மகளிர்மணி

உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 15: பூமிப்பந்தும் கைவசமாகும் !

நம் தொடரில் வரும் பெண்களின் கதைகள் கற்பனையா? அல்லது நிஜ வாழ்வின் பெண்களா? இவ்வளவு நல்லவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களா?

கோதை ஜோதிலட்சுமி


நம் தொடரில் வரும் பெண்களின் கதைகள் கற்பனையா? அல்லது நிஜ வாழ்வின் பெண்களா? இவ்வளவு நல்லவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களா? எப்படி உங்களைச் சுற்றி மட்டும் நல்லவர்கள் இருக்கிறார்கள்?  என்று  கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார் ஒரு வாசகி. 

இந்தத் தொடரில் நாம் காணும் பெண்கள் கமலா டீச்சர் முதல் விசாலாட்சிப் பாட்டி வரை அனைவரும் நான் நேரில் கண்டு வியந்த பெண்களே. இன்றைக்கும் நாட்டில் நல்லவர்கள் தான் அதிகம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்பவர்களும் இப்படித் தான் வாழவேண்டும் என்ற நல்ல கொள்கைகளோடு எளிமையாக வாழ்பவர்களும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.

எந்த ஒரு மனிதரும் நூறுசதவீதம் நேர்த்தியானவர்களாக இருக்க முடியாது. நிறைகளும் குறைகளும் கலந்தே மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களிடம் நிறைகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதுவும் பயிற்சியில் வருவது தான். இந்தப் பெண்மணி எனக்கு எழுதியிருக்கும் கடிதத்தையே பாருங்கள். முகம் தெரியாத இதுவரைப் பார்த்திராத ஒருவரை வாழ்த்துவதும் உற்சாகப் படுத்துவதும் சிறந்த நற்பண்பே அல்லவா?

ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம். நாம் படித்த அனைத்து நற்பண்புகளையும் நம்மால் பின்பற்ற முடியாமல் இருக்கலாம். நம் மனதை நெகிழ்த்தும் ஏதாவது ஒரு நல்ல அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து நாம் அதைப் பயிற்சி செய்தால் போதும். அதுவே நாளடைவில் நம்மை உயர்த்தும். இந்தக் கடிதத்தைப் படித்த பொழுது இனி யாரையும் மனதார வாழ்த்த வேண்டும். இனிய சொற்களால் உற்சாகப் படுத்த வேண்டும் என்று பயிற்சி செய்யத் தொடங்கியிருக்கிறேன். இதற்காக  இந்த வாசகிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.                    

எங்கள் தெருவில் கீரை கொண்டு வந்து விற்பவர் தங்கம்மா. கீரையோடு சில காய்களும் கொண்டு வருவார். காலையில் வரும் பொழுதே வழக்கமாக காய்களோ கீரையோ வாங்கும் வீடுகளுக்குக் கொடுத்து விட்டு தெருமுனையில் ஏடிஎம் வாசலில் வேப்பமர நிழலில் அமர்ந்து விடுவார். தேடி வந்து அவரிடம் கீரை வாங்குபவர்களும் உண்டு.  தங்கம்மா பள்ளிக் கூடமே போகாதவர். என்றாலும், உலகப்புகழ் பல்கலைக்கழகங்கள் கூட கற்றுக் கொடுக்காத வியாபார உத்திகளை அவரிடம் கற்றுக் கொள்ளலாம். மனிதர்களைக் கையாள்வதற்கான கலையில் ஆளுமை மேம்பாட்டு வகுப்புகளில் படிப்பதைக் காட்டிலும் அதிகம் கற்றுக் கொள்ள முடியும்.  

அன்றாடங்களில் சிறுசிறு உரையாடல்களில் நாம் பயன்படுத்தும் தவறான சொல்லோ  நடவடிக்கையோ நமக்கு எதிராகத் திரும்பி விடலாம். நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடக் கூடும். "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்று திருவள்ளுவரின் குறளை நமக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நேர்மறையான சொற்களைப் பேசுவதனால் கேட்பவருக்கும் நமக்குமான நட்போ உறவோ பலப்படும். 

