சிறந்த தூதர்! - 69
""அண்ணா'' என்று பாசத்தோடு அழைத்த வண்ணம் வந்த கோமளவல்லி அண்ணன் உத்தமனின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.
""அண்ணா'' என்று பாசத்தோடு அழைத்த வண்ணம் வந்த கோமளவல்லி அண்ணன் உத்தமனின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.
""அண்ணா, உங்கள் முகம் இப்படி வாடி நான் பார்த்ததே இல்லையே, என்ன நடந்தது?'' என்றாள்.
""ஒன்றும் இல்லை'' என்று விலாங்கு மீனாக நழுவினான் உத்தமன்.
""ராஜ வம்சத்தில் வந்தவர், அதுவும் இளவரசர். எதிர்காலத்தில் கடம்பத்தை ஆளப்போகும் என் அண்ணனின் முகத்தில் கலக்கம் ஏன்?''
""ஆமாம் பெரிய இளவரசன். நம் தந்தை என்ன சக்கரவர்த்தியா? குறுநில மன்னர்தானே, குலோத்துங்கச் சோழருக்குக் கப்பம் கட்டி வாழ்பவர்கள்தானே''.
""அண்ணா, குறுநில மன்னரோ சக்கரவர்த்தியோ, நீயும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யப் போகிறவன்தானே. உன்னை ஒரு ஆறு மாதகாலமாகக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். நீ கங்கைகொண்ட சோழபுரத்தில், கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வந்ததிலிருந்து பழைய பொலிவையும், சிரிப்பையும் தொலைத்து விட்டாய்''. ""உன்னுடைய ஒரே தங்கை நான் உன் மீது அதீத பாசத்தைக் கொண்டுள்ளேன். என்னிடம் உண்மையைச் சொன்னால் என்னால் முடிந்த வரையில் உன் மனத்துயரை நீக்க முயல்வேன்''.
""கோமளவல்லி, வந்து....''
""தயங்காமல், மறைக்காமல் உன்
உள்ளத்தில் உள்ளதைச் சொல் அண்ணா''.
""கைலாசநாதர் கும்பாபிஷேகத்தில்,
சக்கரவர்த்தியின் திருமகள் மங்கையர்கரசியைப் பார்த்தேன், என் உள்ளத்தை அவளிடம் தொலைத்து விட்டேன். அவள் எனக்கு எட்டாத கனி என்று தெரியும். ஆனாலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை. ஒரு பார்வையிலேயே என்னைக் கொள்ளைக் கொண்டு விட்டாள்''.
""இவ்வளவுதானா விஷயம். எட்டாத கனி என்று நீயே எப்படி முடிவுக்கு வந்தாய்? முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. நான் உன் காதலுக்குத் தூது போகிறேன்''.
""என்னது நீ தூது போகப்போகிறாயா? முட்டாள்தனமாகப் பேசாதே. அப்படியே நீ செய்யத் துணிந்தாலும், காலம் தாழ்த்திச் செயல்பட்டு எதைச் சாதிக்கப் போகிறோம்?''
""அப்படியென்றால்...''
""இன்னும் முப்பது நாட்களிலே மங்கையர்கரசியின் சுயம்வரம் நடக்க இருக்கிறது. பலதேசத்து மன்னர்களை அழைத்திருக்கிறார்கள். அதில் பலர் சக்கரவர்த்திகள், அவர்களுடைய திருமகன்கள்''.
""சரி உனக்கு இந்த விஷயம் எப்படித் தெரிந்தது?''
""நமக்கும் சுயம்வரத்திற்கு அழைப்பு வந்திருக்கிறது.''
""உனக்குத் தகுதியில்லை என்றால் அழைப்பு வந்திருக்குமா? சுயம்வரத்தில் வீரத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும், உன் வீரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ சுயம்வரத்தில் கலந்துக் கொள்கிறாய். அதற்கு முன் நான் சொல்வதைப் போல நீ செய்ய வேண்டும்''.
