மன்னரின் அங்கி!
ஓருநாள் மூன்று மனிதர்கள் மன்னரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பழைய பெட்டியைக் கண்டெடுத்தனர். அந்தப் பெட்டியை எடுத்து நன்றாகச் சுத்தம் செய்தனர். மிகவும் அழகாக இருந்தது அ
ஓருநாள் மூன்று மனிதர்கள் மன்னரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பழைய பெட்டியைக் கண்டெடுத்தனர். அந்தப் பெட்டியை எடுத்து நன்றாகச் சுத்தம் செய்தனர். மிகவும் அழகாக இருந்தது அப்பெட்டி! அதைத் திறந்து கூடப் பார்க்காமல் அப்படியே எடுத்துப் போய் மன்னரிடம் கொடுத்து விட முடிவு செய்தனர்.
அந்தப் பெட்டி மன்னரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. மன்னர், அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு, "இங்கே பாருங்கள், மிகவும் அழகான அங்கி ஒன்று இப் பெட்டிக்குள் இருக்கிறது! சூரியனைப் போல தகதகக்கிறது. என் கண்கள் கூசும் அளவுக்கு இந்த அங்கி ஜொலிக்கிறது!' என்று ஆச்சரியப்பட்டார்.
மன்னர் அந்த அழகிய அங்கியை எடுத்து அணிந்து பார்த்தார். அவருக்கு அது மிகவும் பிடித்துப் போனது. அதனை அணிந்துகொண்டு நகரம் முழுவதும் சுற்றினார். அப்போது அவர், "என்னைப் பாருங்கள்! நான் சூரியனைப் போலவே மின்னுகிறேன். நானே தகதகவென்று மின்னும்பொழுது சூரியன் யாருக்கு வேண்டும்?' என்றார்.
அனைவரும் மன்னரைப் பார்த்து, "ஆமாம் அரசே! நீங்கள் ஜொலிக்கிறீர்கள்... எங்களுக்கு சூரியன் தேவையில்லை! சூரியன் எங்கள் மன்னரைப் போல ஒளி தரவில்லை!' என்றார்கள்.
வானத்தின் உச்சியிலிருந்த சூரியன் இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் வருத்தமுற்றான். "மன்னரும் இந்த மக்களும் நான் தேவையில்லை என்று நினைக்கிறார்களே... நான் என்ன செய்வது? பேசாமல் இங்கிருந்து போய்விடுகிறேன்' என்று எண்ண ஆரம்பித்தது.
அப்படியே வானிலிருந்து அகன்று எங்கோ சென்று மறைந்து கொண்டது.
அடுத்த நாள், காலையில் சூரியன் வழக்கம்போலத் தோன்றவில்லை! அவன்தான் எங்கோ சென்று மறைந்துவிட்டானே! பகல் முழுவதும் இரவாகவே மாறிப் போனது! மன்னர் அவரது அழகிய அங்கியை அணிந்து கொண்டார். ஊர் சுற்றக் கிளம்பினார். ஆனால் அந்த அங்கி அந்தப் பகல்-இரவில் ஜொலிக்கவில்லை. ஒளியும் தரவில்லை.
"எல்லோரும் பாருங்கள்! நாள் முழுவதும் இரவாகவே இருப்பதால் மிகவும் இன்பமாக இருக்கிறது. நாம் எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டே இருக்கலாம். இனிமேல் காலையில் எழுந்திருக்கத் தேவையில்லை! இதுதான் நம் வாழ்க்கையின் மிக இனிமையான நாட்கள். நாம் எந்த வேலையையும் இனி செய்யத் தேவையில்லை! நாம் ஓய்வாக இருக்கலாம்.... நாள் முழுவதும் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஜாலியாக இருக்கலாம்' என்று கூறினார். மக்களுக்கும் இது பிடித்திருந்தது. எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.
இப்படியே சில நாட்கள் கழிந்தன. யாருமே எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தார்கள். ஆனால் இந்த சந்தோஷம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. எப்பொழுதும் இரவாக இருப்பது பிடிக்காமல் போனது... கொஞ்சம் கொஞ்சமாக அலுத்துப் போனார்கள். "இது நன்றாகவே இல்லை... இது சரியில்லை....' என்று எல்லாரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
இறுதியாக மக்கள் அனைவரும் ஒரு முடிவோடு மன்னரைக் காணச் சென்றார்கள். "எப்போதும் இரவாக இருப்பதால் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை... எங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்யாமல் இருப்பது சகிக்கவில்லை! இதை எப்படியாவது மாற்ற வேண்டும்.. என்ன செய்வது அரசே? நீங்கள்தான் இதற்கு முடிவு கண்டுபிடிக்க வேண்டும்!' என்றனர்.
மன்னருக்கும் அது அலுத்துப் போய்தான் இருந்தது! மக்களைப் பார்த்து, "நானும் சூரியனைப் போல ஜொலிக்க முடியவில்லை! நமக்கு சூரியன் அவசியம் தேவை! ஆகையால் நான் சூரியனைப் பார்த்து வெளிச்சம் தருமாறு வேண்டிக் கேட்கப் போகிறேன்' என்றார் மன்னர்.
மன்னர், சூரியனைத் தேடி வெகுநாட்கள் பயணம் செய்தார். பெரிய பெரிய மலைகளை எல்லாம் கடந்து சென்றார். உயரமான இடங்களுக்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தார். இறுதியில் மிக உயரமான இடம் ஒன்றைக் கண்டார். அங்கு செல்வதற்கு நிறையப் படிகள் இருப்பதையும் பார்த்தார். படிகளில் ஏறிச் சென்றார். உச்சயில் சூரியன் சோகமாக இருப்பதைப் பார்த்தார்.
"சூரியனே! இறுதியாக உன்னைக் கண்டிபிடித்து விட்டேன். நீதான் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். தயவுசெய்து மீண்டும் வந்து, எங்களுக்கு வெளிச்சத்தைக் கொடு' என்று கெஞ்சினார்.
"எதற்காக நான் வரவேண்டும்? நீதான் என்னை வேண்டாம் என்று சொன்னாயே! என்னைவிடப் பிரகாசமாக உன்னால் ஜொலிக்க முடியுமே... பிறகென்ன.... நீயே பகலை உருவாக்கிக் கொள்!' என்றது சூரியன்.
"இல்லையில்லை! சூரியனே! நீ அளித்த வெளிச்சத்தில்தான் என் அங்கி மின்னியது. நீ ஒருவன்தான் இந்த உலகுக்கு வெளிச்சம் தரக்கூடியவன். நீ வேண்டாம் என்று இனி ஒருபோதும் கூறமாட்டேன். என் தவறுக்கு வருந்துகிறேன்' என்று அழாதகுறையாகப் பேசினார் மன்னர்.
இதைக் கேட்ட சூரியன் மிக்க மகிழ்ச்சி அடைந்தது. மறுபடியும் தனது பிரகாசமான வெளிச்சத்தைத் தர ஆரம்பித்தது!
இதன் பிறகு ஒவ்வொரு நாளும் சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைந்தது. மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர்.
மன்னர் அந்த அழகிய ஆடையை மீண்டும் அந்தப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார். அதன் பிறகு மன்னர் அந்தப் பெட்டியைத் திறக்கவேயில்லை!