கொள்ளை நோய் தொற்றும் அதனால் வந்த ஊரடங்கும் எல்லாரையும் பாதித்தது என்றாலும் சிறு வியாபாரம் தொழில் செய்வோரை வெகுவாக பாதித்தது. தங்கம்மாவுக்கு கீரை வியாபாரம் போனால் வாழ்வாதாரம் ஒன்றும் இல்லை. கஷ்ட ஜீவனம் தான். அவரிடம் கீரை வாங்கிய யாரும் அவரைத் தேடவில்லை. தங்கம்மா என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. 

இணைய வழியில் ஆன்லைன் கடைகளுக்கு என்னைப் போலவே பலரும் மாறினார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அடடா... சுத்தமான காய்கறிகள், அன்றாடம் காகிதப் பைகளில் நேர்த்தியாக அடைக்கப்பட்ட காய்கறிகளும் பழங்களும் அதிகாலையில் வீட்டு வாசலுக்கு வந்து விடுகின்றன. அன்றன்றைக்கு வேண்டியதை நமக்குப் பிடித்ததை அன்றைக்கே வாங்கிக் கொள்வது எனக்குப் பிடித்திருந்தது. கீரை முதல் மளிகை சாமான்கள் அரிசி வரை அனைத்தையும் இப்படியே வாங்கிக் கொள்ளத் தொடங்கினேன். இரண்டு மணி நேரத்தில் நாம் கேட்டதை வீட்டுக்குக் கொண்டு வரும் சேவை இன்னும் அதிக வசதியாக இருந்தது. 

நாளடைவில், எனக்கு வேண்டியதை வாங்குவது என்பதைத் தாண்டி வியாபாரி தரும் சிறப்பு சலுகைகளைப் பெறுவதற்காக எனக்கு வேண்டியிருக்கிறதோ இல்லையோ அவர்கள் குறிப்பிட்டிருக்கும் தொகைக்கு பொருள்களை வாங்குவது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். தேவைக்கு அதிகமாக ஒரு கிலோ தக்காளி வாங்க வேண்டிய இடத்தில் மூன்று கிலோ தக்காளி வாங்கிக் கொண்டேன். இணையத்தில் படத்தைப் பார்த்து இதுவரை நான் வாங்கியிராத சாப்பிட்டிராத பழங்களை வாங்கினேன். சுவைக்க முடியாமல் பிடிக்காமல் சில வீணாகின. 

சில நேரங்களில் நான் விரும்பிய பொருளுக்குப் பதில் வேறு ஏதாவது வந்துவிட்டால் ஓர் அழைப்பில் எனக்கான பொருளை உடனே எடுத்து வந்து கொடுத்தார்கள். ஒரு வருடத்திற்கும் மேல் இப்படியே ஆன்லைன் வர்த்தகத்தில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். ரொம்பவும் வசதியாகப் போய்விட்டது. ஊரடங்கெல்லாம் முடிந்து இயல்பு நிலை திரும்பி விட்டாலும் ஆன்லைனில் நான் அடங்கித் தான் போய்விட்டிருந்தேன். 

ஒருநாள் அமாவாசை என்பதால் வாழைக்காய் கேட்டிருந்தேன். வாழைக்காய் வரவில்லை. பூசணிக்காய் வந்திருந்தது. அதிலும் பாதியாக வெட்டிய வெள்ளைப் பூசணிக்காய். அன்றைக்கு வாழைக்காய் வேண்டும். இல்லாமல் போய்விட்டது. அலைபேசியில் அழைத்துப் புகார் தெரிவித்தேன். பூசணிக்காயை எடுத்துக் கொண்டு வாழைக்காய் வழங்கப்படும் என்று சொன்னார்கள். அப்போது காலை பத்து மணி. சரி, மற்ற சமையல் வேலைகள்  எல்லாம் முடிவதற்குள் வாழைக்காய் வந்துவிட்டால் கடைசியாக வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து வேலையைத் தொடங்கினேன். வாழைக்காய் வரவில்லை. நேரம் ஓடியது. மாலை நான்கு மணிக்கு மேல் வெட்டி வைத்திருந்த வெள்ளைப்பூசணிக்காய் கொழகொழவென கெட தொடங்கியிருந்தது. கண்முன்னே ஓர் உணவுப் பொருள் கெட்டுப் போவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. 