""என்ன செய்யணும் சொல்?''
""தந்தையிடம் வேட்டைக்குப் போவதாகவும், அதனால் பத்து நாட்களுக்கு என்னுடன் காட்டுக்குச் செல்லப் போவதாகவும் கூறு. பலமுறை நான் தந்தையுடனும், உன்னுடனும் வேட்டைக்கு வந்திருக்கிறேன்தானே; இதில் ஒரு பிரச்னையும் வராது''.
""பிறகு''.
""காட்டில் நீ சிப்பாய்களோடு தங்கி வேட்டையாடு, நான் கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் செல்லுகிறேன், உன் காதலியைச் சந்தித்து உன் காதலைத் தக்கவிதத்தில் எடுத்துரைக்கிறேன்''.
""சரி, ஆனால் ஒரு நிபந்தனை, உன்னோடு நானும் வருவேன்; இல்லையென்றால் இந்த யோசனையை விட்டுவிடு''.
""அண்ணா, சோழர்கள் பெண்களுக்குப் பெருமதிப்பைத் தருபவர்கள்; அரசர்களின் பாதுகாவலர், படையை வழிநடத்தும் தளபதி, தூதுவர்கள் என்று பல பெண்கள் பணியாற்றுவது இந்தச் சோழர்களின் ஆட்சியில்தானே. சரி உன் இஷ்டம் போல நீயும் என்னுடன் வா''.
""கோமளவல்லி, நான் மங்கையர்கரசியின் உருவத்தை ஓவியமாகத் தீட்டியிருக்கிறேன் அதைக் காட்டட்டுமா?''
""எங்கே காட்டு பார்க்கலாம்?''
உத்தமன் ஒரு துணிச்சுருளை எடுத்து வந்து நீட்ட, அதை ஆவலோடு பிரித்துப் பார்த்த கோமளவல்லி அப்படியே சிலையாகச் சமைந்துப் போனாள்.
""அண்ணா, பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் அளவுக்கு இவ்வளவு அழகாகவா மங்கையர்கரசி இருக்கிறாள்''.
""ஆமாம் கோமளவல்லி.''
""இப்பொழுது புரிகிறது ஏன் நீ இப்படி பைத்தியமாக அலைகிறாய்'' என்று; கோமளவல்லி சிரித்துக் கொண்டே அண்ணனின் கைகளில் இருந்த சித்திரத்தைப் பறித்துக்கொண்டு ஓட அவளைத் துரத்திக் கொண்டு உத்தமன் ஓடுகிறான்.
கங்கைகொண்ட சோழபுரத்தின் ஒதுக்குப் புறமாக இருந்த குடியிருப்புகளுக்கு அருகே இருந்த சத்திரத்தில் உத்தமனும், கோமளவல்லியும் மாறுவேடத்தில் தங்கியிருந்தனர். கைலாசநாதர் கோயிலில் ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகத்
தன்னுடைய தங்கையுடன் வந்திருப்பதாக உத்தமன் சொல்லி வைத்திருந்தான்.
அவர்கள் வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில், கோமளவல்லி உற்சாகத்துடன் ஓடி வந்தாள்.
""அண்ணா, காரியம் வெற்றி அடைந்தாற் போலத்தான்'' என்றாள் கோமளவல்லி.
""சொல்வதைப் புரியும்படி சொல்'' என்றான் உத்தமன்.
""அண்ணா, உன் இதய தெய்வம் மங்கையர்கரசியை நாளை அந்தப்புரத்தில் சந்திக்கப் போகிறேன்''.
""என்னது உண்மையாகவா? இது எப்படி சாத்தியப்பட்டது?''
""அந்தப்புரத்துக்கு பூக்களைக் கொண்டு செல்லும் காமாட்சியைக் கண்டுபிடித்து அவளிடம் சிநேகிதம் பிடித்தேன்''.
""எப்படி?''
