மகளிர் ஆட்சி!
உள்ளாட்சி அமைப்புகளில் இப்போது பெண்கள் ஆட்சிதான் அரங்கேற போகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் இப்போது பெண்கள் ஆட்சிதான் அரங்கேற போகிறது. இவற்றில் 50 சதவீதம் பதவிகள் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சிகளில் இப்போது மகளிர் ஆட்சியே நடைபெறுகிறது.
நாடாளுமன்றங்களிலும், சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா நிறைவேறாமல் இருந்தாலும், உள்ளாட்சி
களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தற்போது அளிக்கப்படுகிறது. இதன்வாயிலாக, உள்ளாட்சிகளில் இனி மகளிர் ஆட்சியே நடைபெறும்.
1992-இல் மத்திய அரசு கொண்டு வந்த நகர்பாலிகா சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின்படி, உள்ளாட்சித் தேர்தல்களை மாநில அரசுகள் கட்டாயமாக நடத்தியாக வேண்டும்.
இதன்படி, பல ஆண்டுகள் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் 1996-இல் நடத்தப்பட்டன. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தார். இதன்படி, நூற்றுக்கணக்கான
பெண்கள் மேயர்களாக, நகர்மன்ற, பேரூராட்சி மன்றத் தலைவர்களாகவும், ஆயிரக்கணக்கான பெண்கள் மேற்கண்ட உள்ளாட்சி மன்றங்களில் உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர். இவ்வாறாக உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புக்கு வந்த பெண்கள் தங்களது தனித்திறமைகளை நிரூபித்து, சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றங்களிலும் கூட உறுப்பினர்களாகவும் பின்னர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த உள்ளாட்சித் தேர்தல் 2016-ஆம் ஆண்டில் நீதிமன்ற உத்தரவால் பாதியில் நின்றுபோனது. இதன்பின்னர், 2019-இல் சில மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
இதன்பின்னர், 2021-இல் முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். பின்னர், 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். இந்தத் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் நடைபெற்ற 12,800-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கான தேர்தல்களில் ஏறக்குறைய 50 சதவீதம் 6,500 பெண்கள் மாமன்றங்கள், நகர்மன்றங்கள், பேரூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
மார்ச் 4-இல் நடைபெறப் போகும் மறைமுகத் தேர்தல்களில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம், கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேபோல மொத்தமுள்ள 138 நகர்மன்றத் தலைவர் பதவிகளில் 69 நகர்மன்றத் தலைவர் பதவிகளும், 489 பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 245 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்களின் ஆளுமை விரைவில் தொடங்கும். இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகளின் துணைத் தலைவர்கள் பதவிகளில் கூட பெருமளவு பெண்களே தேர்வு செய்யப்படுகின்றனர்.
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கல்லூரி மாணவிகள் பலர், பட்டங்கள் பெற்ற இளைஞிகள், குடும்பப் பெண்கள் என ஏராளமானோர் அரசியல் கட்சிகள் வாயிலாகவும், சுயேச்சையாகவும் களம் கண்டு, வெற்றி வாகையும் சூடியிருக்கிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் "2கே கிட்ஸ்' -ஆக உள்ள கல்லூரி மாணவிகள், "90 கிட்ஸ்'ஆன குடும்பத் தலைவிகள், மூதாட்டிகள் என்று மங்கைகள் நிறைந்த மகாசபையாக இருக்கப் போகிறது.
குடும்பங்களின் நிதி அமைச்சர்களாக மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களைக் கட்டிக் காப்பதிலும் பெண்கள் சிறந்து விளங்குவர் என்பதில் எள்ளவும் சந்தேகமே இல்லை.
முந்தைய காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சாதனை படைத்த பெண்கள் பலர் அமைச்சர்களாகவும், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உயர்ந்தனர். இப்போதும் பதவியேற்கும் பெண்கள் நாளைய தமிழகத்தை வழிநடத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குவர் என்பதில் ஐயமில்லை.