இருந்தாள்.
மகளை அணைத்துக் கொண்ட வேதவல்லி, உணர்ச்சி மிகுதியில் விம்மத் தொடங்கினாள்.
""அம்மா, என்ன சின்னக் குழந்தையாட்டம், இன்னும் ஒரு வருடத்தில் படிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்துவிடப் போகிறேன். என்னுடைய செல்லக்குட்டி அம்மா, ஆரோக்கியமாகப் புற்று நோயிலிருந்து விடுபட்டு, என்னோடு ஆனந்தமா வாழப் போறாங்க'' என்றாள்.
பாஸ்டனில், ஒரு பிளாட்டில் தன்னுடைய வகுப்புத் தோழியோடு காயத்திரி தங்கி இருந்தாள். 
காயத்திரியின் தோழி மார்கிரெட்டும், வேதவல்லியிடம் அன்பைப் பொழிந்தாள். இருவருமாகச் சேர்ந்து, இரவில் படித்துக் கொண்டு, மற்ற வேளைகளில், வேதவல்லியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார்கள்.  அன்று காயத்திரியும், மார்கிரெட்டும் கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். பரீட்சைக்காகப் பணத்தைக் கட்டிவிட்டு, ஹால்டிக்கெட்டை வாங்க வேண்டியிருந்தது.
""அம்மா, இன்றைக்குப் பகல் உணவைப் பக்கத்தில் இருக்கும் உணவகத்திற்குச் சென்று சாப்பிடும்மா''.
""ஐயோ, தனியாக எப்படிச் செல்வேன்?''
""அம்மா, நீ என்ன சின்னக் குழந்தையா? எம்.ஏ., படித்தவள். நீ தனியாகப் போயி சாப்பிடறே''.
""சரி'' என்று தலையை ஆட்டுவதைத் தவிர வேதவல்லியால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.
பரீட்சைக்குப் படித்துக் கொண்டு எனக்கும் சவரட்சனை செய்து கொண்டு இருப்பவளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கிளம்பி விட்டாள். மைக்ஸ் ஃபாஸ்ட் ஃபுட் என்ற அந்த உணவகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.
வேதவல்லி தயங்கியபடியே உள்ளே நுழைந்தாள். தனக்கு வேண்டிய உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டு, பிறகு கவுண்டரில் பணத்தைச் செலுத்திவிட வேண்டும். கையில் கொடுக்கப்படும் பில்லை, உணவுகளை வழங்கும் இடத்தில் கொடுத்தால், அதில் இருக்கும் எண்ணை அவர்கள் கூப்பிடும் பொழுது, அங்கே சென்று நம் சாப்பாட்டுத் தட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
வேதவல்லி, ஃபிரைட் ரைஸூம், பிரெஞ்ச் ஃபிரைஸூம் ஆர்டர் செய்திருந்தாள்.
வேதவல்லி, காலியான நாற்காலி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தாள். ஒரு இடத்தில் வேதவல்லியின் கண்கள் நிலைக்குத்தி நின்றன. என்ன இது? தான் காண்பது கனவா நனவா, கண்களைத் தேய்த்து விட்டு மீண்டும் பார்த்தாள்.
அந்தப் பெரிய ஹாலில் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த மேஜையில் எதிரும் புதிருமாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் அறுபது வயது மதிக்கப்படும் அளவில் ஒரு பெண்மணி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
இதில் என்ன அதிசயம் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.
அந்தப் பெண்ணின் முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தது. அவள் ஒரு நோயாளி என்று பார்த்ததுமே தெரிந்தது. அவளின் எதிரே இருந்த நாற்காலி காலியாக இருந்தது.
தன்னுடைய, உணவு அடங்கிய தட்டை எடுத்துக் கொண்டு தயங்கியபடியே அந்தப் பெண்ணின் எதிரே இருந்த இருக்கையை நோக்கி வேதவல்லி நடந்தாள்.
""எக்ஸ்கியூஸ் மி, நான் இங்கு அமரலாமா?'' என்றாள் வேதவல்லி.
"ஷுயூர்' என்றாள் அவள்.
தன்னுடைய உணவை வேதவல்லி மெதுவாகச் சாப்பிடத் தொடங்கினாள். எதிரே இருந்தவளின் தட்டை ஆராய்ந்தாள். பெரிய பர்கர் ஒன்றும், ஃபிரெஞ்ச் பிரைஸூம் இருந்தன. பக்கத்தில் ஒரு பெரிய கிண்ணம் நிறைய ஐஸ்கிரீம், பழத்துண்டுகளுடன் இருந்தன.
மெதுவாக, ""என் பெயர் வேதவல்லி'' என்றாள்.
""ஓ, நைஸ் டு மீட் யூ. என் பெயர் சோஃபியா, நீங்கள் இந்தியரா'' என்று கேட்டு முடிப்பதற்குள், அவளுக்கு மூச்சு வாங்கியது.

""இப்படி, பிராணவாயு சிலிண்டருடன் நீங்கள் சாப்பிட வந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சொன்னதில் ஏதாவது, தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்றாள் வேதவல்லி.