""இரு சொல்கிறேன். என்னுடைய ஒரு ஜோடி வைரக் காதணிகளை அவளுக்குப் பரிசாக வழங்கினேன். மங்கையர்கரசியைப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை'' என்றேன்.
""முதலில் அவள் மறுத்துவிட்டாள். பிறகு நகைக்கு மயங்காத மங்கை உண்டா, சரி என்றாள் ஒரு நிபந்தனையோடு, ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாள். சரி''
என்றேன்.
""ஐந்து நிமிடங்களில் என்ன சொல்ல முடியும்?''
""பொறுத்து இருந்து பார்''.
""இளவரசியே வணக்கம்! இவள் என் சித்தியின் மகள், உங்களைப் பார்க்கவேண்டும் என்றாள். அதான் அழைத்து வந்தேன்'' என்றாள் காமாட்சி.
""அப்படியா இங்கே வா'' என்றாள் மங்கையர்கரசி.
முழுநிலவு போன்ற வதனத்துடன் அந்த வானுலக ஊர்வசியே தரைக்கு வந்தாற்போல ஜொலித்த மங்கையர்கரசியைப் பார்த்த கோமளவல்லியின் கண்கள் இமைக்கவும் மறந்தன.
""காமாட்சி, இவளைப் பார்த்தால் பூ
கட்டும் பரம்பரையில் வந்தவள் போல இல்லையே, சரி நீ சென்றுவிட்டு நான் கூப்பிடும்போது வா'' என்றாள் மங்கையர்கரசி.
""இல்லை இளவரசி...'' என்று காமாட்சி தடுமாற, ""இது என் கட்டளை'' என்றாள் மங்கையர்கரசி.
""உன்னைப் பார்த்தால் உயர்குலத்து மங்கையைப் போல இருக்கிறதே. நீ யார்? உண்மையைச் சொல்'' என்று மங்கையர்கரசி மிரட்ட,
""இளவரசி, நான் கடம்ப நாட்டின் இளவரசி. உங்கள் தந்தையின் ஆட்சியின் கீழ் உள்ள குறுநில மன்னர்களில் ஒருவர் என் தந்தை'' என்று கோமளவல்லி தைரியமாகக் கூறினாள்.
""ஓ அப்படியா, ஏன் இப்படிப் பொய் சொல்லி, திருட்டுத்தனமாக என்னைச்
சந்திக்க வந்தாய்?''
""நீங்கள் என் அண்ணன் உத்தமனின் மனதைத் திருடியதினால் வந்த வினை இது.''
""என்ன உளறுகிறாய்?''
""உளறவில்லை இளவரசியாரே, உங்களைக் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் சந்தித்தது முதல் என் அண்ணன் உங்கள் மீது காதல் கொண்டு விட்டார். ஒரே முறை உங்களைப் பார்த்தவர் உங்கள் உருவத்தைத் தன் மனதில் மட்டும் அல்ல இதோ இந்தச் சித்திரத்திலும் பதித்துவிட்டார்'' என்று தன் இடுப்பில் செருகி இருந்த ஓவியச் சுருளை விரித்துக் காட்டினாள் கோமளவல்லி.
சித்திரத்தைப் பார்த்த மங்கையர்கரசி சிலையானாள். அவள் கன்னத்தின் ஓரம் இருந்த மச்சம் கூட அதில் தீட்டப்பட்டிருந்தது.
""இதோ இது என் அண்ணன் உத்தமனின் சித்திரம். உங்கள் இரண்டு பேருக்கும் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.''
""இப்படிப் பேசினால் உன் தலை துண்டிக்கப்படும் என்பது உனக்குத் தெரியாதா?'' என்று மங்கையர்கரசி பொய்க்கோபம் காட்டினாள்.
""என் தலை போனாலும் கவலை இல்லை; என் அண்ணனின் காதல் நிறைவேறினால் அதுவே எனக்குப் போதும். மீண்டும் உங்கள் மகளாக உங்கள் வயிற்றிலே ஜெனிப்பேன்.''
