கதை சொல்லும் குறள் - 68: குறைவில்லாத ஐந்து!
""வாழ்த்துக்கள் ஆனந்தன் சிவில் இன்ஜினியரிங்கில் நன்றாகப் படித்துப் பட்டமும் வாங்கிவிட்டீர்கள்'' என்றான் ஆனந்தின் ஜூனியரும் நண்பனுமான கோவிந்தன்.
""வாழ்த்துக்கள் ஆனந்தன் சிவில் இன்ஜினியரிங்கில் நன்றாகப் படித்துப் பட்டமும் வாங்கிவிட்டீர்கள்'' என்றான் ஆனந்தின் ஜூனியரும் நண்பனுமான கோவிந்தன்.
""அதுவும் பர்ஸ்ட் கிளாஸ்லே இல்ல வெற்றி பெற்றிருக்கிறான். ஆனந்த் நீ எங்களுக்குப் பெரிய ட்ரீட் தரணும்'' என்றான் மற்றொரு நண்பன்.
""கட்டாயமாகத் தருகிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தியை என் பெற்றோருடன் பகிர்ந்துக் கொள்ளஇப்பொழுது செல்கிறேன்'' என்று கூறி விடைபெற்றான் ஆனந்தன்.
மூன்று வருடங்கள் வேகமாக ஓடி மறைந்தன.
""ஆனந்த்'' என்று அன்பாகக் கூப்பிட்டார் அவனின் அப்பா சேரன்.
""என்னப்பா'', ஆனந்தனின் குரலில் சோர்வாக இருந்தது.
""வேலை கிடைக்கலைன்னுகவலைப்படாதே. வேறு ஏதாவது வழியிலே உன் திறமைக்கும், படிப்புக்கும் வெற்றி கிடைக்குமான்னு யோசிச்சு செயல்படு''.
""உங்களுக்கு பாரமா வேலை வெட்டியில்லாம, தண்டச்சோறா வாழறேன். என் தலைவிதி அப்படி இருக்கு; படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்க மாட்டேங்குது''.
""ஆனந்த், ஏன் இப்படி குதர்க்கமாப் பேசறே, நீ எப்படி எனக்குப் பாரமா இருப்பே? நானும் உன் அம்மாவும் உன்னுடைய நல்வாழ்வுக்காகத் தானே பாடுபடறோம்''.
""ஏங்க வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா, எப்பப்பாரு புள்ளையைக் கரிச்சிக் கொட்டிக்கிட்டு இருக்கீங்க''. ""நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடறாப்போல என் அப்பாரு எனக்கு சொத்து வெச்சிட்டுப் போயிருக்கிறாரு. உங்களுடைய அல்ப குமாஸ்தா உத்தியோகத்திலே நாங்க ஒண்ணும் வாழல''.
""வாடா, செல்லம் உனக்குப் புடிச்ச அடைக்கு அரைச்சு வெச்சிருக்கேன். சுடச்சுட ஊத்தித் தரேன், சாப்பிடு'' என்றாள் கனகம்.
""அம்மா, புள்ளையின் தலைகள் மறைந்ததும் சேரன் வேதனையோடு சிரித்துக் கொண்டார். பொண்டாட்டியே மதிக்கலை, புள்ளை எங்கே மதிக்கும்'' என்று முனங்கிக் கொண்டார்.
வழக்கம் போலவே நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன.
அன்று ஆனந்தன் வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடன் காட்சி அளித்தான். அம்மாவும் பையனுமாகக் காலை ஆறு மணிக்கே வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு பதினொரு மணிக்குத்தான் திரும்பி வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகனோடு ஏதாவது கோயிலுக்குப் போய் இருப்பாள் என்று சேரன் எண்ணிக் கொண்டார்.
கனகம் தொண்டையைச் செரும, ஆனந்தன் மெதுவாக ""அப்பா'' என்றான்.
""என்னப்பா?''
""வந்து, மேடவாக்கத்திலே தாத்தாவுக்குச் சொந்தமான பத்து கிரவுண்ட் நிலம் இருக்கு இல்ல''.
""ஆமாப்பா, உங்க அம்மாவின் பங்காக வந்த இடம் அது''.
""ஆமாம், அதுதான். அதிலே பிளாட் கட்டி விற்கப்போறேன். சொந்தமா தொழில் செய்ய முடிவு எடுத்துட்டேன். அந்த இடத்தைத்தான் காலையில் நானும் அம்மாவும் போய் பார்த்துட்டு வந்தோம்''.
சேரனின் இருதயம் படபடத்தது. ஏதோ சொல்ல நினைத்தார், ஆனால் வார்த்தைகள் தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டன.
""அப்பா கையில் ஒரு ஐம்பது லட்சம் ரூபாய் இருந்தால், தொழிலைத் தொடங்கி விடுவேன். பிறகு விளம்பரம் கொடுத்து பிளாட் பிளாட்டாக வித்துடுவேன்''.
""என்னப்பா பதில் பேச மாட்டேங்கறீங்க"".
""அவர் எப்படிப் பதில் சொல்வார்? ஐம்பது லட்சம் கேக்கறியே''.
""ஏங்க என் நகைகளிலே சிலதைத் தரேன், வித்துடுங்க; இந்த வீட்டை அடமானம் வெச்சுப் பணத்தைப் புரட்டுங்க''.
""இந்த வீடு உன் அப்பன் கொடுத்தது இல்லை. இது என் பரம்பரைச் சொத்து, என் தாத்தா பாட்டி, அப்பா அம்மா வாழ்ந்து மறைந்த இடம். என் உயிர் உள்ளவரை அடமானம் வைக்கவோ, இல்ல விக்கவோ மாட்டேன்'' என்று ஓங்கிக் கத்த வேண்டும் என்று எழுந்த கோபத்தை எப்படியோ கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்.
""யோசிக்கிறேன்'' என்று முனங்கினார்.
""இதில் யோசிக்க என்ன இருக்கு? சட்டுபுட்டுன்னு ஆகவேண்டியதைப் பாருங்க'' என்று சொன்னாள் கனகம்.
தோட்டத்தில் இருந்த ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து அதனுடைய சுகமான ஆட்டத்தில் ஈடுபடாத மனதுடன் அமர்ந்திருந்தான் சேரன்.
நாடு முழுவதிலும் பொருளாதாரம் மந்தப்பட்ட நிலையில் உள்ளது. ஏற்கெனவே பல பில்டர்கள் பிளாட்டுகளைக் கட்டிவிட்டு விற்க முடியாமல் அல்லாடுகிறார்கள். சென்னை மையப்பகுதியிலேயே இப்படிப்பட்ட நிலைமை.
இப்படி இருக்கும்பொழுது பத்து கிரவுண்டில் வெறும் அம்பது லட்சத்தை முதலீடாகப் போட்டு அடித்தளம் அமைக்கும்பொழுதே விளம்பரம் மூலமாகவும், பிளாட்டுகள் எப்படி இருக்கும் என்று காட்டுகின்ற படங்கள் வழியாகவும் அவைகளை விற்றுவிட முடியுமா-? வெறும் கையில் முழம் போடுகிற விஷயம் போல இருக்கே என்று கலங்கினார்.
ஏதோ தொழில் செய்கிறேன் என்கிறான், ஒரு பெண் பிள்ளையைப் பெற்றிருந்தால் அதற்குக் கல்யாணம், சீர்வரிசை என்று இந்தக் காலத்தில் பல லட்சங்களை ஏப்பம் விட்டுவிடும். அதனால் அப்படிப்பட்ட செலவாக நினைத்து ஐம்பது லட்சத்தைக் கொடுப்போம் என்ற முடிவுக்கு வந்தார்.
கனகம் பில்டர்ஸ் அண்டு கன்ஸ்ட்ரக்டர்ஸ் என்ற பெயரில் தன்னுடைய கம்பெனியை ஆனந்தன் தொடங்கினான். பல பிரபல்யமான தினத்தாள்களில் பெரிய அளவில் விளம்பரமும் தரப்பட்டது. இதுவே சில லட்சங்களை விழுங்கி ஏப்பம் விட்டது.
பூமி பூஜையும் அரங்கேறியது. கட்டடம் லின்டல் அளவில் வரும் முன்னரே கையிருப்பு கரைந்துப் போனது. பேங்கில் லோன் போட்டு மேலும் பணத்தை வாங்கிக் கட்டடங்களைப் பாதி அளவுக்கு எழுப்பி விட்டனர்.
மொத்தம் எண்பது பிளாட்டுகளில், ஐந்து மட்டும்தான் விலைபோனது. மீதியை எப்படிக் கட்டி முடிப்பது? சொன்ன நேரத்தில் கட்டி முடிக்கவில்லை என்பதால் ஐந்து பிளாட்டுகளுக்குப் பணம் கொடுத்தவர்களும் பணத்தைத் திருப்பித்தரச் சொல்லிக் கழுத்தை நெறித்தனர்.
ஒரு காரியத்தை எடுத்துச் செய்வதற்கு முன்பு அதற்குத் தேவையான பொருள், காலம், மேற்கொள்ளப்போகும் செயல்முறை, உகந்த இடம், ஏற்ற கருவி ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளதை, ஒவ்வொரு மனிதனும் தொழிலைத் தொடங்குவதற்கு முன் கூர்ந்து கவனிக்க வேண்டும். இல்லையென்றால் ஆனந்தனைப் போல பெயரில் மட்டும் ஆனந்தம் இருக்க வாழ்க்கையில் அது தொலைந்துப் போய்விடும்.
பொருள்கருவி காலம் வினைஇடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
(குறள் எண்: 675)
பொருள் :
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(தொடரும்)