ஒருமுறை தன் மூச்சை, ஆழமாக வெளியே விட்டு, பிராணவாயுவை உள்ளே இழுத்த சோஃபியா பேச ஆரம்பித்தாள்.

""முதலில் சங்கடப்படாமல், என் முன்னே வந்து அமர்ந்ததற்கு நன்றி. மற்றவர்கள் எல்லாம் என்னை அவாய்ட் செய்துவிட்டனர்'' என்று சொல்லிச் சிரித்தாள். 

""எனக்கு நுரையீரலில் ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இதை பல்மனரி ஹைப்பர் டென்ஷன் என்பார்கள். இதனால் என்னுடைய நுரையீரல்கள் பலவீனமாக இருக்கின்றன. என்னால் சராசரியான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. என்னுடைய ஒரு நுரையீரலையாவது மாற்ற வேண்டும். அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களுடைய உறவினர்களின் ஒப்புதல் இருந்தால்தான் எனக்கு நுரையீரல் கிடைக்கும்''.

மீண்டும், ஒருமுறை பிராணவாயுவை உள்ளிழுத்தாள் சோஃபியா. ""அப்படி நுரையீரல் கிடைத்தாலும் அது என்னுடைய உடலுக்கு மேட்ச் ஆகணும், அப்படிப்பட்ட நுரையீரல் கிடைப்பதற்குள் என் நிலைமை மோசமாகி நான் இறக்கவும் கூடும். அதுவரையில் மோட்டுவளையத்தைப் பார்த்துக் கொண்டு என் வாழ்நாட்களை வீணாகக் கழிக்க நான் விரும்பவில்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரோடே, சினிமா பார்க்கப் போகிறேன், இப்படி வந்து சாப்பிடுகிறேன், நான் ஒரு கணக்கு ஆசிரியை, அதனால் ஆன்லைன் மூலம் ஊனமுற்ற குழந்தைகளுக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்கிறேன். என் உடல்நிலையைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், கடவுள் எனக்குக் கொடுத்த வாழ்நாட்களை நான் வீணடிப்பவளாக ஆகிவிடுவேன். ஒவ்வொரு நாளும் நான் விழிப்போடு எழுந்திருக்கும் பொழுது அது எனக்குக் கடவுள் கொடுத்தப் பரிசாக நினைக்கிறேன்'' என்றாள்.

வேதவல்லிக்குப் பிரமிப்பாக இருந்தது. தன் நிலையை, சோஃபியாவோடு  ஒப்பிட்டுப் பார்த்தபொழுது தான் எவ்வளவு கவலைப்பட்டு, வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு, வாழ்க்கையைத் துயர் மிகுந்ததாக ஆக்கிக்கொண்டு, மகளையும் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே தனியாகத் தன்னுடைய நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் பொழுதும், சோஃபியா எப்படி வாழ்க்கையின் கஷ்டமானக் கட்டத்தை, ஆக்கபூர்வமாக ஆக்கிக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணி வியந்தாள்.

அன்றைய அறிமுகத்திற்குப் பிறகு சோஃபியாவும், வேதவல்லியும் தோழிகளாகி விட்டனர். தன்னுடைய நோயைப் பற்றி சோஃபியாவுடன், வேதவல்லி பகிர்ந்துக் கொண்டாள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக்கொண்டு, தங்களுக்கு எதிர்காலம் நம்பிக்கை உடையதாக, ஒளிமயமானதாக இருக்கும் என்று நம்பினர்.

காயத்திரிக்கு அம்மாவிடம் தெரிந்த இந்தப் பெரிய மனமாற்றம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது, நம்பிக்கையுடன் தன் தாயை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினாள்.

சோஃபியாவுக்கு புதிய மாற்று நுரையீரல் கிடைத்தது, வேதவல்லிக்கும் புற்றுநோய் கண்ட  மார்பகம் நீக்கப்பட்டது. ஆரம்பநிலை, அதுவும் புற்றுப் பரவாமல் இருந்ததால், கீமோ தெரபி கூட தேவைப்படவில்லை.

சோஃபியாவும், வேதவல்லியும் தினமும் ஆன்லைன் மூலம் பேசிக் கொண்டனர், வீடியோ காலில் பார்த்தும் கொண்டனர்.

வேதவல்லிக்கு, சோஃபியா ஒரு ரோல் மாடலாக ஆகிப்போனாள். தன்னைவிடப் பத்து வயது பெரியவளான சோஃபியா, அவளுக்கு நல்வழிக் காட்டிய பெரியோராக ஆகிப்போனாள். சோஃபியாவின் சிநேகிதம் வேதவல்லியைப் புது மனுஷியாக்கிவிட்டது, வாழ்க்கையை அதன் வழியில் வாழவும் கற்றுக் கொடுத்துவிட்டது.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

(குறள் எண்: 442)

பொருள்: வந்துள்ள துன்பத்தைப் போக்கி மேலும் துன்பம் வராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளல் வேண்டும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.