மகளிர்மணி

உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 11: பாட்டி சொல்லும் பக்குவம்!

விசாலாட்சி பாட்டி அழகானவர். எந்த நேரத்திலும் சிரித்த முகத்தோடு இருப்பார்.

கோதை ஜோதிலட்சுமி


விசாலாட்சி பாட்டி அழகானவர். எந்த நேரத்திலும் சிரித்த முகத்தோடு இருப்பார். முகத்தில் அவர் பூசிக்கொண்டிருக்கும் மஞ்சளைப் போலவே சிரிப்பையும் கூட பூசிக்கொண்டிருக்கிறாரோ என்று தோன்றும். விசாலாட்சி பாட்டியும் அவரின் கணவரும் அன்றாடம் அதிகாலையில் நடைபயிற்சிக்குக் கிளம்பி விடுவார்கள். வரும்பொழுது கையில் காய்கறிகளும், பழங்களும் வாங்கிக்கொண்டு வருவார்கள். பக்கத்து வீட்டில் இருக்கும் எனக்கும் கூட சில நேரங்களில் காய்கறிகள் வாங்கிக் கொடுத்ததுண்டு. மாலை நேரங்களில் கோயில் உபன்யாசம் என்று போய்விட்டு வருவார்கள். சில நாள்கள், இருவரும் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.   

பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் மருத்துவராகவும் கணினி துறையிலும் படிக்க வைத்திருக்கிறார்கள். திருமணம் செய்து குழந்தைகளோடு சீரும் சிறப்புமாய் வாழ்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை இருவரும் பேரப்பிள்ளைகளையும் பிள்ளைகளையும் பார்க்க வெளிநாடு பயணப்படுவார்கள். அந்த நேரங்களில் அக்கம்பக்கத்தில் வாழும் எங்களுக்கு ஒரு வெறுமை சில நாள்களுக்கு இருக்கும். 

மீண்டும் ஊர் திரும்பி விட்டால், காலையில் எங்கள் அலுவலகங்களுக்குப் புறப்படும் வேளையில் அவர்களை சின்னப் புன்னகையோடு எதிர்கொள்வோம் அவ்வளவு தான். மற்றபடி அவர்களுக்கு உதவியாகவோ துணையாகவோ ஒரு துரும்பும் நாங்கள் நகர்த்தியதில்லை. அவர்களும் அப்படி ஏதும் எங்களிடம் எதிர்பார்த்ததும் இல்லை. ஒரு புகாரும் அவர்கள் சொல்லி நாங்கள் கேட்டதில்லை.

கணவனும் மனைவியும் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இவர்களைப் பார்த்தால் நிச்சயம் தோன்றும். நட்போடு அவர்கள் நடந்து கொள்வதைப் பார்க்க வேண்டுமே? ஒருவரை ஒருவர் நேசிப்பதும் மதிப்பதும் கரிசனத்தோடு நடத்துவதும் ஆச்சரியப்படுத்தும். ஏறத்தாழ ஐம்பது வருட தாம்பத்தியத்தில் புரிதல் பூரணமடைந்திருந்தது. 

ஒருநாள் பெரியவர் முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா கொடும் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த காலம். மருத்துவமனைக்குச் செல்வதென்பதே பயத்தை ஏற்படுத்தியிருந்தது. விமானப் போக்குவரத்து இல்லாததால் பிள்ளைகள் வரமுடியாத நிலை. பெரியவர் தன் காலத்தை முடித்துக் கொண்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அண்டை வீட்டில் இருக்கும் எங்களுக்கே அதிர்ச்சி தாளவில்லை. விசாலாட்சி பாட்டிக்கு ஆறுதலாக இரண்டொரு வார்த்தை சொல்லலாம். ஆனால், வார்த்தைகள் ஆறுதல் தந்துவிடுமா என்ன? அவரின் வீட்டிற்குப் போனேன். கைகளைப் பிடித்துக் கொண்டேன். வார்த்தை ஒன்றும் வரவில்லை எனக்கு. பாட்டியும் அதிர்ச்சியில் இருப்பதை முகம் காட்டியது. சோர்ந்திருந்தார். "எதுவானாலும் பக்கத்தில் நாங்கள் இருக்கிறோம்' என்றேன். நிமிர்ந்து பார்த்து நன்றி சொன்னார்.

அதோடு நிறுத்தவில்லை. என் மகளைப் பற்றி விசாரித்தார். வெளியில் அனுப்புவதாக இருந்தால் சரியான பாதுகாப்போடு அனுப்பும் படி அறிவுறுத்தினார். எனக்குக் கைகள் நடுங்கின. மனதில் என்னவென்று சொல்ல இயலாத ஒருவித உணர்வு பொங்கியது. நான் அவரை ஆறுதல்படுத்த வந்திருக்கிறேன். அவரோ என்மீதும் என் மகள் மீதும் தன்னுடைய அக்கறையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். எத்தகைய மனம் விசாலாட்சி பாட்டிக்கு? 

சிலநாள்கள் கடந்தன. பாட்டி மெல்ல வந்து வராண்டாவில் உட்கார்ந்து கொள்ளத் தொடங்கியிருந்தார். அப்போதும் நான் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கையில் அவர் யாருடனாவது போனில் பேசிக்கொண்டிருப்பார். துக்கம் விசாரிப்பவர்கள் நேரில் வர முடியாத சூழ்நிலை என்பதால் தொடர்ந்து அழைப்புகள். அவரும் அனைவரிடமும் பேசும் பொழுது எதிர் முனையில் பேசியவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் படி சொல்லிக்கொண்டிருந்தார்.

அவருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு சாமானியமல்ல. அரை நூற்றாண்டு காலம் உடன் வாழ்ந்தவரை இழந்திருக்கிறார். அடுத்தது என்ன? இனி வரும் நாள்கள் எப்படி? என்றெல்லாம் எத்தனையோ கேள்விகள் மனதில் எழத்தானே செய்யும். ஆனால், இழப்பின் வலியை வெளியில் இம்மியும் காட்டிக்கொள்ளாமல் சுற்றி உள்ளவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கு எவ்வளவு மனவலிமையும் தெளிவும் இருக்க வேண்டும்? 

விசாலாட்சிப் பாட்டியைப் பற்றி சொல்லும் பொழுது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? நம்மால் பாட்டியைப் போலத் தெளிந்த மனதோடு எதையும் அணுக முடியுமா? எந்தப் புகாரும் புலம்பலும் இல்லாமல் நம்மால் கடினமான சூழ்நிலையைக் கடந்து

விட முடியுமா? கடினமான என்று கூட இல்லை அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு சலிப்பு புலம்பல்? எனக்குள் இப்படி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. உங்களுக்குள்ளும் இத்தகைய கேள்விகள் எழக்கூடும்.

கொள்ளை நோயின் தாக்கம் சற்று தணிந்த நிலையில் பாட்டியின் பிள்ளைகள் வந்திருந்தார்கள். இருபதாண்டு காலமாய் பக்கத்து வீட்டில் இருக்கிறோமே, மரியாதை நிமித்தம் அவர்களைப் பார்க்க விசாலாட்சி பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தேன். பாட்டி சகஜமாக இருந்தார். பிள்ளைகள் தங்களுடன் வந்துவிடும் படி சொல்லிக்கொண்டிருந்தார்கள். அமைதியாக,"பார்ப்போம்" என்றார். எனக்கோ மனம் தாங்கவில்லை. பாட்டியிடம் கேட்டேவிட்டேன்.

"மனதை எப்படி இத்தனை அமைதியாக வைத்துக் கொள்ள முடிகிறது? எனக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லை என்றால் கூட எதிரில் இருப்பவரை "உண்டு இல்லை' என்று ஆக்கிவிடும் அளவுக்குக் கோபம் வருகிறது. சின்னதாய் எனக்கு விருப்பமான பொருள் தொலைந்து போனாலும் தாங்க முடியவில்லை. சிறிய மூக்குத்தி தொலைந்து போனால் கூட சாப்பாடு தூக்கம் இல்லாமல் பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தீர்த்துவிடுகிறேன். நீங்கள் எப்படி இப்படி இருக்கிறீர்கள்?"

பாட்டி முகத்தில் லேசான முறுவல் தோன்றியது. "எதிரில் இருப்பவரை "உண்டு இல்லை' என்று ஆக்கிவிடும் அளவுக்கு கோபம் வருகிறது என்றாயே, அப்படி கோபப்பட்டதனால் என்ன கிடைத்தது? தொலைந்து போனதை நினைத்து அழுவதும் புலம்புவதும் தொலைந்ததை மீட்டுக் கொடுத்ததா? 