எனக்கு மனம் ஆறவில்லை. மீண்டும் நிறுவனத்தை அலைபேசியில் அழைத்து பூசணிக்காய் கெட்டுப் போய் விடுமே பொருள் வீணாகிறதல்லவா? என்று   கேட்டேன். என் புகாரை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் நிச்சயம் வாழைக்காய் வரும் என்றும் பூசணிக்காய்க்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை அதனால் அது பற்றி நீங்கள் கவலைப் படத் தேவையில்லை என்ற பதில் வந்தது. 

என்னிடம் பணம் பெறவில்லை என்பதால் ஒரு பொருள் அழுகிப்போவதைப் பற்றி நான் கவலைப்பட அவசியமில்லை என்று சொன்னதில் எனக்கு "சொரேல்' என்றது. என்னுடைய அக்கறை இவர்களுக்குப் புரியவில்லை. பணத்தை மட்டுமே கணக்குப் பார்க்கிறார்கள். அதோடு இன்றைக்கு எனக்கு வேண்டிய பொருள் நாளை வந்து சேரும் என்று அலட்சியமாக சொல்கிறார்கள். அந்த நேரத்தில் ஆன்லைன் பைத்தியம் எனக்குத் தெளிந்து விட்டது. 

 வாடிக்கையாளரின் தேவை பற்றியோ அவர்கள் என்ன நோக்கத்தில் பேசுகிறார்கள் என்பது பற்றியோ சிந்தனை இல்லாமல் வெறும் பணக்கணக்கு மட்டுமே பார்க்கிறார்கள். தங்கம்மா இப்படிப் பார்ப்பாரா? எத்தனையோ நாள் எனக்கு உடம்பு சரியில்லாத பொழுது இன்ன கீரை அல்லது இன்ன காய் சாப்பிட்டால் சரியாகி விடும் என்று அக்கறையாகச் சொல்வாரே? அவரை விட்டுவிட்டோமே என்று என் புத்தியில் உரைத்தது.

மறுநாள் காலை நான் தங்கம்மா உட்கார்ந்திருக்கும் ஏடிஎம் மரத்தடிக்கு அவரைத் தேடிக் கொண்டு சென்றேன். ஒரு வருஷத்தில் தங்கம்மா முகத்தில் முதுமை கூடி இருப்பதாகத் தோன்றியது. "எப்படி இருக்கீங்க? ஊரடங்கு நேரத்துல எப்படி சமாளிச்சீங்க?" கேட்டேன். நிமிர்ந்து பார்த்த தங்கம்மா, முகம் மலரச் சிரித்துக் கொண்டு, "வாம்மா. உன்னைப் பார்த்து எத்தனையோ நாளாச்சு. எனக்கென்ன தாயீ, கோடி ஜனம் கஷ்டப்படுது. என் கஷ்டம் பெரிசா?" முகத்தில் சிரிப்பு மாறாமல் சொன்னார்.

"நீ விரும்பிச் சாப்பிடும் பச்சை கத்திரிக்காய் இருக்கு கொண்டு போகிறாயா அம்மா?" வாஞ்சையோடு கேட்டார். "எனக்கு கத்தரிக்காய் பிடிக்கும்னு இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க?" உடனே நிமிர்ந்து பார்த்தவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என்னமா உன்னை இன்னிக்கு நேத்தா பாக்குறேன், இருபது வருஷமா பாக்குறேன். உன்னை மறந்துருவேனா?' என்றார் தங்கம்மா. எனக்கு அம்மா நினைவு வந்துவிட்டது. கத்தரிக்காயை வாங்கிக் கொண்டு நாளை காலை வீட்டுக்கு அரைக்கீரை கொண்டு வரச் சொல்லிவிட்டு வந்தேன். 

தங்கம்மா தன்னுடைய சொற்களால் எப்படி என்னை தன்வசமாக்கிக்கொண்டார் பாருங்கள். ஒரே உரையாடலில் ஆன்லைன் பெண்மணி என் மனதில் கசப்பை ஏற்படுத்தி விட்டதையும் கவனியுங்கள். மனிதர்களோடு கூடி வாழ வேண்டியவர்கள் நாம். பேசும் சொற்கள் உறவை நட்பை பணியிட கண்ணியத்தை நமக்கு ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு பேசத் தொடங்கினால் பூமிப்பந்தும் நம் வசமாகும்.

- தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT