தாஜ்மகால்
யமுனா நதியின் கரையினிலே இதயம் களிக்கும் வகையினிலே கமழும் புகழின் மாளிகையாம் அன்பின் சின்னம் தாஜ்மகால்! மனைவி மும்தாஜ் பேகத்தின் நினைவாய் ஷாஜகான் ஆசையுடன் வனைந்த பேரெழில் ஓவியமாம் வானென உயர்ந்த தாஜ்மகா
யமுனா நதியின் கரையினிலே
இதயம் களிக்கும் வகையினிலே
கமழும் புகழின் மாளிகையாம்
அன்பின் சின்னம் தாஜ்மகால்!
மனைவி மும்தாஜ் பேகத்தின்
நினைவாய் ஷாஜகான் ஆசையுடன்
வனைந்த பேரெழில் ஓவியமாம்
வானென உயர்ந்த தாஜ்மகால்!
மினாரட் என்னும் கோபுரங்கள்
மிளிரும் நான்கு புறங்களிலும்
இனிய உலக அதிசயங்கள்
ஏழில் ஒன்றாம் தாஜ்மகால்!
எட்டுக் கோண வடிவினிலே
எழுந்த அதிசய மாளிகையாம்
கட்டடக் கலையில் உயர்வாக
காணும் அழகிய தாஜ்மகால்!
வெள்ளைப் பளிங்குக் கற்களினால்
வியப்பாய் மிளிரும் புகழாரம்
கொள்ளை அழகாய் நெஞ்சத்தை
கொள்ளை கொள்ளும் எழிலாரம்!
நெஞ்சை அள்ளும் காவியமாம்
நிறைந்த அன்பின் ஓவியமாம்
கொஞ்சும் இந்தியத் தாரகையாம்
கோலம் மிகுந்த தாஜ்மகால்!