இமாலயப் பெண்!
உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுக்காவில் உள்ள பஜகோலிஎன்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சுமலதா பஜகோலிக்கு (23) சிறுவயது முதலே மலையேறுவதில் ஆர்வம் அதிகமிருந்தது.
உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுக்காவில் உள்ள பஜகோலிஎன்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சுமலதா பஜகோலிக்கு (23) சிறுவயது முதலே மலையேறுவதில் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால் இவரது தந்தை பாபு தினக்கூலி தொழிலாளி. தாய் பிட்டு குடும்பத் தலைவி என்பதால் ஏழ்மையான குடும்ப சூழ்நிலை இவரது ஆசைக்கு தடையாக இருந்தது.
சுமலதா உடுப்பியில் உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி அரசு மகளிர் முதுநிலைக் கல்லூரியில் பிஏ (ஜர்னலிசம்) படித்து வந்தபோது, கல்லூரி வார்டன் சுசித்ரா சுவர்ணா, இவரது ஆர்வத்தை அறிந்து, உடுப்பியில் மலையேறுவதற்கு பயிற்சியளிக்கும் ஜெனரல் திம்மய்யா நேஷனல் அகாதெமி ஆஃப் அட்வென்ச்சர் அமைப்பில் சேரும்படி அறிவுறுத்தினார்.
வார்டனின் அறிவுறுத்தலின்படி சுமலதா மலையேறும் பயிற்சிப் பெற விரும்பினார். ஆனால் இவரது பெற்றோர் முதலில் ஒப்புதல் அளிக்க தயங்கினாலும், மகளின் பிடிவாதத்தையும், திறமையையும் உணர்ந்து அனுமதித்தனர்.
கல்லூரி நாட்களில் சுமலதாவின் பயிற்சி திட்டத்திற்கு தேவையான பணத்தை திரட்டுவது சுலபமாக இல்லை. இவரது விடாமுயற்சி வீண்போகவில்லை.
மலையேறும் பயிற்சிப் பெறுபவர்களுக்கு தீவிரமான உணர்வு, உடல் வலிமை, ஒழுக்கம் ஆகிய மூன்றும் முக்கியமாகும். முதலில் உயரம் குறைந்த மலைகள் மீது ஏற பயிற்சியளிக்கும் போதே சுமலதாவிடம் இந்த மூன்று தகுதிகளும் இருப்பதைக் கண்டேன். அவரது ஆர்வத்தை பார்த்து வியந்த நான் மேற்கொண்டு கடினமான உயரமான மலைகள் மீது ஏற பயிற்சி அளிக்கத் துவங்கினேன் என்று சர்வதேச அளவில் மலையேறுவதில் சான்றிதழ் பெற்றவரும், ஜெனரல் திம்மய்யா நேஷனல் அகாதெமி ஆஃப் அட்வென்ச்சர் நிர்வாகி ராஜேந்திரா ஹசபாவி, சுமலதாவின் திறமையை பாராட்டியுள்ளார்.
2017- ஆம் ஆண்டு முதன்முறையாக இமயமலைப் பகுதியில் 14,801 அடி உயரமுள்ள சிக்கந்தர் சிகான் மலை மீது ஏறி சாதனை புரிந்த சுமலதா, அடுத்து 2019 -ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 11,500 அடி உயரமுள்ள சோனா மார்க் கஜிவாஸ் டேபிள் டாப் மலைமீது ஏறிமுடித்தார். தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு இந்தியன் மவுண்டெய்னரிங் பவுன்டேஷன் ஏற்பாடு செய்த இந்திய எல்லைக்குட்பட்ட 15,407 அடி உயரமுள்ள பஹல்காம் மவுண்ட் சன்செட் பாயின்ட் மலைமீது 10 பெண்கள் உள்பட 30 பேர் கொண்ட குழுவுடன் மலை ஏறி சாதனை புரிந்துள்ளார்.
தன் வாழ்நாள் கனவை அடுத்தடுத்து நிறைவேற்றி வரும் மகிழ்ச்சியில் உள்ள சுமலதா தன்னுடைய சாதனையைப் பற்றி என்ன கூறுகிறார்:
"" பெரும்பாலும் மலையேறுவதில் ஆண்களே சாதனை படைத்து வந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. நிறைய பெண்கள் துணவுடன் பயிற்சிப் பெற்று இமயமலை மட்டுமின்றி சர்வதேச அசாமில் பிரபலமான உயரமான மலைகள் மீதும் ஏறி இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி பெருமையை நிலைநாட்டி வருகின்றனர்.
மலையேறுவதில் இப்போது ஆண்- பெண் பாகுபாடு இல்லை. உடல் வலிமையுடன் மனவலிமை அவசியம். இவை மலையேறும் போது ஏற்படும் உடல் நலக்குறைவு, மன அழுத்தம், பயம் போன்றவைகளை சமாளிக்கவும் திடீரென ஏற்படும் பருவ மாறுதல், பனிப்புயல், பணிச்சரிவு போன்றவைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் அளிக்கும்.
என்னைப் பொருத்தவரை சில சமயங்களில் மலையேறும்போது ஆண்களைவிட வேகமாக ஏறும் உடல் வலிமை பெற்றிருந்தேன். மலையேறத் தொடங்கி குறுகிய காலத்தில் மூன்றுமுறை மலையேறும் வாய்ப்புகளைப் பெற்றேன். கிராமத்தில் என்னை இமாலயப் பெண் என்று அழைப்பதை கண்டு என்னுடைய பெற்றோர் பெருமைப்படுகின்றனர். என்னை விட திறமைசாலியான பெண்கள் மலையேறுவதில் பயிற்சிப் பெற்று சாதனை படைத்து வருவது பெருமையாக இருக்கிறது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் பெண்களுக்கு தைரியமும், மனவலிமையும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்'' என்கிறார் சுமலதா.