மகளிர்மணி

64  வயதிலும்  துள்ளும் இளமை!

பூா்ணிமா

ஆண்டுதோறும்  வயது கூடும்போது  இளமையும், உடல்வலிமையும்  குறைவது இயற்கை. ஆனால், ஹாசன்  மாவட்டம்  சக்லேஷ்புரைச் சேர்ந்த  பவானி ஜோகிக்கு,  64 வயதான  போதிலும்  இளமையோ  உடல் வலிமையோ  குறையவே  இல்லை.  அண்மையில்  ஸ்ரீலங்காவில் நடந்த  35- ஆவது  வருடாந்திர  மாஸ்டர்ஸ்( ஓபன்)  அத்லெடிக்  சாம்பியன்ஷிப்  போட்டியின்  போது கலந்து கொண்ட  பவானி  ஜோகி,  3 தங்கம்,  1 வெள்ளி,  1 வெண்கலப்  பதக்கங்களைப் பெற்று சாதனைப்  படைத்துள்ளார்.  அதுமட்டுமல்ல  செவிலியரான  இவர் விளையாட்டு  வீராங்கனையாகவும்  இருப்பதால் இதுவரை  200-க்கும்  மேற்பட்ட  விருதுகளை வாங்கி  குவித்துள்ளார்.

இந்த சாதனைகளைப்  படைக்க இவர்  எடுத்துக் கொண்ட  சிரமங்கள்  கொஞ்ச நஞ்சமல்ல. சிறு வயது முதலே  விளை யாட்டுத் துறையில்  ஆர்வமாக  இருந்த  பவானி  ஜோகி, செவிலியர்  பயிற்சியை  முடித்து  பணியில்  அமரும் வரை, இவரது  விளையாட்டு ஆர்வத்திற்கு  வீட்டில்  தடை  விதித்திருந்ததால்,  திருமணத்திற்குப்  பின்னரே  விளையாட்டுப்  போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

1982 - ஆம்  ஆண்டு  முதன்முறையாக  மைசூரு  கே.ஆர்.  மருத்துவமனையில்  செவிலியராக  பணியில்  சேர்ந்த இவர், ஓராண்டுக்குள் திருமணமாகி,  அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு பெண் குழந்தைக்கு  தாயான  பின்னரே  மீண்டும்  விளையாட்டுப்  போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார்.  இவரது கணவரும்  அவரது  சகோதரியும்  இவருக்குப் பெரிதும்  ஊக்கமளித்தனர். 

விளையாட்டுத் துறையில்  புருஷோத்தம்  படகன்னய்யா என்ற  உடற்பயிற்சி ஆசிரியரிடம்  பயிற்சிப் பெற்று  வந்த பவானி  ஜோகி,  மங்களூருவில்  உள்ள  வென்லாக் மருத்துவமனைக்கு  மாற்றலாகி  10 ஆண்டுகள்  அங்கு பணியாற்றியபோது, பணிச்சுமை  காரணமாக  காலையில்  பயிற்சிப் பெற போதிய  நேரம்  கிடைக்காததால்  சிறு  அளவில்  ஜாகிங்  மற்றும்  உடற்பயிற்சிகளை செய்து  வந்தார்.  கூடவே  அவரது  மகளை  வளர்க்கும்  பொறுப்பும்,  வீட்டுப் பணிகளும் அதிகரிக்கவே விளையாட்டுப்  போட்டிகளில்  பங்கேற்பதற்கு  முற்றுப்புள்ளி  வைக்க  வேண்டியதாயிற்று.  ஆனால், இவரது  உயர் அதிகாரிகளும்,  நண்பர்களும்,  குடும்ப  உறுப்பினர்களும்  கொடுத்த  ஊக்கத்தினால்  செவிலியர்  பணியுடன், விளையாட் டுப் போட்டிகளிலும்  கலந்து கொள்ளத் தொடங்கினார்.

பவானி  ஜோதி  விளையாட்டில்  மட்டுமல்ல,  கர்நாடகாவில்  பிரபலமான  யக்ஷகானா  நடன கலைஞர்  உப்பாலா  கிருஷ் ணா மாஸ்டரிடம் பயிற்சிப் பெற்று  1996- ஆம்  ஆண்டு  மாநில அளவில்  நடைபெற்ற  செவிலியர் மாநாட்டில்  "பப்ருவாகன   விஜயா'  என்ற கதையில்  அனுசல்லா  என்ற பாத்திரத்தில்  நடித்து  பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.  தொடர்ந்து  மங்களூருவில்  நடந்த  கராவளி  திருவிழாவில் நடந்த  யக்ஷகானா  நிகழ்ச்சியில்  பங்கேற்றார்.

நாற்பதாவது  வயதில்,   ஏழாம் வகுப்பு  படித்துவந்த தன்னுடைய  மகளுடன்  சென்று  நீச்சல் பயிற்சிப்  பெறத் தொடங்கிய  பவானி ஜோகி,  நான்கு மாத  பயிற்சிக்குப்  பின் தேசிய  மகளிர்  நீச்சல்  போட்டியில்  கலந்து கொள்ளும்  வாய்ப்பைப் பெற்றதோடு,  40 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கான  தரவரிசை  போட்டியில்  மூன்று  தங்கபதக்கங்களை  வென்றார்.  தற்போது  மங்களுரு  நகராட்சியின்  நீச்சல்  குளத்தில்  பயிற்சியாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார்.

1998- ஆம்  ஆண்டுக்குப்  பின்  ஒபன்  மாஸ்டர்ஸ்  போட்டிகளில்  கலந்து  கொண்ட  பவானி ஜோகி,  100 தங்கம்,  90 வெள்ளி  பதக்கங்களைப்  பெற்றுள்ளார்.  2017- ஆம்  ஆண்டு  பணியிலிருந்து  ஓய்வு  பெற்றவர்,  தன் பேரக் குழந்தைகளை  கவனித்துக் கொள்வதற்காக  மைசூரு  திரும்பினார்.  இரண்டாண்டுகள்  கழித்து,  60 வயதுடன்  வாழ்க்கை முடிந்து போவதில்லை.  தொடர்ந்து  விளையாட்டுப்  போட்டிகளில்  ஈடுபட  போகிறேன்  என்று நண்பர்களிடம்  கூறியவர்,  மீண்டும்  மங்களூரு  திரும்பி  வந்து  தனிமையில்  வசிக்கிறார்.  போட்டிகளில்  கலந்து கொள்வதற்கு  என்னுடைய  வயது  தடையாக  இல்லை என்று  கூறுவதோடு தொடர்ந்து  பரிசுகளைப்  பெற்று  வரும்  பவானி ஜோகி,  வயதான  பெண்களுக்கு  மட்டுமின்றி  இளம்  பெண்களுக்கும்  முன்னுதாரணமாக  திகழ்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT