முகப்பு
சிறுவர்மணி

பறவையைத் தொடர்வோம்...

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சில இடங்களிலும் அதிகமாகப் பார்க்கலாம்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:42 AM
பகிர்:

தீக்காக்கை

தீக்காக்கைகளை இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் பார்க்கலாம்.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சில இடங்களிலும் அதிகமாகப் பார்க்கலாம்.
மிகவும் வண்ணமயமான பறவை. தலை முற்றிலும் கருப்பு அல்லது கருநீலத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதியில் வெண்மை நிறம் நீண்ட பட்டை போலக் காணப்படும். அதற்கடுத்தாற்போல உள்ள சிறகுப்பகுதி இரத்தச் சிவப்பு நிறத்திலும் உடம்பின் மேல்பகுதி சிறகுகள் சாக்லேட் பழுப்பு நிறத்திலும் இருக்கும். (இந்தச் சிவப்பு நிறத்துக்காகத்தான் தீக்காக்கை என்ற பெயர் வந்தது) வால் பகுதியில் 12 சிறகுகள் உள்ளன. இந்தப் பன்னிரண்டு சிறகுகளும் வேறுவேறுவிதமான நிற அமைப்பைக் கொண்டிருக்கும்.
பெரும்பாலும் பூச்சிகளையே உணவாகக் கொள்ளும். மரப் பொந்துகளிலுள்ள பூச்சிகளைத் தலைகீழாகத் தொங்கி, அலகால் கொத்தித் தின்னும்.
மிக வேகமாகப் பறக்கக்கூடியவை என்றாலும், பெரும்பாலும் இவை பறப்பதில்லை.
காய்ந்துபோன மரக்கிளைகளையும் மக்கிப்போன மரக்கூழ்களையும் வைத்துக் கூடு கட்டும் பறவை.
ஒரு சமயத்தில் 2 முதல் 3 முட்டைகள் வரை இடும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளை அடைகாக்கும். 19 நாட்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். 5 முதல் 6 மாதங்கள் வரை பெற்றோர்களின் கவனிப்பில் குஞ்சுகள் வளரும். அதன்பிறகுதான் தனியாக இரைதேடச் செல்லும். அடிக்கடி குளத்து நீரில் குளிக்கும் பறவை.
இந்தியாவில் இந்தப் பறவை இப்போது அரிதாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
 

பருத்த அலகு மலர்கொத்தி
 

தேன் சாப்பிடுவதற்காக மலர்களைக் கொத்தும் பறவையினத்தைச் சேர்ந்தது இந்தப் பருத்த அலகு மலர்கொத்தி.
இதன் அலகு மிகவும் தடிப்பாக இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.
தெற்காசியா, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் அதிகம் காணப்படும்.
அளவில் மிகவும் சிறிய பறவை. 10 செ.மீ.நீளமே இருக்கும். சிறிய வாலையும் தடித்த சிறிய அலகையும் கொண்டிருக்கும். உடலின் மேல் பகுதி முழுவதும் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதி சற்றே அழுக்கான வெள்ளை நிறத்தில் இருக்கும். கண்ணைச் சுற்றிலும் சிவப்பாக ஒரு வளையம் இருக்கும்.
சிறிய பழங்களையும் பூவிலுள்ள தேனையும்
விரும்பிச் சாப்பிடும்.
இதன் கூடு பெரிய இலைகளை மடித்து வைத்தது போல இருக்கும்.
ஒரு சமயத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். 13 நாட்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.