கதை சொல்லும் குறள் - 63: சோதனையா - கலங்காதே...
பசிபிக் கடலில் அந்தச் சிங்காரக் கப்பல், சொகுசாகப் பயணித்துக் கொண்டிருந்தது. மொத்தம் ஒன்பது தளங்களைக் கொண்ட கப்பல்.
பசிபிக் கடலில் அந்தச் சிங்காரக் கப்பல், சொகுசாகப் பயணித்துக் கொண்டிருந்தது. மொத்தம் ஒன்பது தளங்களைக் கொண்ட கப்பல். அதை ஒரு மினி உலகம் என்றே சொல்லலாம். மொத்தம் இரண்டாயிரம் பயணிகளுக்கும் சற்றுக் கூடுதலாக அதில் உல்லாசப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஒரு நாளில் இருபது மணி நேரமும் உணவு வழங்குவது, பயணிகளுக்குப் பலவிதமான பொழுதுபோக்குகள், இதில் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட கோல்ஃப் மைதானம், குன்று, மலையேற்றத்தை இதன் மீது ஏறிப் பழகலாம், ஷாப்பிங் செய்யக் கடைகள், முடித்திருத்தும் நிலையங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக மிகப் பெரிய அரங்கம்; அதில் சிறு இடைவெளி விட்டு அரங்கேறும் கலைநிகழ்ச்சிகள், ஜாஸ் இசை என்று அந்தக் கப்பல் இந்திரபுரியாக மிளிர்ந்தது.
"விண்மீன்' என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பல், பிரபஞ்சத்தில் ஒளிரும்
விண்மீனுக்கு நிகரான அழகை அள்ளித் தந்துக் கொண்டிருந்தது.
மகதிக்கு நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி. அவளுடைய நீண்ட நாள் கனவு நிறை
வேறிக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட பயணக்கப்பலில் உலகை வலம் வர
வேண்டும் என்பது அவளுடைய நெடுநாளைய அவாவாக இருந்தது.
தன் காதல் கணவனோடு, இரண்டு வயது மகனைத் தன்னுடைய பெற்றோர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு இந்த உல்லாசப் பயணத்தை மேற்கொண்டாள்.
மொத்தம் பத்து நாள் பயணம். அதில் ஐந்து நாட்கள் முடிவடைந்துவிட்டது.
சிங்கப்பூர், மலேசியா, பாங்காக் முதலிய நாடுகளைப் பார்த்துவிட்டு இப்பொழுது ஜப்பானை நோக்கி அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது.
தன் மகன் கோகுலுக்கு வாங்கிய விளையாட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்து மகதி தனியாக பேக் செய்துகொண்டிருந்தாள்.
""மகதி, சீக்கிரம் வா'' என்று ஓங்கிக் குரல் கொடுத்தான் ஜெயந்தன்.
""என்ன?'' என்று பரபரப்புடன் ஓடி வந்தாள் மகதி.
அந்தச் சமயத்தில் அந்தக் கப்பல் பசிபிக் பெருங்கடலின் அங்கமான ஜப்பானியக் கடலில் சென்று கொண்டிருந்தது.
""எக்ஸ்ட்ராவாக பணத்தைக் கட்டி இப்படிப் பால்கனியோடு இருக்கும் கேபினை புக் செய்ததால், கொஞ்ச நேரத்துக்கு முன்னர் எவ்வளவு பெரிய திமிங்கிலத்தைப் பார்த்தேன் தெரியுமா!''
""ஐயோ, நான் மிஸ் பண்ணிட்டேனே''.
""சரி சரி, எங்கும் போகாதே; இங்கே இருக்கும் நாற்காலியிலேயே உட்கார்ந்து இரு. இப்பதான் கப்பலின் கேப்டன் அறிவிச்சாரு, இன்னும் சிறிது நேரத்திலே டால்பின்களும், திமிங்கிலங்களும் வரும்'' என்று ஜெயந்தன் சொல்லி முடிக்கும் முன்னதாகவே பத்துப் பதினைந்து டால்பின்கள் கடல் நீரில் மூழ்கியும், துள்ளிக் குதித்தும் சென்று கொண்டிருந்தன.
அவ்வளவுதான், மகதி தன்னை மறந்தாள், சூழ்நிலையையும் மறந்து எம்பிக் குதித்து, கைகளைத் தட்டிச் சிறு குழந்தையைப் போல் குதூகலித்தாள்.
பக்கத்துப் பால்கனியில் நின்று டால்பின்களை ரசித்துக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டுத் தம்பதியர், மகதியைப் பார்த்து நட்போடு கையசைத்தனர்.
""ஹாய்'' என்றனர்.
இப்படி ஆரம்பித்த அறிமுகம், இரண்டு நாட்களில் நல்ல நட்பாக மலர்ந்தது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களான அவர்கள் இருந்தார்கள். அந்தப் பெண்ணின் பெயர் சூசன். அவளுடைய கணவனின் பெயர் டானியல். இணைபிரியாத தம்பதியர் என்று அவர்களைச் சொல்லலாம். திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகி இருந்தது. இன்னும் குழந்தைச் செல்வம் வாய்க்காமல் இருந்து வருகிறது.
ஜப்பானில் டோக்கியோவை ஒன்றாகச் சுற்றிப் பார்த்தார்கள்.
""சூசன் சூசன்'' என்று அவளை அன்போடு அழைத்து மகதி மகிழ்ந்தாள். தன்னுடைய குடும்பத்தைப் பற்றி, கோகுலின் சுட்டித் தனங்களைப் பற்றி எல்லாம் சொல்லிக் குதூகலித்தாள்.
""சூசன் நீ ஏன் இன்னும் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை?'' என்றாள் மகதி.
தனக்கு இப்பொழுது முப்பத்து மூன்று வயதாகிறது என்றும், இருபத்து எட்டு
வயதில் கர்ப்பப்பையில் தோன்றிய கேன்சர் கட்டிக்காக, அதை அகற்றிவிட்டதாகவும் சூசன் சொன்னபொழுது மகதி அதிர்ந்து போனாள்.
எப்படி இவளால் இப்படி இயல்பாகச் சந்தோஷமாக இருக்க முடிகிறது? என்று வியந்தாள்.
""சூசன், இந்த நிலை உனக்கு ஏற்படுவதற்கு முன்னரே டானியல் உன்னை மணந்து கொண்டாரா?''
""என்னுடைய கர்ப்பப்பையை நீக்கி விட்டார்கள் என்று தெரிந்த பிறகுதான் டானியல் என்னை மணந்துக் கொண்டார்''. ""என்னால் உங்களுக்கு ஒரு குழந்தையைத் தரமுடியாது. ஆகையால் நாம் நண்பர்களாகவே இருப்போம் என்றேன். ஆனால் அவர் நீ தான் என் குழந்தை'' என்று சொல்லிவிட்டார்.
சட்டென மகதியின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. அவளுடைய நினைவுகள் பின்நோக்கிப் பயணித்தன...
மகதிக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டன.
""ஏண்டி, இன்னுமா உன் வயத்திலே ஒரு புழு, பூச்சிக் கூட தங்கலைன்னு மாமியார் சிடு சிடுத்தார்''.
""ஏன் மகதியின் அம்மா கூட, மாசா மாசம் தவறாமத் தலைக்குளிச்சிடுறியே, ஒரு நல்ல டாக்டரா காட்டக் கூடாதா'' என்றாள்.
""நம்ம கூட கல்யாணம் ஆனவங்களுக்கு எல்லாம் குழந்தை பிறந்துடுச்சு. நமக்குத்தான் கொடுத்து வைக்கலே'' என்று ஜெயந்தன் வருத்தப்பட்டான்.
இத்தனைக்கும் அப்பொழுது மகதிக்கு வயசு இருபத்து ஏழுதான் ஆகியிருந்தது. எங்கே போனாலும், யாரைப் பார்த்தாலும் ""குழந்தை இல்லையா'' என்கிற கேள்விதான்.
இதனால் விசேஷங்களுக்குப் போறதையும் மகதி குறைத்துக் கொண்டாள். பல மருத்துவர்களைப் பார்த்தார்கள், எக்கச்சக்கமான பரிசோதனைகள், ஊசி, மருந்துகள், ஹார்மோன் தெரப்பி என்று உள்ளத்தாலும் உடலாலும் மிகவும் மகதி பாதிக்கப்பட்டாள்.
இரண்டு பேருக்குமே உடல் ரீதியாக ஒரு குறையும் இல்லை. பிறகு ஏன் குழந்தை தரிக்கவில்லை? சொந்த வீட்டிலேயே குற்றவாளி போல் மகதியை நடத்தினார்கள்.
ஜெயந்தன் எதற்கெடுத்தாலும் சிடு சிடுவென்று விழுவான். மகதியிடம் சரியாக முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை.
""ஜெயந்தன்''
""என்ன?'' என்றான் வேண்டா வெறுப்பாக.
""நீங்க வேணும்னாலும் வேறு ஒரு திருமணம் பண்ணிக் கொள்ளுங்களேன்''
""உன்னோடு படும் தொல்லையே போதும், வேறு ஒண்ணு வேணுமா?''
அவ்வளவுதான் மகதி பொங்கி விட்டாள். ""ஏன் இன்னொருத்தி வந்தா உங்க கையாலாகாத்தனம் தெரிஞ்சுடும் என்ற பயமா?''
""என்ன சொன்னே? அவ்வளவு திமிர் ஏறிப் போச்சா, ஓங்கி மகதியின் கன்னத்தில் அறைந்தான்''.
அழுது கொண்டே மகதி திரும்பக் கத்தினாள், ""ஏன் நீங்க மட்டும் என் மனம் புண்படும்படி நடந்துக் கொள்ளலாமா?"" ""என்னமோ குழந்தை பெத்துக் கொள்ளாதது என் குற்றம் மட்டும் போல''.
அன்று இரவு இருவருமே அழுது தீர்த்தார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர். இனி குழந்தை பிறக்கும்பொழுது பிறக்கட்டும் அல்லது பிறக்காமலேயே போகட்டும். ஆனால் இந்தப் பிரச்னை அவர்களுடைய வாழ்க்கையை நரகமாக்கக்கூடாது என்பதான நல்ல முடிவாக அது இருந்தது.
ஐந்து வருடத்திற்குப் பிறகு கோகுல் பிறந்தான். அதுவரை அவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வளவு துன்பகரமாக ஆக்கிக் கொண்டார்கள்.
மகதி தன்னை ஒரு முறை குலுக்கிக் கொண்டாள். இந்தச் செய்கையின் மூலம் தன்னுடைய பழைய நினைவுகளை உதறி எறிந்தாள்.
சூசனுக்கு இனிக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை, இதை அறிந்துதான் டானியல் அவளை மணந்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவு இன்பமாக இருவரும் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
இடுக்கண் வருங்கால் நகுக என்ற குறளுக்கு இவர்கள்தான் பொருத்தமான ஜோடி என்று மகதி எண்ணி மகிழ்ந்தாள்.
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.
(குறள் எண் : 621)
பொருள் :
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம் தான்.
(தொடரும்)