""ஆஹா, வெகு அழகாகப் பேசுகிறாயே! உன் அண்ணனும் பேச்சில் வல்லவரோ!''
""பேச்சில் மட்டும் அல்ல, அழகில், வீரத்தில், அறிவில், இசையில், கவிதை இயற்றுவதில் என்று என் அண்ணன் சகலகலா வல்லவர்''.
""எங்கே நாளைய தினம் உங்கள் அண்ணன் உத்தமரை என் மீது ஒரு கவிதை எழுதச் சொல் பார்ப்போம்''.
""உங்கள் சித்தம், என் பாக்கியம் அண்ணியாரே''.
""என்னது, என்னது அண்ணியா; ஒரு அறை விட்டேன்'' என்றால் பற்கள் சிதறி
விடும்.
""இந்த அழகான கையால் அறை வாங்கி, பற்கள் சிதறினால் அவற்றைச் சேகரித்துப் பல்லாங்குழி ஆடுவேன், உங்களை அனுதினமும் நினைப்பேன்''.
மங்கையர்கரசி, கலகலவென்று சிரித்து விட்டாள்.
""சரி, நாளை உன் அண்ணனின் கவிதையோடு வா''.
கங்கைகொண்ட சோழபுரமே திருவிழாக் கோலம் கொண்டு இருந்தது. சோழ நாட்டு மக்கள் புத்தாடைகள் அணிந்து, திரள் திரளாக அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் ஒவ்வொரு வீடும், தெருக்களும் வாழை மரங்களையும், மாவிலைத் தோரணங்களையும் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஒயில் ஆட்டம், மேளதாளம், மங்கல ஒலிகள் என்று எங்கும் குதூகலம் நிறைந்திருந்தன.
குலோத்துங்க சோழனின் அருமை மகளுக்கு சுயம்வரம் என்றால் கேட்க வேண்டுமா? பலதேசத்து மன்னர்கள் குவிந்திருந்தனர். தங்களுடைய வீரத்தைப் பலவிதமாக வெளிப்படுத்தினர். கடைசியாகப் பத்து மன்னர்கள் தேர்வாகினர். அவர்களின் பெயர்களோடு, வீரப் பராக்கிரமங்களை ஒருவர் சத்தமிட்டு முழங்கிக் கொண்டே வந்தார்.
கைகளில் ஏந்திய மாலையோடு மெதுவாக அன்ன நடை நடந்து வந்த மங்கையர்கரசி உத்தமன் என்ற பெயரைக் கேட்டதுமே, மெய்சிலிர்க்க நின்றாள். தன் உள்ளம் கவர்ந்தவனை நிமிர்ந்து நோக்கினாள்.
கோமளவல்லி தன் அண்ணன் என்று காட்டிய சித்திரத்தின் மறு உருவமாக உத்தமன் கண்களில் காதல் வழிய நின்றிருந்தான். தன்னைப் பற்றி அவன் எழுதிய கவிதைகளை, கோமளவல்லி மூலமாகப் படித்து, உத்தமனையே தன் வருங்காலக் கணவனாக மனதளவில் ஏற்றுக்கொண்டு இருந்த மங்கையர்கரசி அவனுக்கு மாலையை அணிவித்து உலகறிய கணவனாக்கிக் கொண்டாள்.
இது, தன் அண்ணனைப் பற்றியும் அவன் மங்கையர்கரசியின் மேல் கொண்ட காதலைப் பற்றியும், பயனளிக்கும் விதத்தில் எடுத்துச் சொல்லிய கோமளவல்லியினால் நிகழ்ந்தது என்பது சொல்லியும் தெரிய வேண்டுமா என்ன!
உத்தமனுக்கு, கோமளவல்லி அருமைத் தங்கை மட்டும் அல்ல, நல்லத் தூதுவனாகவும் விளங்கினாள்.
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது.
( குறள் : 685)
பொருள் :
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.
(தொடரும்)