முகப்பு
சிறுவர்மணி

உற்சாக டால்ஃபின்

இது சொல்லிக்கொடுப்பதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

டால்ஃபின் அழகான கடல்வாழ் உயிரினமாகும். இதற்கு வளமான மூளை உள்ளது. அதிபுத்திசாலி. இது சொல்லிக்கொடுப்பதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். இது கடலில் துள்ளிப் பாய்வதும் மனிதர்களிடம் கொஞ்சி விளையாடுவதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
 மற்ற உயிரினங்கள் ஏதோ தமக்கென இப்படிக் கடல் வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறதே என்று நினைக்க, தாமே கடல் நாயகன், நாயகி என்று நினைத்துக் கொள்ளும் உயிரினம் டால்ஃபின். கடலையே தன்னுடைய விளையாட்டுத் திடலாக எண்ணி உற்சாக ஊர்வலம் வரும் உயிரினம் டால்ஃபின்தான்.
 டால்ஃபின் ஆதியில் நிலத்தில் வாழ்ந்து பிறகு கடலில் புகுந்தது என்றும் சில விலங்கியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். உலகின் சில பகுதிகளில் கடல் விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. அங்கே டால்ஃபின்கள் ஆடும் ஆட்டங்களை லட்சக்கணக்கானவர்கள் தினமும் பார்த்து மகிழ்கிறார்கள்.
 குட்டிப் போட்டு பால் கொடுக்கும் பிராணி வகையைச் சேர்ந்தது டால்ஃபின். பிறந்த நொடியிலிருந்து கடல் வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது அந்தக் குட்டி.
 ஆஸ்திரேலியாவின் டால்ஃபின் விளையாட்டுக் கூடம் ஒன்றில் பயிற்சிபெற்ற சில டால்ஃபின்கள், கடலில் மூழ்கிப் போகும் மனிதனைக் காப்பாற்றுவதும் உண்டு. டால்ஃபின்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் விளையாட்டுகளில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதும் ஒரு விளையாட்டாக நிகழ்த்தப்படும்.
 டால்ஃபின்கள் கூட்டம் கூட்டமாக வாழும். அவற்றிற்குள் ஒரு சமுதாயக் கட்டமைப்பு இருப்பது போலத் தெரிகிறது. ஒரு டால்ஃபினின் மூளை சராசரி மனிதனின் மூளையைவிட கூடுதல் எடை கொண்டது. மனித மூளை 1450 கிராம். டால்ஃபினின் மூளை எடை 1700 கிராம். எடைமட்டுமல்ல, அதன் செயல்பாடுகளும் மேம்பட்டதாகவே இருக்கின்றன. தண்ணீருக்குள்ளும் அதற்கு அபாரமான பார்க்கும் சக்தியும், கேட்கும் சக்தியும் உண்டு.
 மனிதன் இந்த டால்ஃபின்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது - எந்தச் சூழ்நிலையிலும்வெகு இயல்பாக இருப்பது; கொடுக்கப்படும் பயிற்சியை மகிழ்ச்சியுடன் ஏற்றுத் திறம்படச் செயல்படுவது. பெற்ற குழந்தைகள் மீது பாசம்; அத்துடன் ஓர் இணக்கமான குடும்பமாக வாழ்வது; எப்போதும் உற்சாகமாக இருப்பது; உயிர்களை நேசிப்பது போன்றவைகளாகும்.
 - தங்க. சங்கரபாண்டியன், சென்னை.

முழு கட்டுரையைப் படிக்க →