மகளிர்மணி

உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 12: அப்போதைக்கு அப்போதே அதிரடி!

மதுரையின் மகாராணியான மங்கையர்க்கரசி அன்னை மீனாட்சி மீது பக்தி கொண்டவள்.

கோதை ஜோதிலட்சுமி

மதுரையின் மகாராணியான மங்கையர்க்கரசி அன்னை மீனாட்சி மீது பக்தி கொண்டவள். மன்னரோ வேறு சமயத்தைப் பின்பற்றுகிறவர். என்ன ஆன்மிகப்பகுதியின் கதையை இங்கே மறந்து மாற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டேனோ என்று பார்க்கிறீர்களா? இல்லை. சரியாக நம்முடைய "உன்னால் முடியும் நம்பு' பகுதிக்காகவே தான் சொல்கிறேன். முழுவதுமாகக் கதையைக் கேளுங்கள் ஏன் சொல்கிறேன் என்று புரியும்.

மன்னர் நின்றசீர் நெடுமாறனுக்கு வெப்பு நோய் தாக்கியது. எத்தனையோ மருத்துவம் பார்த்தார்கள். நாட்டின் சிறந்த வைத்தியர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஒன்றும் பயன் இல்லை. மங்கையர்க்கரசியார் இதனால் மிகுந்த துயருற்றார். மன்னரின் நோய் தீர்க்க சோமசுந்தரக் கடவுளையும் அன்னை மீனாட்சியையும் தொழுதார். அப்பொழுது அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

இறையருள் நிரம்பப் பெற்ற அற்புதங்கள் பல நிகழ்த்திய திருஞான சம்பந்தரின் நினைவு மங்கயற்கரசியாருக்கு வருகிறது. மன்னரின் நோய் தீர்க்க அவரை வரவழைக்க எண்ணுகிறார். விஷயத்தை எடுத்துச் சொல்லி மன்னரின் நிலையையும் விளக்கி ஞானசம்பந்தரை அழைத்து வர தகுந்த மனிதர்களை அனுப்பி வைக்கிறார். அவர்களும் தேடி விசாரித்துக் கொண்டு ஞானசம்பந்தர் வேதாரண்யத்தில் இருப்பதாய் அறிந்து அங்கே வந்து சேருகிறார்கள். 

வேதாரண்யத்தில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்கியிருந்த நேரத்தில் அரசி அனுப்பிய குழுவினர் ஞானசம்பந்தரை சந்தித்து செய்தியைச் சொல்கிறார்கள். ஞானசம்பந்தர் உடனே அரசியின் செய்தியை ஏற்று மதுரைக்குப் புறப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இதனை அங்கே உடனிருந்த திருநாவுக்கரசரிடம் சொல்லி விடைபெற விழைகிறார். நாவுக்கரசரோ, தற்போது நாளும் கோளும் சரியாயில்லையே, இப்போதே புறப்பட வேண்டுமா? பொறுத்திருந்து போகலாமே என்று சொல்கிறார்.

இதனைக் கேட்ட சம்பந்தர், இறைவன் அருளும் துணையும் இருக்கும் பொழுது நாளும் கோளும் என்ன செய்து விடும்? கடமை ஆற்றப் போகும் எனக்கு அவையெல்லாம் நன்மையே செய்யும். கேடு ஒன்றும் விளையாது என்று ஒரு பதிகம் சிவன் மற்றும் பார்வதியின் பெருமைகளைப் பாடிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைகிறார். மன்னரின் நோயை குணப்படுத்துகிறார். தொடர்ந்து, மதுரையில் மடம் அமைத்து இறைசேவையில் மன்னரையும் மக்களையும் ஈடுபடச் செய்கிறார்.

இது கதையல்ல, உண்மைச் சம்பவம். இறைவனுக்கு சேவை செய்யும் அடியவராக சமயப் பெரியோர்களால் கொண்டாடப்படும் திருஞானசம்பந்தர், நாள் சரியில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று பயணத்தையும் தன்னுடைய வேலையையும் ஒத்திப்போடவில்லை. மாறாக, அன்றைக்கே அப்பொழுதே வேலையைத் தொடங்குகிறார். ஏறத்தாழ ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் தமிழர்கள் அவரது சரித்திரத்தை, பெருமையை பேசிக்கொண்டும் பதிகங்களைப் பாடிக்கொண்டும் இருக்கிறோமென்றால் அதற்கு அவரின் இத்தகைய பண்பே காரணம்.

