அரிசி சுண்டல்
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி- 500 கிராம்
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
பச்சை மிளகாய்- 5
தேங்காய்த் துருவல்- அரை மூடி
தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு
செய்முறை: முதலில் அரிசியை சுத்தம் செய்து, பொரித்துக் கொள்ளவும். பின்னர் தேவையான தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பொரித்த அரிசி, தேவையான உப்பைச் சேர்த்து அரைப்பதம் வெந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து அத்துடன் வடித்து வைத்துள்ள அரிசி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்து, சிறிது நேரம் வறுத்து இறக்கிவிடவும்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
ராகி சப்பாத்தி
தேவையான பொருள்கள்:
ராகி மாவு - 500 கிராம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 5
வெங்காயம்- 3
பூண்டு- 7 பற்கள்
இஞ்சி- 1 சிறிய துண்டு
செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தேவையான தண்ணீர் வைத்து, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரில் சிறிது, சிறிதாக ராகி மாவைச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். அடுப்பில் இருந்து மாவை இறக்கி வைத்து, சற்று ஆறியதும் சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு உசிலி
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு, வெங்காயம்- தலா 200 கிராம்
அவல்- 300 கிராம்
கொத்துமல்லி இலை- 1 பிடி
மஞ்சள் பொடி- 1 சிட்டிகை
பச்சை மிளகாய்- 10
பெருங்காயப் பொடி, கடுகு- தலா
1 தேக்கரண்டி
எலுமிச்சைப் பழம்- 1
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: அவலை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, களைந்து வடிய வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய்ப் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு போட்டு வேக வைத்து, பெருங்காயப் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வெந்ததும் அவலைப் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வெந்ததும் கீழே இறக்கவும். அவை நன்கு ஆறியதும் எலுமிச்சைச் சாறை ஊற்றிக் கலக்கவேண்டும்.
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.