ஓவியர், பாடகர், வயலின் கலைஞர், நம்பிக்கைகளை விதைக்கும் பேச்சாளர், வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் வலியுடன் துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்பவர் என்று பன்முகம் கொண்டிருக்கும் நூர்ஜலீலாவுக்கு பிறக்கும் போதே இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழ் இல்லை.
இரண்டு கைகளில் விரல்கள் இல்லை. வெகுவாகச்சுருங்கிய உள்ளங்கைகள். "நடக்கவும் முடியாது... விரல்களில்லாத போது எப்படி எழுதுவது... படிப்பது 'என்று கலங்கிய நிலையில், பெற்றோர் ஆதரவுடன் இன்று ஒரு சாதனைப் பெண்ணாக அவதாரம் எடுத்துள்ளார் நூர் ஜலீலா.
பிறப்பால் வந்த எதிர்மறைகளை எப்படி நேர்மறையாக்கி, பிறருக்கு ஒரு முன்மாதிரியாக நூர் ஜலீலாவால் ஆக முடிந்தது ? அவரே சொல்கிறார்:
"இரண்டு கரங்கள் சேர்ந்தால்தான் கைதட்ட முடியும் .. ஒலி எழுப்ப முடியும். என்னால் கை தட்ட முடியாது. ஆனால் பிறர் என்னைப் பார்த்து கை தட்டும் அளவுக்கு முன்னேற முடிந்திருக்கிறது. அது நான், எனது பெற்றோர் செய்த பாக்கியம்.
எனக்கு உள்ளங்கைகள் இல்லை என்றாலும் உள்ளங்கை உள்ளவர்களுக்கு அழகாக மருதாணி போட்டுவிட முடியும். இல்லாததை அல்லது கிடைக்காததை எண்ணி வருந்துவதைவிட உள்ளதில் நிறைவடைந்து அதைக் கொண்டு முன்னேற வேண்டும். முயற்சி செய்தால் போதும்.... எல்லா தடைகளையும் கடந்துவிடலாம்.
நான் பல குறைகளுடன் பிறந்த போது என்னை பல மருத்துவர்களிடம் காட்ட நடையாய் எனது பெற்றோர் நடந்தார்கள். பிறந்து ஒன்பது மாதம் ஆனதும் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. நாளாக நாளாக தவழ ஆரம்பித்தேன் பிறகு நடக்கவும் தொடங்கினேன்.
ஆண்டுகள் கடக்க ... செயற்கை கால்கள் தயாரிப்பிலும் பல முன்னேற்றங்கள் யுக்திகள் அறிமுகமாயின. அதனால் எனக்கு நேரடி பயன் கிடைத்தது. பல சமயங்களில் செயற்கைக் காலின் தண்டு உடைந்துவிடும். வேறு கால் பொருத்தப்படும் வரை... அல்லது உடைந்த தண்டுப்பகுதி பழுது பார்க்கும் வரை என்னால் நடக்க முடியாது. வீட்டில்தான் இருக்க வேண்டும். அந்தத் தருணங்களில் நான் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். சில நாட்களில் சரியாகிவிடும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன்.
மற்ற குழந்தைகள் போல என்னால் அனைத்தையும் விரைவாக வசப்படுத்திவிட முடியாது என்று எனக்குப் புரிந்தது. கொஞ்சம் நாட்கள் பிடித்தாலும் என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைதான் என்னை முன் நடத்தியது.
"இப்படி சாப்பிடு... அப்படி நட' என்று எனது பெற்றோர் சொல்லிக் கொடுத்ததே இல்லை. தானாகக் கற்றுக் கொள்ளட்டும் என்று என்னை சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்.
அம்மா வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, குவளையை கையில் எடுத்து தண்ணீர் எடுத்து குடிப்பதைக் கண்ட அம்மா அப்படியே என்னை வாரி அணைத்துக் கொண்டார். போகப் போக இரண்டு கரங்களையும் சேர்த்து பென்சில், பேனா பிடித்து எழுத, ஓவியம் வரைய பழகினேன். அதுபோல வயலினும் கற்றேன். என்னால் மற்றவர்கள் வயலினை வாசிப்பது மாதிரி என்னால் வாசிக்க முடியாது. எனக்கு செளகர்யமாக எப்படி வைக்க முடியுமோ அப்படி வைத்து வாசிப்பேன். மேடைக் கச்சரிகளையும் நடத்தியுள்ளேன். பாடகி சித்ராவுடன் சேர்ந்து பாடியும் உள்ளேன். என் விதியை நானே எழுதுவேன் என்ற அளவுக்கு மனதில் தைரியம் வந்தது. எனது குறைகளை நான் பெரிதாகக் கருதுவதில்லை.
ஓவியங்கள் வரைந்து பல கண்காட்சிகளை நடத்தியிருக்கிறேன். நான், வீட்டில் நுழைந்ததும் செயற்கைக் கால்களை கழற்றி வைத்துவிடுவேன். வீட்டுக்குள் தவழ்ந்து செல்வேன். உணவுகளை நானே பரிமாறிக் கொள்வேன். பல பள்ளிகளில் சேர எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, சிஸ்டர் எலிஸபெத் என்னைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டதுடன்... தனது பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்.
அவரது கரிசனத்தில் கவனிப்பில் பள்ளியில் படித்தேன்.
தொடக்கத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளாத பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளேன். நான் இத்தனை தன்னம்பிக்கையுடன் வாழக் காரணம் என்னைக் கண்ணின் மணி போல பார்த்துக் கொண்ட அப்பா அப்துல் கரீம், அம்மா அஸ்மாபீ, அக்கா ஆயிஷாவும் தான்.
கேரளத்தின் திரூர்தான் சொந்த ஊர். தற்போது, கோழிக்கோட்டில் பொருளாதாரம் பட்டப்படிப்பு படித்து வருகிறேன். வயது 19 ஆகிறது. ஐஏஎஸ் தேர்வு எழுதணும், இமய மலை ஏறணும் என்று எனக்கு கனவுகள், லட்சியங்கள் இல்லாமல் இல்லை'' என்கிறார் நூர் ஜலீலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.