அன்றைக்குச் செய்ய வேண்டியதை அன்றைக்கே செய்தல் என்பதும் அப்போதைக்கு அப்போதே என்று காரியத்தில் உறுதியாக நிற்பதும் தலைமைப் பண்பு மட்டுமல்ல வெற்றிக்கான அடிப்படைக் காரணமும் ஆகும். இதைச் செய்தவர்கள் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். வரலாறு வரை போவானேன். நம்முடைய அன்றாடங்களில் கூட இதனைப் பின்பற்றுவதே குழப்பமற்ற அமைதியான வாழ்வுக்கு சிறந்த வழியாக அமையும். 

நிர்மலாவுக்கு ஆசை அதிகம். ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும். சினிமா சர்க்கஸ் என்று போவதில் ஆர்வம். ஆனால், ஆசை நிறைவேறுவதில் பெரிய சிக்கல் எப்படியோ வந்துவிடுகிறது. கன்னியாகுமரி சுற்றுலா போக விரும்பினாள். பக்கத்து வீட்டுத் தோழியிடம், "போகலாமா? வருகிறாயா?' கேட்டாள். அவளும் ஒப்புக் கொண்டாள். சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனத்தில் பேசி இரண்டு பேருக்கும் இருக்கைகள் பதிவு செய்ய வேண்டும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தாள். நாளை வந்தது. அவளுக்கு வேறு வேலையும் வந்தது. 

நாளை தொலைபேசியில் அழைத்து விவரங்களைக் கேட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தாள். நாளையும் முடியவில்லை. இப்படியே பார்க்க வேண்டும் பேச வேண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தாளே தவிர அந்த வேலையைச் செய்யவில்லை. ஒரு வாரம் கழிந்தது. பக்கத்து வீட்டுத் தோழி விசாரித்தாள். இன்னும் சுற்றுலாவுக்குப் பதிவு செய்யவில்லை. உடனே அங்கேயே அவளை நிறுத்தி சுற்றுலா ஒருங்கிணைப்பாளரை தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டாள் தோழி. இருக்கைகள் தீர்ந்தாயிற்று. இனி அடுத்த முறை தான் என்று பதில் வந்தது. சுற்றுலா கனவு தகர்ந்தது. 

நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒருவார காலத்தைக் கடத்தியதால் இந்த நிலை என்பதை அப்போதும் நிர்மலா உணர்ந்தாளில்லை. எனக்கு மட்டும் நான் ஆசைப்படுவது எதுவும் வாய்ப்பதில்லை. எல்லாம் என் துரதிர்ஷ்டம் என்று புலம்பத் தொடங்கினாள். விம்மி அழுதாள். அழுது என்ன பயன்? சுற்றுலா செல்ல வேண்டுமென முடிவு செய்து கொண்ட உடன் அதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டுமல்லவா? ஒத்திப்போடும் குணம், நிராசை கோபம் வருத்தம் அழுகை என்று பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை என்ற தாழ்வு மனப்பான்மையில் வந்து முடிந்திருக்கிறது நிர்மலாவுக்கு. 

இதையே இப்படி சிந்தித்துப் பாருங்கள். அவள் சுற்றுலாவுக்கான வேலைகளை அன்றைக்கே செய்திருந்தால் ஆனந்தமாக தோழியுடன் கன்னியாகுமரி கடற்கரையில் உலாவி சூரிய உதயம் அஸ்தமனம் என்று ரசித்து மகிழ்ந்திருக்கலாம். படகு சவாரியும் விவேகானந்தர் தியான மண்டபத்தில் அமைதியும் நிறைவுமான மனதை அனுபவித்திருக்கலாம். திருவள்ளுவர் காலடியில் ஆக்ரோஷமான காற்றில் களித்திருக்கலாம். முந்திரிப் பழங்களை சுவைத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்த்திருக்கலாம். சங்கு வளையல்கள் வாங்கி கைகளில் பளிச்சென்று அணிந்து அழகு பார்த்திருக்கலாம். அம்மனின் மூக்குத்தி ஜொலிப்பதில் தன்னை மறந்திருக்கலாம். அனைத்தையும் இழந்தது "நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்ற மனப்பான்மையால் தானே. 

இதைக் கேட்கும் பொழுது அடடா... என்று நிர்மலாவின் மீது நமக்கு பச்சாதாபம் ஏற்படுகிறது. உண்மையில் நிர்மலா நமக்குள்ளும் இருக்கிறாள் அல்லது நாமும் மற்றொரு நிர்மலா தான். 

இந்த ஒத்திப்போடும் குணம் அதிகாலையில் எழுந்து கொள்ளும் பொழுதே பெரும்பாலும் ஆரம்பமாகிவிடுகிறது. இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாமே என்பதில் தொடங்கும் தாமதம் அன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து நம்மை ஒரு பதட்டத்திலும் பரபரப்பிலும் வைத்திருக்கும். இதனால், செய்ய வேண்டிய வேலைகளை செய்ய "நேரமே இல்லை" என்ற எண்ணம் வருகிறது. 

நேர மேலாண்மை அதற்கான திட்டமிடல் எதுவும் இல்லாமல் போகிறபோக்கில் நாம் காலம் தாழ்த்தி செய்யும் வேலைகள் சில நேரங்களில் பயன் இல்லாமலும் போய்விடுவதுண்டு. காலதாமதத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு தோன்றிவிட்டால் கச்சிதமாக வேலைகளை வெற்றிகரமாக முடித்து சந்தோஷமான நபராக நம்மால் சிறக்க முடியும். இதை சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றில் இருந்து தெரிந்து கொண்டேன்.

டயானா டிலோன்சர் என்றொரு எழுத்தாளர் "நெவர் பி லேட் எகைன்' என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் நேரம் தவறாமையின் அவசியத்தை, நேரம் தவறி ஒன்றைச் செய்வதால் ஏற்படும் விளைவுகளை சுவாரஸ்யத்துடன் அடுக்குகிறார். நேரம் தவறாமையைப் பின்பற்றாதவர்கள்  தங்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் தாமதத்தையே தொடர்கிறார்கள். நல்லதோ கெட்டதோ, எங்குமே அவர்களால் சரியான நேரத்தில் இருக்கவே முடிவதில்லை என்று உதாரணங்களுடன் குறிப்பிடுகிறார். 

என்னுடைய கணித ஆசிரியர் கண்டிப்பானவர் அதே நேரம் நகைச்சுவை உணர்வும் அவருக்கு அதிகம். "கணிதத்தில் வரும் சந்தேகங்களை அப்போதைக்கு அப்போதே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் பெற வேண்டிய நூறு மதிப்பெண்களில் சில உங்களிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடும்". அவர் இப்படிச் சொல்லும் பொழுது நாங்கள் கொல்லென்று சிரித்துவிட்டோம். இதனை சோதித்துப் பாருங்கள் அறிவியல் முடிவுகள் போல துல்லியமான உண்மை என்பதை விளங்கிக் கொள்வீர்கள் என்று சொன்னார். 

அந்த நாளில் முழுமையாக அதனைப் புரிந்து கொள்வதற்கான பக்குவம் இல்லை. பின்னாளில் நானே ஆசிரியர் ஆனபொழுது உணர்ந்தேன். ஒருநாள் செய்ய வேண்டிய வேலையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் அது மறுநாள் பணிகள் மீது சுமையாக ஏறுகிறது. சுமை மேலும் மேலும் உயர்ந்து நம்மால் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதைப் பல மாணவர்களிடம் கண்டேன். இன்றைக்கு நடத்திய பாடத்தை இன்றே படித்தால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால் தேர்வு வரை அது காத்திருப்புப் பட்டியலில் இருந்துகொண்டே இருக்கும். தேர்வில் அறியாத வினாவாக விஸ்வரூபம் எடுத்து நம்மை பயமுறுத்தும். சில மதிப்பெண்களை நாம் இழக்கும் படி ஆகும்.

நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அந்த நேரத்தில் இனிக்கும். அதனால் ஏற்படும் இழப்புகளை கணக்கிட்டுப் பார்த்தால் கசப்பான உண்மை புலப்படும். நாளை என்பதே ஒரு கற்பிதம் என்கிறார்கள் நம் முன்னோர். இன்றைக்கு என்பதே நம்மிடம் இருப்பது. இன்று புதிதாய் பிறந்தோம் என்ற உணர்வோடு ஒத்திப்போடும் மனப்பான்மையை ஓரம்கட்டிவிட்டு வெற்றிப்படிக்கட்டுகளில் முன்னேறுவோம்.

-  தொடரும்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT