மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!
ஒரு தண்ணீர்க் குழாயின் அடியில் ஹெலன் கெல்லரின் கைகளை வைத்துக் கொள்ளச் சொல்லி தண்ணீரின் தன்மையை உணர வைத்து
ஹெலன் கெல்லர்
ஒரு தண்ணீர்க் குழாயின் அடியில் ஹெலன் கெல்லரின் கைகளை வைத்துக் கொள்ளச் சொல்லி தண்ணீரின் தன்மையை உணர வைத்து, அதே சமயத்தில் ஆங்கில மொழியில் அதற்குரிய வார்த்தையையும் விரல்மொழியில் ஆனி ஸல்லிவன் கற்றுத் தந்தார்.
எல்லா வார்த்தைகளுக்கும் பொருட்கள் காட்ட முடியாது என்பதையும் அரும்பாடுபட்டு உணரவைத்தார். எடுத்துக்காட்டாக சந்திரன் என்ற பொருளைத் தரும் MOON என்பதைத் தொட்டுப்பார்க்க முடியாது. அடுத்து ஆங்கில எழுத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் புடைப்பு எழுத்துகளாகத் தனித் தனியாகச் செதுக்கி வைத்துள்ள அட்டையைத் தொட்டுப் பார்க்கச் செய்து, அதே சமயம் விரல் மூலம் அந்த எழுத்தைத் தெரிவித்து திரும்பத் திரும்ப அவ்விரண்டின் மூலம் அதன் வடிவத்தை உணரும்படி செய்தார்.
ஹெலன் கெல்லரின் உள்ளங்கையின் அருகே தனது வாயை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரித்து, உச்சரித்த வார்த்தை எது என்பதை விரல்மொழி மூலம் உணர்வித்து, அதைத் திரும்பத் திரும்பச் செய்து, ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும்போதும் உள்ளங்கையில் ஏற்படும் ஒலி அதிர்வுகள் எவ்வாறு உணர்வைத் தருகின்றன என்பதையும் உணரச் செய்து அதன்மூலம் வார்த்தைகளை அடையாளம் தெரிந்துகொள்ள வைத்தார். நாள்தோறும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து இவ்வாறு ஆசிரியை ஸல்லிவன் கற்றுத் தந்துகொண்டே இருந்தார்.
ஹெலன் கெல்லரும் தனது கைகளில், தனது தங்கையின் உள்ளங்கையில் வார்த்தைகளை உச்சரிக்கப் பழகிக் கொண்டிருந்தார். இதைத் தவிர தொடுதல் உணர்வு மூலம் ஏராளமான சொற்களை ஸல்லிவன் கற்றுத் தந்தார். மொட்டு, மலர் போன்றவற்றின் வேறுபாடுகளையும் ஹெலன் கெல்லரைத் தொடச் செய்து விரல்மொழியின் மூலம் வார்த்தைகளைத் தெரிவித்து இயற்கையின் விந்தைகளை உணரச் செய்தார்.
ஹெலன் கெல்லருக்குப் பத்து வயதானபோது தனது ஆசிரியையுடன் பாஸ்டன் நகரத்திலுள்ள பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் கல்விச்சாலையில் சேர்ந்து "ப்ரெயில்’ முறை எழுத்துக்களைக் கற்று, அதன்மூலம் எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டார். அதே சமயத்தில் அதே பாஸ்டன் நகரிலுள்ள காதுகேளாதோர் பள்ளிக்கும் சென்று உதடுகளின் அசைவுகள் மூலம் ஒருவர் பேசுவதைப் புரிந்து கொள்ளும் (Lip Reading) பயிற்சியும் பெற்றார்.
ஆசிரியை ஸல்லிவன் வார்த்தைகளை உச்சரிக்கும்போது ஹெலன் கெல்லர் அவரது உதடுகளில், நாக்கில், குரல்வளையில் விரல்களை வைத்துக் கொண்டு அதே போன்று உச்சரிக்க முயன்றார்.
ஆனால் பேசும் வார்த்தைகள் அவ்வளவு தெளிவாக இல்லை. தினமும் அதிக நேரம் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டார்.
அடுத்து உயர்கல்வி பெற ராட்கிளிஃப் கல்லூரியில் ஹெலன் கெல்லர் சேர்ந்தார். அது ஊனக்குறை
பாடற்றவர்கள் படிக்கும் கல்லூரி. வகுப்பறையில் ஹெலன் கெல்லருடன் அவருடைய ஆசிரியை ஸல்லிவனும் இருப்பார். நடத்தப்படும் பாடங்களை விரல் மொழிகளின் மூலமும் கையில் சொல்வதன் மூலமும் ஹெலன் கெல்லருக்கு உணர்த்துவார். பாடங்களையெல்லாம் ப்ரெயில் முறையில் மாற்றி எழுதிக் கொடுத்துப் படிக்க உதவிகள் செய்தார்.
-தொடரும்
(சென்ற இதழில் வந்த இந்தத் தொடரில் சில ஆங்கில எழுத்துகள் கணிணிப் பிரச்னையால் தவறுதலாக அச்சாகியுள்ளன. வாசகர்கள் அவற்றைத் திருத்திப் படித்துக் கொள்ள வேண்டுகிறோம்.
"எடுத்துக்காட்டாக' என்று ஆரம்பிக்கும் பத்தியில் "அ' என்ற எழுத்து A என்று வந்திருக்க வேண்டும். "உ' என்ற எழுத்து E என்று வந்திருக்க வேண்டும். "ஐ' என்ற எழுத்து I என்று வந்திருக்க வேண்டும். "ஞ' என்ற எழுத்து O என்று வந்திருக்க வேண்டும். "ம' என்ற எழுத்து U என்று வந்திருக்க வேண்டும்.
அதே போல இறுதிப் பத்தியில் ஹெலன் கெல்லர் பொருளை உணர்ந்து முதல்முதலாகக் கற்றுக் கொண்ட வார்த்தை W-A-T-E-R என்று வந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.)