சுதந்திரம்
அகிம்சைப் போரின் வெற்றியால் அண்ணல் பெற்றுத் தந்தது!
அகிம்சைப் போரின் வெற்றியால்
அண்ணல் பெற்றுத் தந்தது!
அகிலம் இன்றும் மதித்திட
அன்பைக் கற்றுத் தந்தது!
பேச, எழுத, சொத்துகள்
பேணும் உரிமை தந்தது!
தேசம் மொழியைக் காத்திடும்
திறனை வளர்த்து விட்டது!
கடமை, உரிமை இரண்டையும்
கண்ணாய்ப் போற்றச் செய்தது!
மடமை அகன்று மக்களை
மதியுடன் வாழ வைத்தது!
உயர்வு, தாழ்வு இன்றியே
உழைத்து உயர வைத்தது!
பயத்தை நீக்கி, பணிவெனும்
பண்பைப் பலர்க்கும் அளித்தது!
வாக்குச் சீட்டின் திறத்தினால்
வல்லவர் தேர்ந்து கொள்ளவும்
ஆக்கும் செயல்கள் அனைத்திலும்
அழகாய் ஒற்றுமை கண்டது!
எல்லாச் சிறப்பும் அளித்திடும்
இனிமை வாய்ந்தது சுதந்திரம்!
சொல்லால், செயலால் பிறருடன்
சுகமாய் வாழ்வோம் நிரந்தரம்!