'அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது, பயத்தைவிட வாகனத்தின் உள்ளே இருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பதே தலையாயக் கடமையாக உணர்ந்து வாகனத்தை இயக்குகிறேன்'' என்கிறார் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் விஜயா.
இந்தப் பணிக்குத் தேர்வாகியுள்ள தமிழகத்திலேயே இரண்டாவது பெண் ஓட்டுநர் இவர். திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த நடராஜன்- சமுத்திரக்கனி தம்பதியின் மகள் முப்பத்து நான்கு வயதான விஜயா. இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட தியாகதுருகத்தைச் சேர்ந்த கோவிந்தனுக்கும் 2008-இல் திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கோவிந்தன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விஜயா 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநராகப் பணியாற்றி, மனித உயிர்களைக் காக்கும் சேவையாற்றி வருகிறார்.
அவர் கூறியது:
'சிறுவயது முதலே எனக்கு ஓட்டுநர் பணியில் விருப்பம் உண்டு. எனது சகோதரருடன் சேர்ந்து மினிலாரி போன்ற சரக்கு வாகனங்களில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சேமியா, கோதுமை உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சென்று விநியோகம் செய்திருக்கிறேன்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கான நேர்முகத் தேர்வில் முதல் முறை பங்கேற்றபோது, தேர்வாகவில்லை. இரண்டாவது முறை பங்கேற்று, பணிவாய்ப்பைப் பெற்றேன்.சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இரவு, பகல் என சுழற்சி முறையில் மனித உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது, பயத்தைவிட வாகனத்தின் உள்ளே இருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பதே தலையாயக் கடமையாக உணர்ந்து வாகனத்தை இயக்குகிறேன்'' என்கிறார் விஜயா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.