மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!
1988-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில், அமெரிக்க பேஸ்பால் ஒலிம்பிக் குழுவில் பங்கு பெற்று மிகச் சிறந்த முறையில் பந்து வீசியவர்.
ஒலிம்பிக் வீரர் ஜிம் அப்போட்
உலகப் புகழ் பெற்ற பேஸ்பால் வீரர். சிறந்த வேகப் பந்து வீச்சாளர். தென் கொரியா நாட்டிலுள்ள சியோலில் 1988-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில், அமெரிக்க பேஸ்பால் ஒலிம்பிக் குழுவில் பங்கு பெற்று மிகச் சிறந்த முறையில் பந்து வீசியவர். ஜப்பானுக்கு எதிராகத் தனது குழுவை வெற்றி பெறச் செய்து தங்கப் பதக்கம் பெற காரணமாக இருந்தவர். பேஸ்பால் ஆட்டத்தில் சிறந்த அணியினரான கியூபா நாட்டினரை அமெரிக்க பேஸ்பால் குழு முதன்முறையாக வெல்வதற்குக் காரணமாக இருந்தவர்.
இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் ஜிம் அப்போட்.
ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாகப் பந்து வீசியும் விளையாடியும் ஃபீல்டிங் செய்தும் தனது அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தவர், தந்து கொண்டிருப்பவர். பலரும் இவரை வியந்து பாராட்டுவதற்குக் காரணம், இவர் ஒற்றைக் கையால் பேஸ்பால் ஆடும் வீரர் என்பதுதான்!
வலது கையில் விரல்கள் காணப்படவேண்டிய இடத்தில், தசை உருண்டையாக இருக்கும். இத்தகைய குறைபாட்டுடனேயே பிறந்த ஜிம் அப்போட்டால் வலது கையால் பந்துவீச முடியாது. பந்தைப் பிடிக்கவும் முடியாது. அப்படி இருக்கும்போது அவர் பேஸ்பால் விளையாட்டின் பந்து வீச்சாளராக எப்படி மாறினார் என்பதைப் பார்ப்போம்.
ஜிம் அப்போட் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரில் "ஃபிளிண்ட்' என்ற இடத்தில் 18.09.1967-இல் பிறந்தார். பிறக்கும்போதே கைவிரல்கள் இல்லாததைக் கண்டு அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்களே தவிர, அவரின் மீதான தங்களின் அன்பை, அக்கறையைக் குறைத்துக் கொள்ளவில்லை.
ஜிம் அப்போட் சிறுவயதிலேயே தன்னுடைய வலது கையில் செயற்கை உறுப்பைப் பொருத்திக் கொள்வதற்கு விரும்பவில்லை.
வலது கையால் செய்யவேண்டிய எல்லாக் காரியங்களையும் இடது கையால் செய்வதற்கு அப்போட்டுக்கு பயிற்சி கொடுத்தார்கள். இரண்டு கைகளில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே கையால் செய்யவேண்டியிருந்ததால், அந்தக் கைக்கு அதிக வலு கிடைக்க பயிற்சி அளித்தனர். இடது கையால் எழுதவும் பயிற்சி அளிக்கப்பட்டது. சாதாரணமான குழந்தைகளைப் போல, தங்கள் குழந்தை விருப்பப்பட்ட காரியங்களில் எல்லாம் ஈடுபட பெற்றோர் ஊக்குவித்தனர்.
ஜிம் அப்போட்டிற்கு ஐந்து வயதானபோது அவருக்கு பேஸ்பால் ஆடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. "ஒற்றைக் கையுடன் எப்படித் தங்கள் பிள்ளை ஆடுவான்?' என்று பெற்றோர் திகைத்தாலும் அவரது விருப்பப்படி ஒற்றைக் கையால் மட்டும் எப்படிப் பந்தைப் பிடிப்பது, எறிவது விளையாடுவது என்று பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்கள்.
