முகப்பு
சிறுவர்மணி

பறவையைத் தொடர்வோம்...

உடல் முழுவதும் கருஞ்சாம்பல் நிறத்திலும் தலையும் கழுத்தும் கொஞ்சம்கூட சிறகுகளோ முடிகளோ இல்லாமல் வழுக்கையாக செந்நிறத்தில் இருப்பதால் இந்தப் பறவைக்கு செந்தலைக் கழுகு என்று பெயர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

செந்தலைக் கழுகு
 
 உடல் முழுவதும் கருஞ்சாம்பல் நிறத்திலும் தலையும் கழுத்தும் கொஞ்சம்கூட சிறகுகளோ முடிகளோ இல்லாமல் வழுக்கையாக செந்நிறத்தில் இருப்பதால் இந்தப் பறவைக்கு செந்தலைக் கழுகு என்று பெயர்.
 76 முதல் 86 செ.மீ. நீளப் பறவை. எடை 6 கிலோ வரை இருக்கும். சிறகுகளை விரித்தால் நீளம்: 2 மீட்டர் வரை. பெண் பறவை முற்றிலும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 வட இந்தியாவில் அதிகம் காணப்படும் பறவை. சிங்கப்பூரிலும் இதைப் பார்க்கலாம்.
 மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் விவசாய நிலங்களுக்கருகிலும் மற்றும் காடுகளிலும் இது வசிக்கும்.
 குழுக்களாக வாழும் பறவை. மரங்களில் கூடு கட்டும். ஒரு சமயத்தில் ஒரு முட்டைதான் இடும். 45 நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்.
 இறந்த பிராணிகளின் உடலைச் சாப்பிட்டு உயிர்வாழும் பறவை. ஆனால் இதன் உணவே இதற்கு எமனாகி விட்டது. இறந்த உடல்களிலுள்ள விஷம் இதன் உடலில் கலந்து விடுவதால் இதன் வாழ்நாள் மிகக் குறைவு.இதனால் இந்தப் பறவை அரியவகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
 

குடுமிப் பருந்து
 
 தலையில் நான்கு சிறகுகளைக் கொண்ட கிரீடம் இருப்பதால் இந்தப் பறவைக்கு குடுமிப் பருந்து என்று பெயர்.
 இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் காணப்படும் பறவை. பெரும்பாலும் தனித்து வாழும் பறவை. குச்சிகளைக் கொண்டு மரங்களில் கூடு கட்டி, ஒரு சமயத்தில் ஒரு முட்டையிடும் பறவை.
 72 செ.மீ. நீளப் பறவை. சற்றே மெல்லிய உடம்பு. உடலின் மேல் பகுதியில் பழுப்பு நிறமும் வெள்ளை நிறமும் கலந்து காணப்படும். சிறகுகளின் வடிவமைப்பு பார்க்க அழகாக இருக்கும். வால் பகுதி சற்றே நீண்டு காணப்படும்.
 சிறிய பிராணிகளையும் பறவைக்குஞ்சுகளையும் உணவாகக் கொள்ளும். மரக்கிளைகளில் உட்கார்ந்தபடியே தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியே வரும் சிறிய பிராணிகளை கவனித்துக் கொண்டே இருந்து, சட்டென்று கீழே பறந்து வந்து தனது இரையைக் கவ்விச் சென்று விடும்.
 
 விரால் அடிப்பான்
 
 விரால் அடிப்பான் கடல் பருந்து இனத்தைச் சேர்ந்தது. விரால் மீன் என்றால் இதற்கு மிகவும் இஷ்டம். அதனால் நீருக்குள்ளேயே தென்படும் விரால் மீன்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருந்து நீருக்குள் சற்றே மூழ்கி விரால் மீனைக் கவ்விப் பிடித்து வேட்டையாடுவதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.
 60 செ.மீ.நீளப் பறவை. சிறகுகளை விரித்தால் 180 செ.மீ. நீளம் இருக்கும். எடை 2 கிலோ.
 உடலின் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும் மற்றப் பகுதிகளில் சாம்பல் நிறத்திலும் இருக்கும். வயிற்றுப் பகுதி மட்டும் வெள்ளையாக இருக்கும். தலை முற்றிலும் சாம்பல் நிறம். கரு நிறக் கண்களைக் கொண்ட பறவை. கருப்பு நிற அலகு. கால்களும் வெள்ளை நிறமே.
 அண்டார்டிகாவைத் தவிர உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் பறவை. நீர் நிலைகளுக்கருகில் வசிக்கும். மரங்களில் மலையிடுக்குகளிலும் கூடு கட்டி வசிக்கும்.
 ஒரு சமயத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். ஐந்து வாரங்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.