திரைப்படங்கள், டி.வி. சீரியல்களுக்கு மத்தியில் மேடை நாடகங்களை ரசிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள்தான் என்பதை அண்மைக்காலங்களில் மேடையேறும் நாடகங்களைப் பார்த்தால் தெரியும்.
ஆணாதிக்கம் மிகுந்த நாடகத் துறையில் தப்போது பெண்களும் புகுந்து, புதுமைகளை நிகழ்த்தி வருகிறார்கள். அதிலும், பெண்கள் மட்டுமே அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வரும் 'சர்வம் நாடகப் பிரியாஸ்' நாடகக் குழுவினர் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் சர்வம் கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட்டில் வசித்து, அந்த நாடகக் குழுவை நடத்தி வரும் விஜயலட்சுமியிடம் பேசியபோது:
'எனக்கு சிறு வயது முதலே நாடகங்களின் மீது மிகுந்த ஆர்வம். கல்லூரியில் படித்தபோது பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறேன். பத்திரிகையாளராக நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர், எம்.என்.நம்பியார், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களையும், இயக்குநர்களையும் பேட்டி கண்டிருக்கிறேன். கலையின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. விமர்சனங்களை எழுதுவதற்காக நிறைய நாடகங்களைப் பார்க்க வேண்டி இருந்தது. இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்குள் இருந்த கலையார்வத்தைத் தட்டி எழுப்பின.
கரோனா காலத்தில் நாடகம் குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருவதால், இங்கு வசிக்கும் பெண்களையே நாடகத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஆர்வமும் திறமையும் இருக்கும் பெண்கள் என்னுடன் கைகோர்க்க, 'சர்வம் நாடகப் பிரியாஸ்' உருவானது. நாங்களே கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்தோம்.
எங்கள் முதல் நாடகத்துக்கு 'நோ எஸ்கேப் ஃப்ரம் கரோனா' என்று பெயர் வைத்தோம். ஊரடங்கு காலத்தில் வீட்டை நிர்வகிக்கும் பெண்களும், அலுவலகம் செல்லும் பெண்களும் சந்தித்த பிரச்னைகளை மையப்படுத்தி, தமிழில் நகைச்சுவையாக எழுதப்பட்டது. எங்களது அபார்ட்மென்ட்டில் இந்த நாடகத்தை அரங்கேற்றியபோது, பாராட்டுகள் குவிந்தன. அது தந்த ஊக்கம் இன்றுவரை தொடர்ந்து இயங்க வைக்கிறது. புதுப் புதுக் கருத்துகளை மையப்படுத்தி, ஏழு நாடகங்களை எழுதி இயக்கினோம்.
எட்டாவது நாடகமான 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்ற நாடகத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை தொழில்ரீதியான நாடக எழுத்தாளர் ஆர்.கேசவனிடம் ஒப்படைத்தோம். அந்த நாடகத்துக்கு தக்ஷின் என்பவர் இசையமைத்திருக்கிறார்.
இதன்பின்னர், பல பெண்கள் குழுவில் இணைய ஆரம்பித்தார்கள். அது தந்த உற்சாகத்தில், எங்கள் அபார்ட்மென்ட்டைத் தாண்டி வேறு பகுதிகளைச் சேர்ந்த அபார்ட்மென்ட்களிலும் நாடகத்தை அரங்கேற்றி வருகிறோம். 'விஸ்ராந்தி' உள்ளிட்ட முதியோர் இல்லங்களில் நாடகத்தை அரங்கேற்றியது மறக்க முடியாத அனுபவம்.
ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ஒன்பதாவது நாடகமான, 'கொன்னது நீதானா?' என்ற நகைச்சுவை கலந்த 'த்ரில்லர்' நாடகத்தை எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடத்த உள்ளோம். பின்னர் சபா மேடைகளிலும் மேடையேற்றத் திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் நாடகங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எழுதப்படுகின்றன. பெண்கள் விடுதியில் நடக்கும் சம்பவங்கள், அண்மைக்காலத் திருமணங்களில் இருக்கும் சவால்கள், வீடுகளில் பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை, முக்கியத்துவம் என நாங்கள் போடும் நாடகங்களின் மையக் கருத்தை பலரும் ரசிக்கின்றனர். பாராட்டு
கிறார்கள். எங்கள் நாடகங்களில் பெரும்பாலும் மெல்லிய நகைச்சுவை இழையோடும். அதைக் கேட்பவர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள். எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்களில் பலர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அனைவரும் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் இரவு 9 மணிக்கு மேல்தான் ஒத்திகை நடக்கும்.
இது எங்கள் எல்லோருடைய கூட்டு முயற்சி. பெண்களிடையே மறைந்திருக்கும் நடிப்புத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்ட எங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு'' என்கிறார் விஜயலட்சுமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.