மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!
1966-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டில் என்ற நகரத்தில் பிறந்தவர் கெயில் டேவர்ஸ்.
கெயில் டேவர்ஸ்
1966-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டில் என்ற நகரத்தில் பிறந்தவர் கெயில் டேவர்ஸ். இவர் ஒரு விளையாட்டு வீராங்கனை.
1988-ஆம் ஆண்டு தென் கொரியாவில் சியோலில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் நூறு மீட்டர் வேக ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்று விரும்பினார். அவர் ஆசைப்பட்டது நிறைவேறுவது சாத்தியமே. ஏனெனில் 1987-ஆம் ஆண்டில் அவர் வேகப் பந்தய ஓட்டத்தில் அமெரிக்காவில் இரண்டாவது இடத்திலும் வேகத்தடை ஓட்டத்தில் உலக அளவில் ஏழாவது இடத்திலும் இருந்தார்.
அந்தச் சமயத்தில் அவருடைய நூறு மீட்டர் ஓட்டத்தின் சாதனை 10.98 விநாடியாக இருந்தது. அதே சமயம், தடை ஓட்டத்தில் (நூறு மீட்டர்) தீவிரப் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நேரத்தை இன்னும் குறைத்து, ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவருடைய பயிற்சியாளரும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று முழுமையாக நம்பினார்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு பெற்று, சியோல் சென்றார். ஆனால் அங்கு நடந்த கால் இறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடியபோது வெற்றிவாய்ப்பை இழந்து, மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.
பல ஓட்டங்களில் வெற்றி பெற்ற அவருக்குத் திடீரென்று என்ன ஆயிற்று?
தனது கால்களில் சக்தி குறைந்து கொண்டு வருவதை உணர்ந்தார். கால்கள் வேகமாக ஓட ஒத்துழைக்கவில்லை. என்ன ஆயிற்று?
ஒலிம்பிக்கில் வெற்றிபெற வேண்டும் என்ற அதிக ஆவேசத்தினால், எதிர்பாராமல் அவரது மனம் பாதிக்கப்பட்டு, அதனால் உடலின் செயல்பாடுகள் குறைந்தனவா? அல்லது வேறு ஏதாவது காரணங்களினாலா?
ஓடி ஓடிப் பயிற்சி செய்ததாலா? உடலில் ஏற்பட்ட தளர்ச்சியாலா?
அப்படியானால் என்ன காரணம்?
அவரது உடல் சில நேரங்களில் காரணம் இல்லாமல் நடுங்கியது. கால்களில் பயங்கர வலி ஏற்பட்டது.
பல டாக்டர்களும் ஒரு கட்டத்தில் இரண்டு முழங்கால்களிலும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கருதினர்.
கடைசியில் டாக்டர்கள் கண்டுபிடித்த காரணம் - அவருடைய தைராய்ட் சுரப்பிகள் பாதிக்கப்பட்டிருந்தன என்பதுதான்.
ஆனால் அதற்கு நிவாரணம் தரும் மருந்துகளில் இருந்த ரசாயனப் பொருட்கள், ஒலிம்பிக் சங்கத்தால் தடை செய்யப்பட்டவையாகும். அவற்றை உட்கொண்டால் அவர் இனி எக்காலத்திலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடும்.
அதற்காக மாற்றுச் சிகிச்சை முறைகளை கெயில் டேவர்ஸ் நாடினார். வேறுவகை மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தார். உடல்நிலை படிப்படியாகத் தேற ஆரம்பித்தது.
இந்நிலையிலும் அவர் மனம் தளரவில்லை. 1992-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் "எப்படியாவது தங்கம் வெல்வேன்' என்று கனவு கண்டு கொண்டிருந்தார். அவருடைய பயிற்சியாளரும் இந்தக் கனவை நிறைவேற்ற பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.
முதலில் கெயில் டேவர்ஸ் வீட்டுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்தார். பின்னர் வெளியில் நடக்க ஆரம்பித்தார். பிறகு சற்று நீண்டதூரம் நடக்க ஆரம்பித்தார். சிறிது தூரம் ஓடிப் பார்த்தார்.
பின்னர் விளையாட்டு மைதானங்களுக்குச் சென்று ஓட ஆரம்பித்தார். அவருடைய பயிற்சியாளரும் மிகுந்த நம்பிக்கையை ஊட்டிக்கொண்டிருந்தார்.
சிறிது காலத்துக்குள்ளேயே பழைய நிலைக்குத் திரும்பினார் கெயில். பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற ஆரம்பித்தார்.
ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள விரைவிலேயே தேர்வு செய்யப்பட்டார்.
1992-ஆம் ஆண்டு ஸ்பெயினின் பார்ஸலோனாவில் நடந்த ஒலிம்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றுத் தான் பிறந்த அமெரிக்க மண்ணுக்குப் பெருமை சேர்த்தார்.
நினைத்ததைச் சாதித்த இவரது தளராத மன உறுதியும் லட்சிய வேட்கையும் மற்றவர்களும் இவரைப் போல சாதனைகள் புரிய வழிகாட்டியாகத் திகழும்.