எல்லாம் பழக்கத்தில் வருவது தான். "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சொல்கிறோமே அதுபோல மனமும் நாம் எப்படிப் பழக்குகிறோமோ அப்படி இருக்கும். நான் எட்டு தம்பி தங்கைகளுடன் பிறந்தேன். விவசாயம் தான் குடும்பத்தின் வருமானத்திற்கு இருந்த ஒரே ஆதாரம். பத்துப்பேர் இருக்கும் வீட்டில் நமக்குப் பிடித்த சாப்பாடு எப்போதும் இருக்காது. என்றோ ஒருநாள் நமக்குப் பிடித்ததும் வரும். அப்படி நமக்குப் பிடித்த கூட்டு குழம்பு என்று கிடைக்கும் நாளில் அதைச் சாப்பிடுவது ஆனந்தமாக இருக்கும். 

பிடிக்காத காய்கறிகள் இருக்கும் நாளில் பிடிக்கவில்லை என்று சொன்னால் அம்மா, "இருப்பதை அமிர்தமாக சாப்பிட வேண்டும்" என்பார்கள்.

நல்லநாள் கிழமை என்று பண்டங்கள் செய்தால் பூனை எலி எதுவும் எடுத்து விடக்கூடாதே என்று ஒரு டப்பாவில் போட்டு பூட்டி உயரத்தில் வைத்துவிடுவார்கள். அம்மாவையும் பாட்டியையும் எத்தனை முறை நச்சரித்தாலும் அவர்கள் தரும்போது தான் தருவார்கள். அப்படித் தரும் பொழுது, கிடைக்காத அதிசயமான பண்டம் நமக்குக் கிடைத்துவிட்டது போல  கொண்டாடுவோம். எது கிடைத்தாலும் அது மகிழ்ச்சி. 

நினைத்ததையெல்லாம் வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டு இன்னும் கிடைக்காத ஒன்றுக்காக வருந்துவதை நான் வளர்ந்த காலத்தில் என்றும் கண்டதில்லை. 

வாழ்க்கையும் அப்படித் தான். பதினாறு வயதில் திருமணம் ஆயிற்று. கணவரே நண்பர். அவரின் வேலை மாற்றலாக ஆக பல மாநிலங்களில் வாழ்ந்தோம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவு. ஒருவருக்கு ஒருவர் ஆசிரியர். ஹிந்தியும் இங்கிலீஷும் அவர் சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொண்டது தான். பிள்ளைகள் பிறந்தார்கள். 

அவர்களை வளர்க்கும் பொழுது கிடைத்த அனுபவங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தன. கஷ்டங்கள் வராமல் இருக்குமா? வரத் தான் செய்யும். கூட இருந்து தாங்கிக் கொள்வதற்கு துணை தந்திருக்கிறார் இறைவன் என்று நன்றி சொல்லிக் கொள்வோம். 

"ஐம்பது ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம். நாடு முழுவதும் சுற்றி வந்தோம். பிள்ளைகள் வளர்வதைப் பார்த்துப் பெருமைப் பட்டோம். பேரக்குழந்தைகளை ரசித்தோம். மனநிறைவாக அவரோடு வாழ்ந்த காலத்தை எண்ணி திருப்திப்படுவது தான் நியாயம். வாழ்க்கையின் பெரும்பகுதியை நல்ல துணையோடு வாழ்ந்தோம் என்று சந்தோஷப்படுவதா? இன்னும் இருக்கப் போகும் சில காலம் அவர் இல்லாமல் போய்விட்டதற்காக வருந்துவதா? நீயே சொல்லு பார்ப்போம்" என்னிடமே திருப்பிக் கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினேன்.

விசாலாட்சி பாட்டியின் மனவிசாலம் புரியத் தொடங்கியது. ஊரே," இப்படி வாழ வேண்டும்" என்று ஆசைப்படும் வாழ்க்கை. அப்படி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சூத்திரம் எளிமையிலும் எளிமையாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 

கிடைக்காமல் போனதற்காக வருந்துவதை விட கிடைத்த செளபாக்யங்களை முழுமையாக அனுபவிப்பதில் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. என்ன கிடைத்ததோ அதை அமிர்தமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை போதும். தனக்கு மட்டுமல்லாது சுற்றி இருப்போருக்கும் ஆனந்தம் சாத்தியமாகும்.

இந்த எண்ணங்களால் அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை. அதிகாலையில் சுற்றுச்சுவர் ஓரமாக செம்பருத்திச் செடியில் மலர்ந்து கொண்டிருக்கும் மலர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன். பக்கத்து வீட்டில் கதவு திறக்கும் சப்தம். இதோ விசாலாட்சி பாட்டி தன் பேரனின் கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ கதை பேசியபடி நடைப்பயிற்சிக்கு சாலையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்.    

-  தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT