• மாற்றுத் திறனாளிகள்... • மகத்தான சாதனைகள்!
இவர் இங்கிலாந்து நாட்டை நெப்போலியனின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றியவர். சிறந்த கடற்படைத் தளபதி என்று போற்றப்பட்டவர்.
தளபதி லார்ட் நெல்சன்
இவர் இங்கிலாந்து நாட்டை நெப்போலியனின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றியவர். சிறந்த கடற்படைத் தளபதி என்று போற்றப்பட்டவர்.
புகழ்பெற்ற டிராஃபல்கர் கடற்படைப் போரில் புதிய புதிய வியூகங்களை வகுத்து நெப்போலியனைத் தோற்கடித்த போதிலும், அந்தப் போரில் வீரமரணம் அடைந்தார் தளபதி லார்ட் நெல்சன்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள், அவருடைய நினைவு தினமாக இங்கிலாந்தில் அனு
சரிக்கப்படுகிறது.
இவருடைய வீர வரலாறு பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவருடைய வீரமரணம்
நிகழ்ந்த கடைசிக் கட்ட நிகழ்வுகள் படிப்பவர்கள் நெஞ்சத்தை நெகிழச் செய்யும்.
இத்தகைய வரலாற்றுப் புகழ்பெற்ற லார்ட் நெல்சன், அந்த யுத்தத்துக்குத் தலைமையேற்று நடத்தியபோது அவருக்கு வலது கை கிடையாது. ஒரு கண்ணில் பார்வையும் கிடையாது என்பது மிகவும் வியப்புக்குரியது.
லார்ட் நெல்சன் இங்கிலாந்தில் 29-9-1758-இல் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் அவருடைய உடல்நலம் சீராக இல்லை. ஒன்பதாவது வயதில் தனது தாயை இழந்தார்.
தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் கடற்
படையில் சேர்ந்து, தமது இருபதாம் வயதிலேயே கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றார்.
இவர் படிப்படியாக உயர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. அதன் விளைவாக மன்னர் ஆட்சி வீழ்ந்து, குடியரசு ஆட்சி என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை நெப்போலியன் ஏற்றார்.
அதன் பிறகு பிரான்ஸ் நாடு பல ஐரோப்பிய நாடுகளுடன் சண்டையிட்டு அவற்றைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருந்தது.
பிரான்ஸ் நாட்டை மிகுந்த பலத்துடன் எதிர்த்த நாடு இங்கிலாந்துதான். அதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பலமுறை யுத்தங்கள் நடைபெற்றன.
இந்தப் போர்களில் ஒன்றில் நெல்சனின் வலது கண் தாக்கப்பட்டுப் பார்வை பறிபோயிற்று.
செயிண்ட் வின்சென்ட் என்ற இடத்தில் நடந்த போரின்போது அவர் தனது வலது கையையும் இழக்க நேரிட்டது. தனது உடம்பில் முக்கிய இரண்டு பாகங்களை இழந்தபோதும் நாட்டுக்காக உழைப்பதிலிருந்து பின்வாங்கவில்லை. தன் உடல்நலம் தேறியதும் மீண்டும் கப்பல் படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நைல் நதி யுத்தத்தின்போது பிரான்சின் கடற்படையை விரட்டியடித்தார். அதன் பின்னர் பல போர்களில் பங்கு கொண்டார்.
இறுதியாக அவர் பங்கு கொண்டதுதான் "டிராஃபல்கர் யுத்தம்.' பிரான்ஸ் படையை விரட்டியடித்துவிட்டுத் தன் தாய் நாட்டைக் காப்பாற்றி அந்தப் போரில் வீர
மரணம் அடைந்தார்.
அவர் மரணமடைந்த நாள் 21-10-1805.
இந்த நாள்தான் நெல்சனைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினமாக இங்கிலாந்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அவரது 200-வது நினைவு நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகள் பாராட்டப்பட்டன. அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
ஒரு கண்ணில் பார்வை இல்லாமலும் தனது வலது கை இல்லாமலும் அவர் காட்டிய வீரம், ஆற்றிய தேச சேவை, காட்டிய நாட்டுப்பற்று என்றென்றும் இங்கிலாந்து மக்களால் போற்றப்பட்டு வரும்.
உடல் உறுப்புகளின் இழப்பினால் ஏற்படும் குறைபாடுகள் மன உறுதியைப் பாதிக்காது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு மாவீரன் லார்ட் நெல்சனின் வாழ்க்கை.
-அடுத்த இதழில்
விமானி ரிக் ஆம்பெர்