மிக வேகமாகப் பந்தை எறியும் போது இடது கையில் மாட்டியிருக்கும் தோலுறையை வலது கைப் பாகத்திற்கு மாற்றி, பந்தை வேகமாக எறிந்துவிட்டு, மீண்டும் இடது கையில் பந்தைப் பிடிக்க கையுறையை மாட்டிக் கொள்வார். இது மின்னல் வேகத்தில் நடைபெறும்.
இந்தப் பயிற்சியை ஜிம் அப்போட் தினமும் பல மணி நேரங்கள் செய்துவந்தார். அதைப் போல வேகப்பந்து வீசும் பயிற்சியும் மேற்கொண்டார். சாதாரணமாக வலது கையால் பந்தை எறியும் வேகத்தில் இடது கையால் எறிய
முடியாது. அப்போட்டால் ஒருகையால்தான் பந்தை எறியமுடியும். அதனால் அவர் அந்தக் கையாலேயே பந்தை வேகவேகமாக தினமும் வீசி வீசிப் பயிற்சி செய்தார். தொடர் முயற்சியால் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
அப்போட் விளையாட ஆரம்பித்த காலகட்டங்களில் அவருடைய வேகப்பந்து வீசும் திறமை பலரையும் கவர்ந்தது. இடது கையினால் இவ்வளவு வேகமாகப் பந்தை வீச முடியுமா? என்று அனைவரும் வியந்தனர்.
பள்ளியில் படிக்கும்போது, கால் பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்திவந்த ஜிம் அப்போட், ஒரு காலகட்டத்தில் அவற்றைக் குறைத்துக் கொண்டு, தனது முழு கவனத்தையும் பேஸ்பால் விளையாடுவதில் செலுத்தினார்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது போட்டிகளில் பங்கு பெற்று, தான் படித்த கல்வி நிறுவனங்களுக்குப் பெருமை தேடித் தந்தார். பல இடங்களில் நடந்த போட்டிகளில் சிறந்த முறையில் பந்துகளை மிக வேகமாக வீசி, தனது குழு வெற்றிபெறக் காரணமாக இருந்தார்.
அப்போட்டின் பந்து வீச்சின் வேகம் மணிக்கு 80 மைல்கள் முதல் 94 மைல்கள் வரை என்று கணக்கிட்டுள்ளனர்.
1986-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் "மிகவும் தைரியசாலியான விளையாட்டு வீரர்' என்று ஜிம் அப்போட்டைத் தேர்வு செய்தனர். 1987-ஆம் ஆண்டு அமெரிக்க பேஸ்பால் சங்கத்தினர் "மிகச் சிறந்த தொழில்முறை அல்லாத பேஸ்பால் விளையாட்டு வீரர்' என்று தேர்வு செய்தனர். 1988-ஆம் ஆண்டில் "அகடமி ஆஃப் ஸ்போர்ட்ஸ்' என்ற அமைப்பினர் மிகுந்த தைரியசாலி என்னும் விருதுக்குத் தகுதியான வீரர் என்று தேர்வு செய்தனர்.
அவரது அசாத்தியமான ஆற்றலைப் பாராட்டாதவர்களே இல்லையெனக் கூறலாம். இன்னும் எண்ணற்ற விருதுகள் இவரை வந்து சேர்ந்தன.
எந்த இடத்தில் போட்டி நடந்தாலும் இதர ஆட்டக்காரர்களைவிட இவருக்கே ரசிகர்கள் அதிகம். ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இவரைப் பேசச் சொல்வார்கள். ரசிகர்களுக்குத் தன்னுடைய இடது கையாலேயே கையெழுத்துப் போட்டுத் தருவார்.
பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, ஊனமுற்றோருக்கு புத்துணர்வு ஏற்படும்படி உரையாற்றி வருகிறார். தற்போதும் தொடர்ந்து விளையாடியு வருகிறார்.
ஊனமுற்றோரின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார் ஜிம் அப்போட்.
-அடுத்த இதழில் உலக மகாக் கவிஞர் ஹோமர்
'