முகப்பு
சிறுவர்மணி

மாற்றுத்திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

கர்நாடக இசையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்களில் வயலின் மேதை சந்திரசேகரனும் ஒருவர். கர்நாடக இசையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள், எம். சந்திரசேகரனைப் பற்றி அறியாமல் இருக்கமுடியாது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:10 PM
பகிர்:

வயலின் மேதை சந்திரசேகரன்

கர்நாடக இசையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்களில் வயலின் மேதை சந்திரசேகரனும் ஒருவர். கர்நாடக இசையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள், எம். சந்திரசேகரனைப் பற்றி அறியாமல் இருக்கமுடியாது.
 அக்காலத்தில் இசையுலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்களான ஜி.என்.பாலசுப்பிரமணியம், மதுரை மணி அய்யர், மதுரை சோமு, செம்பை வைத்தியநாத அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர், பாலமுரளி கிருஷ்ணா ஆகிய பாடகர்களின் கச்சேரியில் வயலின் வாசித்த மேதை சந்திரசேகரன். இவரது வாசிப்பில் ஒவ்வொரு ராகமும் உருவம் பெற்று நேரில் வந்து நடனம் ஆடுவதுபோல் தோன்றும்.
 இனிமை.... இனிமை... சற்றும் பிசகாத வாசிப்பு. இவர் வாசிக்கும் போது, "இன்னும் சிறிது நேரம் வாசிக்கமாட்டாரா?' என்ற தவிப்பு கேட்பவர்களுக்கு ஏற்படும். பிரபலமான பாடகர்களோடு மட்டுமல்லாது தனியாகவும் வயலின் கச்சேரி செய்தும், தனது மகள் பாரதியோடும் சேர்ந்து வாசிக்கும் கச்சேரிகளும் செய்துள்ளார்.
 இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று இசை ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். தனியாக வாசிக்கும்போது பாடிக் கொண்டும் வாசிப்பார். சிறந்த பாடகராகவும் விளங்கிய இவர், தனியாக சங்கீதக் கச்சேரிகளையும் நடத்தியுள்ளார்.
 இவர் எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டே காட்சியளிப்பார். காரணம், இரண்டு கண்களிலும் பார்வைத் திறன் அற்றவர் என்பதுதான்.
 வயலின் இசை மேதையாகத் திகழ்ந்த சந்திரசேகரன் 11-12-1937-இல் கொல்கத்தாவில் பிறந்தவர். அவருடைய இரண்டாவது வயதில் மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டு அதன் காரணமாக முற்றிலும் பார்வைத் திறனை இழந்தார். இளம் வயதிலேயே அவருடைய தந்தையார் காலமானார். தனது அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார்.
 சிறுவனாக இருக்கும்போதே சந்திரசேகரனுக்கு இசையின் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தை அறிந்து கொண்ட இவரது அன்னையார் தானே இவருக்கு குருவாக இருந்து பாட்டு கற்பித்தார். அவர் முறைப்படியான சங்கீதம் கற்றுக் கொண்டவர் என்பதால் தன்னுடைய மகனிடம் காணப்பட்ட சங்கீத ஆற்றலைப் புரிந்து கொண்டு கற்றுத் தந்தார். இனி தனது மகனின் எதிர்காலம் சங்கீதத்தில்தான் என்பதைப் புரிந்து கொண்ட அவர், அத்துறையில் மகனை ஊக்குவித்தார்.
 அத்துடன் "பிரைல்' முறையில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், வடமொழி போன்றவற்றில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். மற்ற சில இசைவாணர்களிடமும் சந்திரசேகரன் இசையைக் கற்றுக் கொண்டார்.
 வித்யாலயா நரசிம்ம நாயுடு என்பவரிடம் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார். தன்னுடைய பதினோராவது வயதிலேயே பிரபலமான வித்வான்களுக்கு வயலின் வாசிக்கத் தொடங்கினார்.
 தனது முதலாவது வயலின் தனிக் கச்சேரியை 1949-ஆம் ஆண்டு தியாகராஜ ஆராதனை விழாவில் நிகழ்த்தினார். 1950-ஆம் ஆண்டு, இசைக் கலைஞர்கள் பெரிதாகப் போற்றும் அமைப்பான மியூசிக் அகாடமியில் சிறந்த வயலின் வித்வானாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனின் திறமையைப் பாராட்டுவது என்பது மிகவும் அபூர்வம். இவர் மிகவும் வித்தியாசமான விசாலமான மனம் படைத்தவர். சக கலைஞர்களை மனதாரப் பாராட்டும் பழக்கம் கொண்டவர்.
 தன்னுடைய சங்கீதக் கலை இனிவரும் தலைமுறையினருக்கும் பயன்படவேண்டும் என்று கருதி பலருக்கும் தன்னுடைய கலையை மனதார தானமாகக் கொடுத்திருக்கிறார். இன்றைக்கு வயலின் வாசிப்பில் பிரபலமாகியிருக்கும் பல கலைஞர்களும், சந்திரசேகரனின் சீடர்கள்தான்.
 இளம் தலைமுறைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே "சாருபாலா மோகன் டிரஸ்ட்' என்னும் ஓர் அறக்கட்டளையை நிறுவி, இளம் கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தும் அவர்களுக்கு விருதுகள் வழங்கியும் ஊக்கமளித்துவருகிறார்.
 சங்கீத நாடக அகாடமியின் விருது, கலைமாமணி விருது போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். தனது அன்னையை தெய்வமாக நினைத்து தினமும் வணங்கிப் போற்றும் வழக்கம் உள்ளவர் இசை மேதை சந்திரசேகரன். உலகம் முழுவதும் பரந்து இருக்கும் இவரது ரசிகர்கள், இவரது அடுத்த கச்சேரியை எப்போது கேட்கலாம்? என்று மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 பார்வை இல்லை என்ற குறை இவருடைய வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் புகழுக்கும் தடையாக இருக்கவே இல்லை!
 -அடுத்த இதழில்: சுதா சந்திரன்
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →